search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய் இழப்பு"

    • லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் லாரிகள் மிக்ஜம் புயலால் சென்னைக்குள் செல்ல முடியால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பால், ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், வெல்லம், மஞ்சள், காய்கறி உள்பட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள், ஜவுளிகள் உள்பட பல்வேறு பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு சரக்குகள் அனுப்பி வைக்கப்படும்.

    தற்போது சென்னையில் புயல் வெள்ளம் வடியாத நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சென்னை உள்பகுதிகளுக்குள் லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி போக்குவரத்து முடங்கி உள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி ஒரு லாரிக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் லாரிகளுக்கும், ஒரு நாளைக்கு ரூ.18 கோடி வீதம் 4 நாட்களில் மட்டும் 72 கோடிக்கும் மேல் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகள், முட்டைகள், மளிகை பொருட்கள் உள்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன.

    லாரி தொழிலை நம்பியுள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    இது தவிர நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 50 லட்சத்திற்கும் அதிகமாக முட்டைகள் லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்குள் லாரிகள் செல்லாததால் இந்த முட்டைகள் கடந்த 4 நாட்களாக நாமக்கல்லில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் முட்டை கோழிப்பண்ணை யாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 கோடி வீதம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2022 அக்டோபர் மாதம், எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கினார்
    • யூதர்களுக்கு எதிரான கருத்தை ஆமோதித்து மஸ்க் பதிவிட்டார்

    கருத்து பரிமாற்றங்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருந்த டுவிட்டரை, அமெரிக்காவின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன் ஒரு பகுதியாக நிறுவன பெயரை எக்ஸ் என மாற்றினார். தொடர்ந்து தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பல பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். பல பொறுப்புகளில் புதிய பணியாளர்களை நியமித்தார்.

    ஆனால், மஸ்கின் மாற்றங்களால் நிறுவனத்தின் வருமானம் அவர் எதிர்பார்த்ததை போல் அதிகரிப்பதற்கு பதிலாக குறைய தொடங்கியது. எக்ஸ் போன்ற சமூக வலைதள நிறுவனங்களின் முக்கிய வருமானமான விளம்பர வருவாய் குறைந்து வந்தது.

    அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பினருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்தகைய எக்ஸ் பதிவு ஒன்றில் யூதர்களுக்கு எதிரான கருத்தை ஒரு பயனர் பதிவிட்டிருந்தார். இதனை ஆமோதிக்கும் வகையில் எலான் மஸ்க் ஒரு கருத்தை பதிவிட்டார்.

    இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஊடக விவகாரங்களை கவனித்து செய்தி வெளியிடும் மீடியா மேட்டர்ஸ் எனும் நிறுவனம், எக்ஸ் தளத்தில் யூதர்களை இனப்படுகொலை செய்த ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியினரை பெருமைப்படுத்தும் எக்ஸ் பதிவுகளுக்கு அருகில் ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் வெளிவருவதை சுட்டி காட்டியிருந்தது.

    இதையடுத்து எக்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரங்களை தந்து வந்த இருநூறுக்கும் மேற்பட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை நிறுத்தி விட்டன.

    இதனால் எக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ரூ.625 கோடி ($75 மில்லியன்) தொகை வரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபலமான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து, வருவாய் இழப்பை தடுக்க எலான் மஸ்க் தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    சேலம்:

    தமிழகத்தை பொறுத்தவரை 46 சுங்கச்சாவடிகள் மூலம், நாள் ஒன்றுக்கு 17 கோடி ரூபாய் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    குறிப்பாக கிருஷ்ணகிரி-தோப்பூர் வரை 62 கி.மீ. சாலை, கிருஷ்ணகிரி முதல் தும்பிபாடி வரையிலான 86 கி.மீட்டர் சாலைக்கு பாளையம் சுங்கச்சாவடிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.715.86 கோடி கட்டணம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதேபோல் தும்பிபாடியிலிருந்து நாமக்கல் வரை (68.62 கிமீ) செல்லும் வாகனங்களிடமிருந்து ஓமலூர் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கிறது.

