என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக முப்பெரும் விழா"
- தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
- தி.மு.க. பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
சென்னை:
தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.
திமுக முப்பெரும் விழாவில் இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு நார்காலியில் AI மூலம் கலைஞர் அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றொரு நாற்காலியில் அமர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேஷ ஏற்பாட்டால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக அளித்து உற்சாகமாக வரவேற்றனர்.
- தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் திரண்டு வரவேற்றனர். புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக அளித்து உற்சாகமாக வரவேற்றனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவினாசி சாலை நீலாம்பூர் பகுதிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு உள்ள தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கிறார். அதன்பின்பு மாலை நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்பு இரவு 7.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.
- விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து உள்ளது.
- போலீசார் விழா நடைபெறும் மைதானத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் முத்துசாமி வரவேற்கிறார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவுக்காக கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இதில் பங்கேற்க வருபவர்கள் அமர வசதியாக இருக்கைகளும் போடப்பட்டு உள்ளன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வருவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து உள்ளது. அவர்கள் அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் போலீசார் விழா நடைபெறும் மைதானத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அவர் விழா நடைபெறும் இடத்துக்கு சென்று விழாவில் பங்கேற்கிறார். இதன் காரணமாக கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
- பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை:
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் போட்டியிட்ட 40 இடங்களிலும் இமாலய வெற்றியை பெற்றது.
இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா லினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகு திகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மாலை இந்த முப்பெரும் விழாவானது நடக்கிறது.
இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.
விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் கோவைக்கு வருகை தருகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை கோவைக்கு வருகிறார். அவர் முப்பெரும் விழா நடக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
அதனை தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடக்கும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று இரவு கோவையில் தங்கும் அவர் நாளை மாலை கொடிசியாவில் நடக்கும் முப்பெரும் விழாவிலும் கலந்து கொள்கிறார்.
முப்பெரும் விழாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன.
நாளை கோவையில் நடக்க உள்ள முப்பெரும் விழாவில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, ம.தி.மு.க சார்பில் கட்சியின் தலைமை செயலாளர் துரைவைகோ எம்.பி., உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இதே போல கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
முப்பெரும் விழாவையொட்டி விழா மைதானத்தில் 150 அடி நீளத்தில் 40 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்று மைதானம் முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதேபோல விழாவுக்கான மேடையில் அலங்காரங்களும், மின் அலங்காரம் செய்யும் பணியும் நடக்கிறது. விழா நடைபெறும் இடம் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
- பிரமாண்ட மேடையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒரு பகுதியிலும், 40 எம்.பிக்கள் ஒரு பகுதியிலும் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறது.
- விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தின் முகப்பில் இருந்து விழா நடைபெறுகிற இடத்தை சுற்றிலும் தி.மு.க. கொடிகள் கட்டும் பணியும் நடக்கிறது.
கோவை:
கோவை கொடிசியாவில் நாளை மறுநாள் (15-ந்தேதி) தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சிறப்பான வெற்றிக்கு கட்சியை வழி நடத்தி சென்ற முதலமைச்சருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடக்கிறது.
முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
விழாவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதனையொட்டி முப்பெரும் விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இரவு, பகலாக ஊழியர்கள் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மைதானத்தில் இதுவரை இல்லாத அளவாக விழா மேடையானது 40 அடி அகலத்தில், 150 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
மேடையின் முகப்பில் உதயசூரியன் சின்னம், தி.மு.க. கொடி, அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவம் பொறித்த படங்களும் இடம்பெற உள்ளதாக தெரிகிறது.
இதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த பிரமாண்ட மேடையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒரு பகுதியிலும், 40 எம்.பிக்கள் ஒரு பகுதியிலும் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறது.
மைதானம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, இரு பகுதியாக பிரிக்கப்பட்டு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
நடுவில் முக்கிய பிரமுகர்கள் நடந்து செல்லும் வகையில் தனிபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், தி.மு.க.வில் மாநில அளவில் கட்சி பொறுப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் முன்பகுதியில் அமரும் வகையில் தனித்தனி இருக்கைகளும் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதுதவிர விழா நடைபெறும் இடத்தில் தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவதால் மாவட்ட வாரியாக பிரித்து, அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவற்கு வசதியாக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதுதவிர விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தின் முகப்பில் இருந்து விழா நடைபெறுகிற இடத்தை சுற்றிலும் தி.மு.க. கொடிகள் கட்டும் பணியும் நடக்கிறது.
