என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபத்திருவிழா"

    • அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு தகவல்
    • தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது

    திருவண்ணாமலை:

    3 ஆண்டுகளில் திருவண்ணாமலையை திருமலை போன்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

    கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

    இதில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் ஜோதி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசியதாவது:-

    தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலை நகர வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவிழா அன்று வியாபாரிகள் தேவையில்லாமல் கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்த வேண்டாம். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும் இதற்கு வியாபாரிகள் தரப்பிலும் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கோவில் உள்ளே வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் எந்தவித இடையூறுகள் இன்றியும் உள்ளே செல்லவும், அமர வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவில் உபயதாரர்கள் உள்ளே வரும்போது நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதை போலீசார் முறைப்படுத்த வேண்டும். திருவண்ணாமலைக்கு சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தர உள்ளதால் மருத்துவக் குழுக்கள் போதுமானதாக இருக்காது. எனவே 100 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், போலீசார் தங்களுக்கு வேண்டிய நபர்களை கோவிலுக்குள் அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். அனுமதி அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

    தேவை இல்லாமல் கோவிலுக்குள் அதிகப்படியான போலீசார் பணியில் அமர்த்த வேண்டாம். ஒவ்வொரு தேருக்கும் ஒரு சிறப்பு அதிகாரி பணியில் அமர்த்தப்பட வேண்டும். கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    திருவண்ணாமலையை திருப்பதியை போன்று ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    திருவண்ணாமலையை திருமலை போன்று மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மாட வீதியில் காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. தீபத்திருவிழா முடிந்ததும் அதற்கான பணிகள் நடைபெறும்.

    திருவண்ணாமலைக்கு பல்வேறு வசதிகள் கொண்டுவர எனது துறை சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். தேர்கள் சரியான முறையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே பரிசோதனை செய்திருக்க வேண்டும். பராசக்தி அம்மன் தேர் மேற்பகுதியில் பழுது உள்ளதாக புகார் வந்துள்ளது.

    அதை மீண்டும் சரி செய்ய வேண்டும். தீபத் திருவிழாவின் போது வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், தி.மு.க.நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்கு 1லட்சத்து 8 தீபத்திருவிழா நடைபெறுகிறது.
    • புண்ணியம் வாய்ந்த தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள், நல்லெண்ணெய், திரி ஆகியவற்றை கோவில் அலுவலகத்தில் வழங்கலாம்.

    அவினாசி : 

    அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்கு 1லட்சத்து 8 தீபத்திருவிழா நடைபெறுகிறது. இதற்காக கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் இன்று துவங்கி நடக்கிறது.

    இது குறித்து அவிநாசி ஆன்மிக நண்பர்கள் குழு மற்றும் சேக்கிழார் புனிதர் பேரவை நிர்வாகிகள் கூறியதாவது:- இந்து அறநிலையத்துறை ஒத்துழைப்புடன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில்1 லட்சத்து 8 தீபத்திருவிழாவை இரண்டாவது முறையாக நடத்துகிறோம். கோவிலிலுள்ள சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவ மண்டபம், கனகசபை மற்றும் பிரகாரங்கள், கோவில் தீப ஸ்தம்பம் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றப்படும்.

    இதற்காக 1 லட்சத்து8 அகல் விளக்குகள், விருத்தாச்சலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணியம் வாய்ந்த தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள், நல்லெண்ணெய், திரி ஆகியவற்றை கோவில் அலுவலகத்தில் வழங்கலாம்.விளக்குகளை வைத்து எண்ணெய் ஊற்றி தீபமேற்ற விருப்பமுள்ள சிவனடியார்கள், பக்தர்கள் வருகிற 7-ந் தேதி காலை, 10 மணிக்கு அவிநாசி கோவிலுக்கு வர வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • இன்று மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முருகப்பெருமானுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது திரவிய பொடி, மாவு பொடி, திருநீறு, மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையினர், தொல்லியல் துறையினர், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (7-ந்தேதி) மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு கோவிலை வலம் வந்து ஏழு மணி அளவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

    பிறகு சுடர் (சாம்பல்) எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி முழு ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    10-ம் நாள் விழாவான நவம்பர் மாதம் 26-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் மகா தீபத்தன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது.

    முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சம்பந்த விநாயகர் சன்னதில் இருந்து பந்தக்கால் கோவிலின் ராஜகோபுரம் முன்பு கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தேரடி வீதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் மற்றும் பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்ல மங்கள வாத்தியம் முழங்க ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள், சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
    • முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி, சாமி வீதி உலா செல்லும் வாகனங்கள் சீரமைக்கும் பணி, வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி, பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. திருப்பூரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்வது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

    • கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை அமர வைத்து நேர்த்திக்கடன்.
    • மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதிஉலா.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்தனர். இரவு 10 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க சாமி வீதிஉலா நடந்தது.

    அப்போது மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சின்ன அதிகார நந்தி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 10 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகர் தங்க சூரியபிரபை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னர் தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் பக்தர்கள் சிலர் கரும்பில் தொட்டில் அமைத்து தங்கள் குழந்தையை அதில் அமர வைத்து நேர்த்தி கடனாக மாட வீதியில் வலம் வந்தனர். இதைபோல் 7-ம் விழாவான தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

    தொடர்ந்து இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமி வீதி உலாவின் போது போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இன்றுகாலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலா.
    • தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. 6-ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலாவும் நடந்தது. இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி தேர் மற்றும் வெள்ளி இந்திர விமானங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 7-ம் நாள் உற்சவமான தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுசு லக்கினத்தில் முழு முதல் கடவுளான விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.