    இந்த நிலையில் ஓமலூர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடிகளில் ஜூன் மாதம் 2010-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 133.36 கோடி வருவாய் இழப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஏற்படுத்தி இருப்பது சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    இதில் பாளையம் சுங்கச்சாவடி ரூ. 73.88 கோடியும், ஓமலூர் சுங்கச்சாவடியில் 54.48 கோடியும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலைகள் அமைக்க முன்னணி நிறுவனங்களுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வருவாய்ப் பகிர்வு ஒப்பந்தத்தில் தும்பிப்பாடி-சேலம் பகுதி மட்டும் சேர்க்கப்பட்டு, சேலம் புறவழிச்சாலை அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதுபோல் தொப்பூர்-தொப்பூர் கேட் வரை 7.4 கிலோ மீட்டருக்கான விதி சேர்க்கப்படவில்லை. இப்படி பல்வேறு வகைகளில் இழப்பை ஏற்படுத்துள்ளதை சி.ஏ.ஜி கண்டுபிடித்துள்ளது.

    • 17 அம்ச கோரிக்கைகளை தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    ஓமலூர்:

    தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளும் 3ஆயிரம் மேற்பட்ட கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை பள்ளி, மருத்துவமனை, சாலை, பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணி களுக்கும் தேவையாக உள்ளது. தற்போது பெரிய அளவில் கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட விதிகளை, சிறிய அளவிலான கல் குவாரிகளுக்கும், ஜல்லி உடைக்கும் சிறு கிரசர்களுக்கும் கனிம வளத்துறை அமல்படுத்தி உள்ளது.

    அதனால் இந்த தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். மேலும், உள்ளூரிகளில் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் அச்சுறுத்தல் செய்கின்றனர். மேலும், கனிம வளம் கடத்தல், கனிம வளம் கொள்ளை என அச்சுறுத்தி, குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாக குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குவாரிகளில் பல்வேறு குறைகளை கண்டறிந்து பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரிலும் கடந்த 26-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 ஆயிரத்து 500 கல் குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்காமல் முடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், கட்டுமான தொழிலும் ஸ்தம்பித்து வருகிறது. தொடர்ந்து ஓமலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தியும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்தும் அரசுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும், அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி சேலம் மாவட்ட குவாரி கிரஷர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா கூறும்போது, எங்களது சிறு குவாரிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, எம்.சான்ட் அரசு பணிகளுக்கே 80 சதவீதம் அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கபடுகிறது. தற்போது குவாரி தொழில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் தினமும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தமிழ்நாடு முதல்வர் குவாரி கிரசர் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தொழில் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

    • திருப்புல்லாணியில் மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • இந்த மீன் மார்க்கெட் திறக்கப்படாததால் திருப்புல்லாணி ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சியில் மீன் மார்க்கெட் இல்லாமல் மீனவர்கள் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் புதிய மீன் மார்க்கெட் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கடைகள் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக திருப்புல்லாணி பகுதியில் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில் மீன்களை விற்பனை செய்வதால் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

    இது குறித்து எஸ்.டி.பி.ஐ. முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் வகாப் கூறியதாவது:-

    பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறக்கப்படாததால் திருப்புல்லாணி ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் விற்பனை மீன்களை செய்வதை தடுத்து நிறுத்தினால் மீனவர்கள் மீன் மார்க்கெட்டின் உள்ளே விற்பனை செய்யும் நிலை உருவாகும்.

    இது குறித்து அதிகாரி களுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் திருப்புல்லாணி பஸ் நிறுத்தத்திற்கு முன் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சிறுவர் பூங்கா சேதமடைந்தது கருவேல மரங்கள் நிறைந்த காடாக உள்ளது.

    அந்த இடத்திற்கு ஒரு தீர்வு வேண்டும்.குடிநீர் திட்டத்திற்காக முஸ்லிம் தெருவில் உடைக்கப்பட்ட சாலைகள் இன்னும் சரி செய்யாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர் என்றார்.

