search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறை விசாரணை"

    • கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர் கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • வனத்துறையினர் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் யானை தந்தம் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்றிரவு செட்டிகுளம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 2.3 கிலோ எடை கொண்ட யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த யானை தந்தத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த புதியவன் (வயது 32), நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர் கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது யானை தந்தம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் அவர் விற்பனைக்கு கொடுத்ததாகவும், இதை தூத்துக்குடியை சேர்ந்த இன்னொரு நபர் வாங்க வந்ததாகவும் தாங்கள் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்கள்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறையினர் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடித்தால் தான் யானை தந்தம் எங்கிருந்து கிடைத்தது? எப்படி வந்தது? என்ற விவரம் தெரிய வரும்.

    • வனத்துறையினர் சென்று பார்த்தபோது 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் விழுந்து இறந்துள்ளதை கண்டனர்.
    • மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டன. இதனால் வன விலங்குகள் கிராமத்துக்குள் நுழையும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் காப்பு காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அங்கிருந்து ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசியது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் விழுந்து இறந்துள்ளதை கண்டனர்.

    பின்னர் வனத்துறை சார்பில் மருத்துவக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    அப்போது குடல் புழு நோயால் ஈரல் முழுவதும் பாதிக்கப்பட்டு யானை இறந்தது தெரிய வந்தது. பின்னர் இறந்த யானையை அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக விட்டு சென்று விட்டனர்.

    • சணல் சாக்கில் 14 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 யானை தந்தங்கள் இருந்தன.
    • பீர் முகம்மது சில ஆண்டுகளாக நகைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

    கடையநல்லூர்:

    நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு நெல்லை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் வன உயிரின சரணாலய பகுதியில் யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து.

    இதையடுத்து மதுரை மண்டல தமிழ்நாடு வன உயிரினக்குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு, நெல்லை வன காவல்நிலைய வனச்சரக அலுவலர் லோக சுந்தரநாதன் தலைமையில் வனவர் சசிகுமார் மற்றும் குழுவினர், பணியாளர்கள் மற்றும் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனவர் அம்பலவாணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து சென்றனர்.

    கடையநல்லூர் வனச்சரகம் குறவன்பாறை செல்லும் வழியில் சந்தேகத்திற்கிடமாக காரில் நின்ற வடகரையை சேர்ந்த பீர் முகம்மது (வயது 52) என்பவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது காரை வனத்துறையினர் சோதனை செய்தனர். அதில் சணல் சாக்கில் 14 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 யானை தந்தங்கள் இருந்தன.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அதனை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரையும், யானை தந்தத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பீர் முகம்மதுவை பிடித்து மேல் விசாரணைக்காக கடையநல்லூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பீர் முகம்மது சில ஆண்டுகளாக நகைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கடையநல்லூர் சரகத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களிடம் தந்தம் இருப்பதை அறிந்த அவர், அந்த மக்களிடம் இருந்து விலைக்கு வாங்கி கூடுதல் லாபத்திற்கு விற்பதற்காக காரில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    அவர் யாரிடம் தந்தங்களை வாங்கினார்? யாரிடம் விற்பதற்காக தந்தங்களை பதுக்கி வைத்திருந்தார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து வனத்துறையினர் பீர் முகம்மதுவிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், திருக்குறுங்குடி வனசரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனத்துறை தனிப்படையினர் பரிவரிசூரியன் பீட், கரும்பாறை சரகம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சதீஷ்(வயது 42), ராகுல்(23) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 2 பேரிடமும் வனத்துறையினர் விசாரித்தனர். அதில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பழத்தில் மறைத்து வீசியது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 3 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அந்த கும்பலுக்கு நாட்டு வெடிகுண்டுகள் எப்படி கிடைத்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனசரகர் யோகேஷ்வரன் கூறுகையில், 'வன உயிரினங்களை வேட்டையாடுவது, கறிகளை விற்பனை செய்வது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனத்தில் தீ வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய கும்பல் குறித்து தகவல் கிடைத்தால் பொதுமக்கள் களக்காடு துணை இயக்குனர் அலுவலகத்திலோ, திருக்குறுங்குடி வனசரகர் அலுவலகத்திலோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என்றார்.

    • காரில் வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதில் அழிந்து வரும் அரியவகை உயிரினமான 2 நட்சத்திர ஆமைகள் இருந்தன.
    • சஜித் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் இருந்து காரில் சிலர் நட்சத்திர ஆமைகளை கடத்தி வருவதாக கேரள மாநில வன புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் பாலோடு சந்தவிளை அம்பல்லூர் பகுதியில் வனத்துறை நுண்ணறிவு பிரிவினர் மற்றும் சுள்ளி மானூர் வனத்துறை பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரில் 3 பேர் பயணம் செய்து வந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் சாவக்காடு பகுதியை சேர்ந்த சஜித்(வயது38), அவரது நண்பர் அருண்குமார்(33), சந்தோஷ்(40) என்பது தெரியவந்தது.