விழாவை தொண்டர்கள் கண்டு ரசிப்பதற்கு வசதியாக ஆங்காங்கே மிக பிரமாண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பணிகள் நடந்து வரும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நிலையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. விழா நடைபெறும் இடம் மற்றும் மாநகர எல்லைகள் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன்.
- கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முப்பெரும் விழா அழைப்பு மடல்.
செப்டம்பர் மாதத்தில்தானே முப்பெரும் விழா நடைபெறும் என்று தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் கேட்பது உங்களில் ஒருவனான எனக்கும் கேட்கிறது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தீரர்கள் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை நடத்தி, கழகம் காக்கும் பணியில் அயராது உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார் நம் உயிரனையத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, ஒரு முன்னோட்ட விழாவாக ஜூன் 15-ஆம் நாள் கோவை கொடீசியா அரங்கில் இந்த முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது.
இது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமான விழாவோ; அதன் தோழமைக் கட்சிகளுக்கான விழாவோ மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் விழா! அவர்கள் நமக்கு வழங்கியுள்ள மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா! மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு - ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பதை நமக்கு வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
அந்த வெற்றியையும், அத்தகைய வெற்றிப்பாதையில் பயணிக்க எந்நாளும் நம்மை இயக்குகின்ற ஆற்றலாக விளங்கும் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், 40/40 என்கிற மகத்தான வெற்றிக்கூட்டணிக்குத் தலைமையேற்கும் பொறுப்பேற்ற உங்களில் ஒருவனான எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என ஜூன் 8-ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஜூன் 15 அன்று கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவித்திருக்கிறார். கட்டளை கேட்டதும் பாய்கின்ற கணை போல, அறிவிப்பு வெளியானதுமே கழக நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் அவரது நினைவாகப் பயனுள்ள திட்டங்கள், அவரது பெயரிலான பயன்மிகு கட்டடங்கள் அமைக்கப்பட்டாலும் அவரது உடன்பிறப்புகளாகிய நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய காணிக்கை என்பது, நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்தேன். கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் ஒவ்வொரு நாளும் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளைக் கவனித்து வந்தேன். உடன்பிறப்புகளாம் உங்களுடைய பணிகள் என் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இருந்தன. எங்கேனும் சில இடங்களில் சற்று சுணக்கமோ சோர்வோ தெரிந்தாலும் உடனடியாக அதனைக் கவனிக்கின்ற இடத்தில் நானும், விரைவாக அதனை சரிசெய்து வெற்றியை உறுதிசெய்கிற பணியில் நீங்களும் இருந்ததால்தான் இந்த மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதனை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கியிருக்கிறோம்.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அண்ணா அறிவாலயத்தில் ஊடகத்தினருடனான சந்திப்பின்போது அவர்கள் என்னிடம், "நாற்பதுக்கு நாற்பது என்ற முழுமையான வெற்றியை நாங்களே எதிர்பார்க்கவில்லை" என்றனர். "நான் எதிர்பார்த்திருந்தேன்" என்று அவர்களிடம் தெரிவித்தேன். உறுதியாக நான் எதிர்பார்த்ததற்குக் காரணம், கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் நிச்சயம் இந்த முழுமையான வெற்றியைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையினால்தான். அதற்கேற்ற உழைப்பை வழங்கிய உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்குமான பாராட்டை உங்களில் ஒருவன் என்ற முறையில் நான் ஏற்றுக்கொள்ளும் விழாதான் கோவை முப்பெரும்விழா. இது கழக உடன்பிறப்புகளின் உழைப்பைப் பாராட்டுகின்ற விழா.
பாராட்டுக்குரியவர்கள் உடன்பிறப்புகள். நன்றிக்குரியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். ஓர் இலட்சியக் கூட்டணியின் முழுமையான வெற்றிக்குத் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களும் அதன் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆற்றிய பணிகள் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
வெற்றி பெற்ற கழகத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே செயலாற்றிவரும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பேசும்போது, உடன்பிறப்புகளாம் உங்களின் அயராத உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அந்தக் கையொலி என்பது இனி நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் கழகக் குரல்களுக்கான அடிநாதம்!