    • தேனி வளர்ப்பு அலகுக்கான துணைக்கூறுகளை சரிவர செயல்படுத்தாததால் 169 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.10.34 லட்சம் பயனற்றதாகிவிட்டது.
    • வேலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்காமல், 590 டன் நெல் விதைகள் அதிக அளவில் வழங்கப்பட்டன.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 4 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த தணிக்கை அறிக்கைகள், 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையுள்ளவை ஆகும்.

    இதுகுறித்து மாநில முதன்மை தணிக்கை தலைவர் பிரிவு-1 ஆர்.அம்பலவாணன், பிரிவு-2 கே.பி.ஆனந்த் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சரக்கு மற்றும் சேவை வரி, வணிக வரி, முத்திரை தீர்வை, பதிவுக்கட்டணம், நில வருவாய் ஆகியவற்றில் 1,403 இனங்களில் குறைவான வரி மதிப்பீடுகள் செய்யப்பட்டு, குறைவாக வரி விதிக்கப்பட்டு ரூ.236 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    விருதுநகர் வட்டத்தில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் 14 முகவர்கள் மதிப்பு கூட்டு வரி சட்டத்தின்படி கொள்முதல் வரி கட்டாமல் ரூ.235.14 கோடி மதிப்புள்ள பருப்பு வகைகளை கொள்முதல் செய்துள்ளனர். அதில் ரூ.176.83 கோடி மதிப்புள்ள சரக்குகளை வேறு மாநிலங்களில் இருப்பு வைத்தனர். அந்த வகையில் ரூ.5.48 கோடி வரி வராமல் போனது.

    முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-21-ம் ஆண்டில் வருவாய் வரவில் 0.26 சதவீதம் என்ற மிகக்குறைந்த உயர்வுதான் காணப்பட்டது. வரியில்லாத வருவாயில் கணிசமான குறைவு இருந்தது.

    திருமண உதவி, மகப்பேறு உதவி, இலவச மடிக்கணினி, சீருடை வழங்குதல் போன்ற மறைமுக மானியங்கள், முந்தைய ஆண்டைவிட ரூ.6,746 கோடி உயர்ந்தது. இந்த உயர்வுக்கு, கொரோனா ஊரடங்கை சமாளிக்க மக்களுக்கு கொடுக்கப்பட்ட பண உதவி முக்கிய காரணமாகும். இந்த செலவு, மானியத்திற்கு பதிலாக மானிய உதவி என்று தவறாக வகைப்படுத்தப்பட்டது.

    மானாவாரி பகுதி மேம்பாடு என்பது, பயிர்கள், தோட்டக்கலை, கால்நடை, மீன்பிடி, வனவியல் போன்ற பல விவசாய அம்சங்களை உள்ளடக்கியதாகும். ஆனால் மானாவாரி பகுதிகளுக்கு பதிலாக நீர்ப்பாசன நிலங்களில் இந்த திட்டம் முறையற்ற வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பயன்பெற்ற சில விவசாயிகளுக்கு மானாவாரி மற்றும் நன்செய் ஆகிய 2 நிலங்களும் இருந்தன. நன்செய் நிலம் இருந்தவர்களை, மானாவாரி விவசாயம் செய்து வருவதாகவும் அரசு கூறியிருக்கிறது.

    தேனி வளர்ப்பு அலகுக்கான துணைக்கூறுகளை சரிவர செயல்படுத்தாததால் 169 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.10.34 லட்சம் பயனற்றதாகிவிட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர்களால் கொள்முதல் நடைமுறை மீறப்பட்டதால் ரூ.3.22 கோடி தேவையில்லாத செலவு ஏற்பட்டது.

    கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர் மற்றும் தையூரில் தலா ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வசதி கொண்ட 2 விடுதிகள் கட்டப்பட்டன. அதை கட்டிய இடம் சரியானதல்ல. இதனால் ரூ.31.66 கோடி வீண் செலவு ஏற்பட்டது.