    விநாயகர் தேர் மாட வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்த பின் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் மாட வீதிகளில் வலம் வரும். நண்பகலில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடக்கிறது.

    தேர் மாடவீதிகளில் அசைந்தாடி வருவதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெரிய தேர் நிலைக்கு வந்த பின்னர் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் அம்மன் தேர் மாட வீதிகளில் வலம் வரும். அம்மன் தேர் உடன் சண்டிகேஸ்வரர் தேரும் மாட வீதிகளில் வலம் வரும்.

    இன்றும், நாளையும் திருவண்ணாமலையில் தேரோட்டம் நடைபெறுவதால் தேரோட்டத்தை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை சார்பில் தேர் திருவிழாவிற்காக அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூய்மையாக காட்சி தருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா
    • முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும்.

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகை திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருகார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது குறித்து பார்ப்போம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளை செய்தவர்களில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அவருடைய வேண்டுகோளின்படி அவருக்கு மகனாக இருந்து, தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாசலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

    வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, இறைவனே அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாசலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி, கோவிலை சுற்றி வலம் வந்து வழிபடுவார்கள்.

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மலைப்பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலிதீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    கிரிவலம் செல்வதற்கு சரியான பொழுது இரவு நேரம்தான். பவுர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். இரவு நெருங்கியதும் நிலவொளி பிரகாசிக்க தொடங்கும் வேளையில் கிரிவலத்தை தொடங்கலாம். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார்.

    அந்த நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். நிலவு ஒளியால் மனத்தெளிவு உண்டாகும். கிரிவலம் வருபவர்கள் இறை நாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வலம் வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

    `அருணன்' என்றால் `சூரியன்' என்று பொருள். `அசலம்' என்றால் `கிரி' அல்லது `மலை' என்று பொருள். சூரியனை போன்ற ஒளி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி அளிப்பதால் இந்த மலை `அருணா சலம்' என்று அழைக்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் திருவண்ணா மலையை சுற்றி எட்டு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களின் சன்னிதியில் வழிபாடு செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகாதீபம் ஏற்றப்படும். அதற்கு ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படும்.

    முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும். அதில் இருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கை கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். அதன் பிறகு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் வரை எரிந்து கொண்டே இருக்கும்.

    ஆலய அம்சங்கள்

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 தனி சன்னிதி கள், 22 விநாயகர் சிலைகள், 42 செப்பு சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலைக்கு நவ துவார பதி என்ற பெயரும் உண்டு. அதற்கு 9 நுழைவுவாசல்களை கொண்ட நகரம்' என்று பொருள்.

    • வருகிற 26-ந்தேதி நடக்கிறது
    • இதில் சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கு 36 அடி உயரம்

    கன்னியாகுமரி :

    கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி (ஞா யிற்றுக்கிழமை) கோலா கலமாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி வருகிற 26-ந்தேதி இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கு 36 அடி உயரத்திலும், பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலுக்கு 30 அடி உயரத்திலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 25 அடி உயரத்திலும், களியல் மகாதேவர் கோ வில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் மற்றும் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களுக்கு தலா 23 அடி உயரத்திலும் பனை மரங்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பனந்தோப்புகளில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும்.

    அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். மறுநாள் 26-ந்தேதி திருக்கார்த்திகை அன்று இரவு கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம் ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். அதன் பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனை ஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விடும். அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளி சென்று தங்களது வீடுகளிலோ, தொழில் நிறுவனங்களிலோ அல்லது விளை நிலங்களிலோ போடுவது வழக்கம். இவ்வாறாக இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். சொக்கப் பனை கொளுத்தும் இடங்களில் தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்ட உள்ளனர். இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில் களின் அறங்காவலர் குழு தலை வர் பிரபா ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • நாளை முதல் 27-ந் தேதி வரை கும்பகோணம் கோட்டம் சார்பில் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அண்ணா மலையார் தகோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 26-ந் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

    இதேபோல் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.

    இந்த விழாக்களை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாளை முதல் (சனிக்கிழமை) 27-ந் தேதி (திங்கட்கிழமை) வரை கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர், காரைக்குடி, இராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக மினிபஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் மற்றும் பக்தர்கள் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
    • 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி கோவில் மலைமேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் உள்ள தாமிரக் கொப்பரையில் 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு திருவண்ணாமலையிலிருந்து வந்த சிறப்பு குழுவினர் மூலம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்காக மாலை 6 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமை யில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    தேரோட்டம் மற்றும் கார்த்திகை மகாதீபம் ஏற்று வதை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.

    • அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.
    • ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இறைவனால் படைக்கப்பட்ட ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் பார்வதி தேவிக்கு தனது இடப்பாகத்தை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இங்கு மலையே இறைவனாக காட்சியளிப்பது சிறப்பம்சமா கும்.

    ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது, அவர்களின் அகங்காரத்தை அடக்கும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டறிகிறார்களோ அவர்களே பெரியவர் என்றார். இதனால் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சிவனின் அடியை காண முயன்று தோற்றுப்போனார்.

    அதன்பிறகு பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண முயன்றார். அப்போது சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து வந்த தாழம்பூவை சாட்சியாக கொண்டு சிவன்முடியை கண்டதாக பிரம்மா பொய் கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் அப்போது பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அவர்களின் ஆணவத்தை அழித்தார்.

    இதன் காரணமாகவே பொய்யுரைத்த பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இல்லாமல் போனது. பொய் சாட்சி கூறிய தாழம்பூவும் சிவபெருமாள் பூஜையில் வைக்கும் தகுதியை இழந்தது என்பது ஐதீகம்.

    ×