'மக்களிடம் செல்' என்ற பேரறிஞர் அண்ணாவின் சொல்லுக்கேற்ப கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினருடன் இணைந்து மக்களைச் சந்தித்து, கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய அரசினால் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதையும், கடந்த மூன்றாண்டுகளில் திராவிட மாடல் அரசினால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயன் தரும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்து இந்த முழுமையான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்தி, மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் முழங்கிடவும், அவரவர் தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கவனித்து நிறைவேற்றிடவும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறேன்.
ஒன்றிய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழ்நாட்டின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்.
1957 பொதுத் தேர்தலில் பங்கேற்று மக்களவையில் இரண்டே இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம்தான், இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில், அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களிடமிருந்து உறுதிமொழியைப் பெற்றுத் தந்தது. தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத் தந்த அந்த உறுதிமொழிதான் இன்றளவிலும் இந்தி ஆதிக்கத்திலிருந்து பெரும்பான்மையான மாநிலங்களைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது.
1962-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில், 'நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்' என்று பேரறிஞர் அண்ணாவின் முழக்கம்தான், மாநில உரிமைகளுக்கான வலிமையான முதல் குரல். அந்த ஒற்றைக் குரலின் தொடர்ச்சியாகத்தான் இன்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்தும் உரிமைக் குரல்கள் ஒலிக்கின்றன. இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வலிமையை உணர்ந்திருக்கும் இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசை வழியைத் தீர்மானிக்கும்.
தமிழ்நாட்டில் நாம் பெற்றுள்ள வெற்றி, இந்தியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கையை அளித்திருப்பதால், கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது. மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என்பது போல நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல் இலாபம் தேடிய கட்சிகளின் உண்மையான நிலை என்ன என்பதைக் கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் அளித்துள்ள வெற்றியின் வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.
கழக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், வெற்றி விழாக்கள் எதுவாக இருந்தாலும் அது வெறும் கூடிக் கலைவதற்கான நிகழ்வல்ல. ஒவ்வொரு நிகழ்வும் உடன்பிறப்புகளுக்கான பயிற்சி அரங்கம். அடுத்த களத்திற்கான ஆயத்தப் பணி. கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அங்கும் நம் தொடர் வெற்றியினை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ்!
மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களைத் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும். அவை சரியான முறையில் மக்களிடம் சென்று சேர்வதையும் அதன் நீண்டகாலப் பயன்களையும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும்.
நாற்பதுக்கு நாற்பது என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்! காணப் போகும் களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லட்டும்!! கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிடுக!!!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
- அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் (ஜூன் 8-ந்தேதி) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த சீர்மிகு விழா தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு கழகத்தை வழிநடத்திச் சென்ற முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 14-ந்தேதி பதிலாக ஜூன் 15-ந் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்" நடைபெறுகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
அனைத்துக் கழக மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. முப்பெரும் விழாவில் 17-ந்தேதி காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
- முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
வேலூர்:
வேலூரில் வருகிற 17-ந்தேதி தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த பகுதியில் தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்பதற்காக 16-ந்தேதி மாலை ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காட்பாடி வருகிறார்.
அவருக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
17-ந் தேதி காலை 10.15 மணிக்கு வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு செல்கிறார்.
அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
இதற்காக இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு தி.மு.க கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
இதனையடுத்து அங்கிருந்து அவர் மீண்டும் வேலூருக்கு வந்து ஓய்வு எடுக்கிறார்.
தி.மு.க. முப்பெரும் விழாவில் 17-ந்தேதி காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். வேலூரில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா-தி.மு.க. பவள விழா வருகிற 17-ந்தேதி வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, முன்னாள் அமைச்சர் மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு ந.ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகளில் நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன.
- தி.மு.க. உதயமான தினம் செப்டம்பர் 17-ந்தேதி வருகிறது.
