search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறி தொழிலாளர்கள்"

    • கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும்.
    • 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும். பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே கடந்த 4-ந் தேதி முதற்கட்ட போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளதால் போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    6 மாதங்களுக்கு முன்பு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால் கடந்தாண்டு வாங்கிய போனசை விட இந்தாண்டு தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் போன்ஸ் கிடைக்கும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கம் அடைந்து தொழில் தொய்வு நிலையில் உள்ளதால் போனஸ் சதவீதம் உயர்த்தினால் மேலும் உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும். கடந்தாண்டு வழங்கியது போல 9.50 சதவீதம் போனஸ் இந்தாண்டும் வழங்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    2022-2023-ம் ஆண்டு மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது சம்மந்தமான பேச்சுவார்த்தையானது மங்கலம் ஊராட்சி-சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது.இந்த ஆண்டு போனஸ் பேச்சுவார்த்தையானது மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது

    இந்த போனஸ் பேச்சுவார்த்தையின் இறுதியாக 2022-2023-ம் ஆண்டு (இந்த ஆண்டு) மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.16 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் மங்கலம் பகுதி விசைத்தறி உரிமையாளர் சங்கம் தரப்பில் மங்கலம் பகுதி விசைத்தறி சங்கத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால், மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, துணைச்செயலாளர் விஸ்வநாத் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி சங்க நிர்வாகிகளான வெங்கடாசலம்,முத்துகுமார், மனோகர் ஆகியோரும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்கம் தரப்பில் விசைத்தறி சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசாமி, அண்ணா தொழிற்சங்க திருப்பூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சுப்பிரமணி , ஐ.என்.டி.யு.சி.திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.
    • விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கு இந்த ஆண்டு 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    அவிநாசி ஒன்றிய பகுதியில் விசைத்தறி கூலித் துணி உற்பத்தியாளா் சங்க பிரதிநிதிகள், விசைத்தறி தொழிற்சங்க நிா்வாகிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.இதில் தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.

    இதில் உற்பத்தியாளா்கள் சாா்பில் முத்துசாமி, செந்தில், சம்பத்குமாா், தொழிற்சங்கங்கள் சாா்பில் சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சம்மேளன மாநிலத் தலைவா் முத்துசாமி, சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் 10 சதவீத கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் பாடாப் பிள்ளையார் கோவில் முன்பு தென்காசி மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் 10 சதவீத கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு தென்காசி மாவட்ட விசைத்தறி சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ், சி.ஐ.டி.யு. தென்காசி மாவட்ட தலைவர் அயூப் கான், விசைத்தறி சங்கத் தலைவர் ரத்தினவேல், செயலாளர் லட்சுமி, பொருளாளர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள்.

    இதனைத்தொடர்ந்து, சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், அவ்வாறு கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த தவறினால் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெறும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தை சார்ந்த சக்திவேல், சுப்பிரமணியன், பிலிப், முருகன் உள்ளிட்ட ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விசைத்தறி சம்மேளன துணைத் தலைவர் சோம சுந்தரம் நன்றி கூறினார்.

    • வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.
    • உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் தொழிற்சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் 400-க்கு மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கூலி உயர்வு மற்றும் போனஸ், விடுப்பு சம்பளம் வழங்க கோரி போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்தது.

    கடந்த 2 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தம் போடப்படாமல் விசைத்தறி உரிமையாளர்கள் காலம் தாழ்த்தி வருவதாக புகார் கூறி கடந்த 30-ந் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

    நேற்று முன்தினம் கஞ்சித் தொட்டி திறந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு விருதுநகர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மின்னல் கொடி, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமை தாங்கினர்.

    அப்போது உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் தொழிற்சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

    தொழிற்சங்கத்தினர் அதிகாரியிடம் கூறுகையில், எங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமடையும் என்றனர்.

    இந்த நிலையில் 11-வது நாளான இன்று செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பல்வேறு கட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்து விட்டது

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி (சம்பளம்) வழங்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் 2021-23 ஆண்டுக்கு கூலி ஒப்பந்தம் செய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன்வராத காரணத்தினால் விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுக்கு 75 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்து விட்டது. இதைத்தொடர்ந்து தற்போது போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஏ.ஜ.டி.யு.சி. வட்டார தலைவர்கள் அய்யனார், ராசு தலைமையில் செட்டியார்பட்டி கிராமநிர்வாக அலுவலகம் முன்பு இ்ன்று கஞ்சி தொட்டி திறந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வாழ்வாதார பிரச்சினை என்பதால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விசைத்தறி தொழிலாளர்கள் வேண்டு கோள்விடுத்துள்ளனர்.

    • விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.
    • இன்று 4-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி, டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி ஆகிய பகுதி களைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு டி.சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை அறிவித்து விசைத்தறிகளை இயக்கா மல் உள்ளனர். இதன் காரணமாக தினந்தோறும் ரூ.20 லட்சம் மதிப்பிலான காட்டன் ரக சேலைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஆண்டி பட்டி வட்டாட்சியர் சுந்த ர்லால், டி.எஸ்.பி. ராம லிங்கம் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே தங்களது போராட்டம் தொடரும் என விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்து இன்று 4-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    பேச்சுவார்த்தையில் பாரதிய ஜனதா தொழிற்சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், சரவணன், சுப்பிரமணி, ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்கம் சேட், அருணாசலம், அருண்மதி கணேசன், மணி, காளை, தொ.மு.ச. செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. சென்றாய பெருமாள், சி.ஐ.டி.யு. ராமர், ஆண்டிபட்டி வருவாய் ஆய்வாளர் கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஷியாம் சுந்தர், நாகராஜ், அன்பழகன் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சீரற்ற பஞ்சு விலை காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கொள்முதலை இழந்து கொண்டிருக்கின்றனர்.
    • துணிக்கான விலை நிர்ணயம் செய்ய முடியாததால், கூலி பிரச்சினை நீடிக்கிறது.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் சீரற்ற பஞ்சு விலை உயர்வு காரணமாக இன்று முதல் 2 வார காலத்திற்கு பாவு நூல் விநியோகத்தை நிறுத்தி வைக்க உள்ளதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

    அதன்படி இன்று முதல் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு பாவு, நூல் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் விசைத்தறி தொழிலை சார்ந்த 5 லட்சம் தொழிலாளர்கள் 2வாரம் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தினசரி ரூ.100 கோடி காடாத்துணி உற்பத்தி என 2 வாரத்திற்கு ரூ.1400 கோடி துணி உற்பத்தி இழப்பு ஏற்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறுகையில்,

    சீரற்ற பஞ்சு விலை காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கொள்முதலை இழந்து கொண்டிருக்கின்றனர். நிலையற்ற நூல் விலை காரணமாக துணியின் விலை நிர்ணயம் செய்ய முடியாத காரணத்தினால் துணி வர்த்தகம் நடைபெறாமல் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணி தேக்கமடைந்துள்ளது.

    மேலும் தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் மற்றும் போட்டி சந்தை மாநிலங்களை விட உயர்வாக உள்ள காரணத்தினால் துணி விலை அடக்கம் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த துணிகளை வாங்க வர்த்தகர்கள் யாரும் முன் வரவில்லை. எனவே இன்று முதல் 2 வார காலத்துக்கு முற்றிலுமாக விசைத்தறியாளர்களுக்கு பாவு, நூல் வினியோகத்தை நிறுத்தி ஜவுளி உற்பத்தியை குறைப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.

    விசைத்தறியாளர்கள் சிலர் கூறுகையில், பஞ்சு நூல் விலை சீராகாததால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் தருவதில்லை. துணிக்கான விலை நிர்ணயம் செய்ய முடியாததால், கூலி பிரச்சினை நீடிக்கிறது. பாதி நாட்கள் மட்டுமே தறிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே மின் கட்டண உயர்வு பாதிப்பு குறித்து அரசிடம் முறை யிட்டுள்ளோம். அரசின் நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம் .

    பாவு, நூல் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். எனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பாவு, நூல் விநியோகம் செய்ய வேண்டும் என்றனர்.

    • தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.
    • கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன.இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். சொந்த ஊரை விட்டு இங்கு வந்து ஆண்டு முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். போனஸ் பணத்தை வாங்கி, பண்டிகைக்கான புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.

    கடந்த இரு ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 8 ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக வழங்கப்படாதது, பஞ்சு, நூல் விலை உயர்வால் உற்பத்தி முடங்கியது போன்ற காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வும் விசைத்தறி உற்பத்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மின் கட்டணத்தை குறைக்க கோரி வேலை நிறுத்தம் செய்த விசைத்தறியாளர்கள், மின் கட்டணத்தை அரசு குறைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதுவரை விசைத்தறிகள் முழுமையாக இயங்கவில்லை.

    பல ஆண்டுகளாக ஒப்பந்த கூலி முறையாக கிடைக்காதது, மார்க்கெட் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்தாண்டு போனஸ் கிடைக்குமா என்ற இக்கட்டான சூழலில் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை நிறுத்தம், உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தாலும், தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள விசைத்தறி உரிமையாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். மார்க்கெட் நிலைமை சீரான உடன் விசைத்தறிகளை முழு வீச்சில் இயக்க விசைத்தறியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்காக தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீபாவளி போனசை வழங்க முடிவு செய்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. வரும் வாரத்தில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்குள் போனஸ் வழங்க வேண்டும்என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

    ×