    அவர்களது காரில் வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதில் அழிந்து வரும் அரியவகை உயிரினமான 2 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அவற்றை அவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பாலோடு வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    பாதுகாக்கப்படும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அரியவகை உயிரினமான நட்சத்திர ஆமையை வீட்டில் வளர்த்தால் அதிக செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், அதனை ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

    இதனால் அவற்றை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. அந்த ஆமைகளை நெல்லையில் இருந்து கேரள மாநில அரசு பஸ்சில் கேரளாவுக்கு எடுத்து வந்து, பின்பு அங்கு காரில் கடத்திச்சென்றபோது வனத்துறையினரின் சோதனையில் சிக்கினர்.

    சஜித் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சஜித் என்பவர் தைக்காடு மின்வாரிய அலுவலகத்தில் டிரைவராகவும், சந்தோஷ் அதே அலவலகத்தில் லைன்மேனாகவும் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நட்சத்திர ஆமைகள் கடத்தலில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    • தனீசின் செல்போனை ஆய்வு செய்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்பேரில் வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் களக்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் ஒரு காரில் சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்து பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் வனத்துறையினரிடம் சிக்கியவர்கள் குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கல்குளத்தை சேர்ந்த தனீஸ்(வயது 27), கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சன்னி(59), களக்காடு அருகே கீழக்கருவேலங்குளம் கரையிருப்பை சேர்ந்த முத்துசாமி(43), ஆழ்வார்குறிச்சி தொண்டர் தெருவை சேர்ந்த முருகேசன்(45), கீழப்பத்தை பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ஹரி என்ற ஐயப்பன்(41), கேரளா மாநிலம் எர்ணா குளம் அருகே ஹைகாட்டு காராவை சேர்ந்த அர்சத்(55) என்பதும் தெரியவந்தது.

    மேலும் தனீஸ் என்பவர் தன்னிடம் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு இருப்பதாக சன்னி, அர்சத் ஆகியோரை களக்காட்டிற்கு வரவழைத்ததும், அவர் வைத்திருந்த மண்ணுளி பாம்பிற்கு ரூ.10 லட்சம் வரை பேரம் பேசியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தனீஸ், சன்னி, அர்சத், முத்துசாமி, முருகேசன், ஐயப்பன், அர்சத் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    மேலும் கீழக்கரு வேலங்குளத்தில் முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 6 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    முன்னதாக அந்த கும்பலிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், செல்போன், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதில் தனீசின் லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான மண்ணுளி பாம்புகளின் புகைப்படங்கள் இருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் தனீஷ் மற்றும் அர்சத் ஆகியோருக்கு வெளிமாநில கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தனீசின் செல்போனை ஆய்வு செய்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக களக்காடு புதுத்தெருவை சேர்ந்த அந்தோணி முத்து(41) உள்பட சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் மேலும் பல உண்மைகள் வெளி வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் வனப்பகுதி மற்றும் அந்தியூர் வன சரகத்துக்குட்பட்ட பர்கூர் வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது 103 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு வருகிறது. இதையொட்டி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படி வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையொட்டி யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க ஒரு சில பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களையொட்டி மின் வேலிகள் அமைத்துள்ளனர். அந்த மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது.

    ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 58). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த விவசாய தோட்டத்தில் யானைகள் வராமல் இருக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த ஒரு யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பலியானது. இதையடுத்து அவர் இறந்த யானையை வனத்துறையினருக்கு தெரியாமல் அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைத்து விட்டார்.

    இந்த நிலையில் பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பர்கூர் வன சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் அவர் மின்சாரம் தாக்கி பலியான யானையை புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து பணியாளர்கள் மூலம் வனத்துறையினர் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டினர். அப்போது அங்கு யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து யானையின் உடல் பாகங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

    இதையடுத்து வனத்துறையினர் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்று புதைத்தாக கூறி சடையப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி மாவட்ட கிளையில் அடைத்தனர்.

    • உலகிலேயே அந்தமானில் மட்டும் கிடைக்கக்கூடிய பவளப்பாறையின் விலை ஒரு கிராம் ரூ.2,500 ஆகும்.
    • பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சாம்சனை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை:

    கோவை வேடப்பட்டியைச் சேர்ந்தவர் சாம்சன் (வயது43). இவர் கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் பழைய நாணயங்கள் மற்றும் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் அரிய வகையான தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் ஒரு குழுவாக சென்று சாம்சன் கடையில் சோதனை செய்தனர் .

    இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட 4 பவளப்பாறைகள் மற்றும் பவள பாறைகளை கொண்டு செய்யப்பட்ட 2 மாலைகள் ஆகியவை அங்கு இருந்தது.

    இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் சாம்சனை மதுக்கரை வன அலுவலர் சந்தியாவிடம் ஒப்படைத்தனர். அவர் பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சாம்சனை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உலகிலேயே அந்தமானில் மட்டும் கிடைக்கக்கூடிய இந்த பவளப்பாறையின் விலை ஒரு கிராம் ரூ.2,500 ஆகும். இந்த பவளப்பாறை சாம்சனுக்கு எவ்வாறு கிடைத்தது, அவர் யாரிடம் வாங்கினார். இதற்கு முன்பு இதுபோன்று பவளப்பாறைகளை அவர் விற்பனை செய்து உள்ளாரா, எத்தனை ரூபாய்க்கு வாங்கி அவர் விற்றார், அவருடன் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×