    72 மாதிரி பள்ளிகளின் 31 ஆயிரத்து 152 மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடி வீணாக செலவானது. மேலும் 49 மாதிரி பள்ளிகளில் 21 ஆயிரத்து 86 மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ரூ.2.22 கோடி மதிப்பிலான சீருடைகளில் மிகக் குறைவான சீருடைகளே பயன்படுத்தப்பட்டன.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மின் பாடத்தொகுப்புகள் மற்றும் மின் கற்றல் முகப்பை (போர்டெல்) உருவாக்குவதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயாரிப்பதில் முறைகேடுகள் நடந்தன. ஒப்பந்த மதிப்பீட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் ஒப்பந்ததாரரின் சேவைகளின் தரத்தை உறுதி செய்யாததால் ரூ.10.70 கோடி அளவுக்கு தேவையற்ற செலவும், ரூ.5.17 கோடியை செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட சில உள் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதில் நேரிட்ட குறைபாடுகளினால் ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படாத தொழில்நுட்ப சேவைகளுக்கு ரூ.11.41 கோடி முறைகேடாக வழங்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்காமல், 590 டன் நெல் விதைகள் அதிக அளவில் வழங்கப்பட்டன. இது ரூ.1.33 கோடி கூடுதல் செலவுக்கு வழி வகுத்தது. காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் தலைவர்களின் செயல்பாட்டினால் 'எம்.ஆர்.ஐ. ஸ்கேனரை' பொருத்துவதற்கான இடத்தை அடையாளம் காண்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ரூ.1.12 கோடி தவிர்க்கக்கூடிய செலவு நேரிட்டது. ஸ்கேன் வசதிகளை நோயாளிகள் பெற ஒரு ஆண்டு தாமதமாகி விட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், திங்கள், செவ்வாய், புதன் கூட்டம் இல்லாத நிலையிலும் உள்ளது.
    • எந்த ஊருக்கு அதிக பயணிகள் பயணிக்கின்றனர் என்பன உட்பட விபரங்களை இக்குழுவினர் சேகரிக்க உள்ளனர்.

    திருப்பூர்:

    அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் வருவாய் இழப்பு ஏற்படுத்துவதை தடுக்க, கோட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கோட்டத்திற்கும் கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் உட்பட 8 அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இரவு 10:30க்கு பின், அதிகாலை 5:30 மணி வரை இயக்கப்படும் பஸ்கள்,ஒரு வழித்தடத்தில் ஒரு பஸ்சுக்கும் அடுத்த பஸ்சுக்குமான நேர இடைவெளி,பயணிகள்எண்ணிக்கை,எந்த ஊருக்கு அதிக பயணிகள் பயணிக்கின்றனர் என்பன உட்பட விபரங்களை இக்குழுவினர் சேகரிக்க உள்ளனர்.

    இதன் வாயிலாக எந்த வழித்தடத்தில் எந்த 'டிரிப்' இயக்கும் போது கலெக்‌ஷன் குறைகிறது, டீசல் விரயம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.அதன் பின் தொடர்ச்சியாக இயங்கும் பஸ்களில் ஒன்றோ அல்லது இரண்டோ நிறுத்தப்பட்டு அந்த பஸ்சுக்கு பயன்படுத்தப்படும் டீசலை மிச்சப்படுத்தவும், பஸ்சின் டிரைவர், நடத்துனருக்கு வேறு பஸ்சில் பணி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, வருவாய் இழப்பு ஏற்படுவதை ஓரளவு தடுக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், திங்கள், செவ்வாய், புதன் கூட்டம் இல்லாத நிலையிலும் உள்ளது. பயணிகள் எண்ணிக்கை, பயணிக்கும் கிழமைக்கு ஏற்ப பஸ் இயக்கத்தை முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டம் பண்டிகை, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது. பயணிகள் அதிகரித்தால் விலக்கிக் கொள்ளப்படும்.வருவாய் இழப்பு ஏற்படுத்தும் பஸ்களின் நேரத்தை பரீட்சார்த்த முறையில் மாற்றியமைக்கவும், தேவை இருப்பின் மாற்றங்கள் செய்யவும் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் என்றனர்.  

    ×