சென்னை:
கருணாநிதி, தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சர் அரியணையை அலங்கரித்தவர். தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர். கலை, இலக்கியம், அரசியலில் கோலோச்சியவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 94-வது வயதில் மரணம் அடைந்தார். கருணாநிதியின் உடல் அவரது ஆசைப்படியே சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் கருணாநிதியின் நினைவிடம் சிறப்பாக பராமரிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசும்போது, 'கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும். கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் கட்டும் பொறுப்பு பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கடல்சார் ஒழுங்குமுறை ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற துறைகளின் உரிய அனுமதியோடு நினைவிட கட்டுமான பணி தொடங்கியது. கருணாநிதி கலை, இலக்கியம், அரசியல் ஆகிய 3 துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக 3 வளைவுகளில் பிரமாண்ட 'உதயசூரியன்' வடிவமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
திருவாரூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட கலைஞர் கோட்டம் போன்று நினைவிட அருங்காட்சியகத்திலும் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள், அவரது பொன்மொழிகள் தொகுப்பு போன்ற தனித்தனி அரங்குகள் அமைய உள்ளன. அன்பு உடன்பிறப்பே! என்ற கருணாநிதியின் கர்ஜனை குரல் தொடர்ந்து ஒலிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகளில் நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து லேசர் ஒளியில் சூரியன் உதிப்பது போன்ற தத்ரூப காட்சி அமைப்புகளும் இடம் பெறும் என்று தெரிகிறது.
மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டுமான பணிகளை திறம்பட மேற்கொண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மெச்சத் தகுந்த பாராட்டை பெற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுதான் கருணாநிதி நினைவிட அருங்காட்சியக கட்டுமான பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
கருணாநிதி நினைவிட அருங்காட்சியக கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது என்று அவர் கூறி இருக்கிறார். எனவே கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் விரைவில் திறப்பு விழா காணும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பணிகளும் இரவு-பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தி.மு.க. உதயமான தினம் செப்டம்பர் 17-ந்தேதி வருகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15-ந்தேதி), கருணாநிதி பிறந்தநாள் (ஜூன் 3) மற்றும் தி.மு.க. ஆண்டு விழா (செப்டம்பர் 17) ஆகிய 3 விழாக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ந்தேதி முப்பெரும் விழாவாக தி.மு.க. கொண்டாடி வருகிறது.
எனவே முப்பெரும் விழாவையொட்டி கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் செப்டம்பர் 17-ந்தேதி அன்று திறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் பேரறிஞர் அண்ணா நினைவிடத்துக்கு பார்வையாளர்கள் அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அத்துமீறி யாரும் உள்ளே நுழைந்துவிடாத வகையில் அண்ணா நினைவிட முகப்பு அடைக்கப்பட்டுள்ளது.
அங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகளை படம் எடுப்பதற்கு பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதியும் மறுக்கப்படுகிறது.
முதலில் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தை திறந்து வைத்துவிட்டு அதன்பின்னர், அவரது நினைவிட பின்புறம் உள்ள கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து ரூ.81 கோடியில் 134 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் உரிய அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
- மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்வதாக துரைமுருகன் பேச்சு
- திராவிட ஆட்சியின் தத்துவத்தை முதல்வர் அறிமுகம் செய்திருக்கிறார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-
ஆட்சியையும் கட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகிறார். அதனால்தான் அவர் நடத்தும் ஆட்சியைக் கண்டு அகில இந்தியாவும் புகழ்கிறது.
தளபதி அவர்கள், கட்சி தலைவராகி முதலமைச்சர் ஆனவுடன், இன்றும் அதிகமாக அவரது கவனம் வடநாட்டில் செலுத்தப்படாத காலத்திலேயே இன்றைக்கு இருக்கும் முதல் அமைச்சர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கக்கூடியவர் தளபதி என்று அகில இந்தியாவே ஒப்புக்கொண்டுள்ளது.
நமக்கும் பாஜகவுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் உண்டு. ஆனால், பிரதமர் மோடி அவர்கள், தளபதியை பார்க்கும்போதெல்லாம் சொல்வார், 'கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின், உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நீ வந்தால் என் வீட்டில் தங்கு. உன்னை ஏற்றுக்கொள்கிறேன்' என்று சொல்லும் அளவிற்கு இவருடைய கண்ணியம், பண்பாடு தலைதூக்கி நிற்கிறது.
யாராலும் இந்த ஆட்சியை பற்றி குறை கூற முடியவில்லை. மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்கின்றன. நமது முதலமைச்சர் அவர்கள் ஆட்சியையும் செம்மையாக நடத்துகிறார், கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
இனிமேல் இது திராவிட மாடல் ஆட்சி என்று கூறியிருக்கிறார். இந்த ஆட்சியின் தத்துவத்தை அறிமுகம் செய்திருக்கிறார். எனவே, இன்னும் 60 ஆண்டு காலத்துக்கு இந்த இயக்கத்துக்கு பயமில்லை, ஆட்சிக்கும் பயமில்லை என்ற அளவுக்கு நம்மை வழிநடத்த தளபதி இருக்கிறார்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்