search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவையில் கார் குண்டு வெடிப்பு"

    • இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வேலைக்கு செல்கின்றனர்.
    • வெளிநாடு செல்பவர்களில் பலர் போலி விசாவை பெற்று சென்று அங்கு தவறான கும்பலிடம் மாட்டி கொள்கின்றனர்.

    கோவை:

    பா.ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    பா.ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வேலைக்கு செல்கின்றனர். இப்படி செல்பவர்களில் பலர் போலி விசாவை பெற்று சென்று அங்கு தவறான கும்பலிடம் மாட்டி கொள்கின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதுபோன்று சிக்கி கொண்ட இந்தியர்களை மத்திய அரசு மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு தீவிர சட்டங்களை இயற்ற வேண்டும்.

    நான் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழ் மொழி குறித்து அங்குள்ள மக்களிடம் கூறி வருகிறேன். அப்படி ஒரு முறை பிலிப்பைன்ஸ் சென்றபோது, அங்கு தமிழைப் போற்றும் திருவள்ளுவர் சிலைகள் அதிகமாக இருந்தது. எனவே தமிழகத்திலும் வெளிநாடுகளைப் போல திருவள்ளுவர் சிலைகளை அதிக அளவில் சிலை வடிவமைப்பாளர்கள் செய்து விற்பனை செய்ய வேண்டும்.

    திராவிட இயக்கத்தினர் எப்போதும் தமிழை வளர்க்கவில்லை. மாறாக அவர்கள் ஆங்கிலத்தையே வளர்த்தனர். தமிழை வளர்க்க விடாமல் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆங்கில பள்ளிக்கூடங்களே அதிகளவில் உள்ளது. எனவே தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தி எங்கும், யாரிடமும் திணிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டி முடிந்ததும், நிருபர்கள், டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் 1998-ம் ஆண்டு போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது போல பதிவு செய்துள்ளீர்களே என காயத்ரி ரகுராமிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர், அதுபோன்ற பதட்டமான நிலையை உருவாக்க நான் எந்தப் பதிவும் போடவில்லை. இந்த கேள்வி கேட்டு நீங்கள் தான் பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள் என தெரிவித்தார். இதனால் நிருபர்களுக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பா.ஜ.க.வினர் நிருபர்களை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர்.
    • வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    முத்துப்பேட்டை:

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் அந்தந்த மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, அனந்தபத்மநாதன், உதயா, ஹேமலதா மற்றும் போலீசார் அரசகுளம் தெற்கு கரை பகுதியில் உள்ள ரிஸ்வான் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட போலீசார் இந்நியாஸ், சாஜித், அசாருதீன் ஆகிய 3 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது.

    தொடர்ந்து 4 பேர் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இன்று சோதனை செய்யப்பட்ட ரிஸ்வான் உள்பட 4 பேரின் வீடுகளிலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து ஒரு இயக்கத்துடன் தொடர்புஉள்ளதாக கூறி கைது செய்ததும், பின்னர் அவர்கள் விடுதலை ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    • கோவில்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக ஒத்திகையில் ஈடுபட்ட காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
    • கேமிராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந் தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில், தீபாவளியையொட்டி மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்தனர். அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    ஒவ்வொரு நாள் விசாரணையிலும் பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது இறந்த முபினும், அவனது கூட்டாளிகளும் கோவையில் 3 கோவில்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இதற்காக அவர்கள் ஒத்திகை மேற்கொண்ட அதிர்ச்சி தகவல்களும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக அவர்கள், பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் "ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையை பின்பற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    பயங்கரவாத தாக்குதல் என்பது ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல் நடத்துவது ஆகும். ஆனால் இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, பயங்கரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்தத்திற்காக தாக்குதல் நடத்தும் முறை ஆகும். இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் ஐ.எஸ்., அல்கொய்தா ஆகிய அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை. இது வெளிநாடுகளில் பலமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    அந்த சித்தாந்தத்தின் கொள்கையிலேயே முபினும், அவனது கூட்டாளிகளும் கோவையில் சில இடங்களை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அதற்கு தேவையான வெடி பொருட்களை வாங்கி உள்ளனர்.

    அதன்படி ஜமேஷா முபீன் மற்றும் அவரது உறவினர்களான அசாருதீன், அப்சர் கான் ஆகியோர் காந்தி பார்க்கில் 2 கியாஸ் சிலிண்டர்களும், உக்கடம் லாரி பேட்டை பகுதியில் 3 இரும்பு டிரம்களும் வாங்கி உள்ளனர். இதற்கான ரசீதுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை உறவினரான அப்சர் கான் ஆன்லைனில் வாங்கி கொடுத்துள்ளார்.

    பொருட்கள் அனைத்தும் வாங்கி தயார் செய்து விட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். முபினின் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோனியம்மன் கோவில், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள புலியகுளம் விநாயகர் கோவில் பகுதிகளை தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கான இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஒத்திகை பார்க்க 3 பேரும் முடிவு செய்தனர். அதன்படி முபின் மற்றும் அசாருதீன், அப்சர்கான் ஆகியோர் கோனியம்மன் கோவில், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில், புலியகுளம் விநாயகர் கோவில் பகுதிக்கு பல முறை சென்று வந்துள்ளனர்.

    அப்போது அந்த பகுதியில் எவ்வாறு திட்டத்தை செயல்படுத்தலாம். எந்த இடத்தில், எந்த நேரத்தில் அரங்கேற்றலாம் என ஒத்திகையிலும் ஈடுபட்டுள்ளனர்.

    முதலில் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி ஜமேஷா முபின் காரில் 2 கியாஸ் சிலிண்டர்கள், வெடி மருந்துகள், ஆணி, கோலிகுண்டு உள்ளிட்டவற்றை நிரப்பி கொண்டு கோட்டைமேடு பகுதிக்கு சென்று கோவில் முன்பு சென்றதும் கியாசை திறந்து விட்டு தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இந்த தகவல்களை வழக்கை விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கோவில்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக ஒத்திகையில் ஈடுபட்ட காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அதில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் சில காட்சிகளை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டு அதிகாரிகள் விசாரணையை தொடங்கி விட்டனர்.

    இறந்த முபினின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்சிஜன் சிலிண்டனர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், புத்தகம், ஜிகாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது கைதான 6 பேரும் 3 நாள் காவல் முடிந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • எப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது.
    • வாக்கு வங்கி அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் நடந்த கார் வெடிப்பில் நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதை கொண்டு வந்தவரே பலியாகி இருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.

    காவல்துறைக்கு தலைவராக இருப்பவரே இப்படி மவுனம் காப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழக அரசு பயங்கரவாதிகள் விஷயத்தில் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.

    எப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது. அதனால் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும். கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிற விஷயம்.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்தான் தாய்மொழி, எந்த மாநிலத்திலும் தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    எந்த காலத்திலும் தமிழக மக்கள் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்தி திணிப்பை கொண்டு வந்ததால்தான் இதுவரை ஆட்சி பிடிக்க முடியாமல் போனது. அது போன்ற விபரீத முயற்சியில் பா.ஜ.க ஈடுபடாது என நினைக்கிறேன்.

    செய்தியாளர்கள் மடக்கி தான் கேள்வி கேட்பார்கள் . அதற்கு பக்குவமாகதான் பதில் சொல்ல வேண்டும் .அண்ணாமலை அரசியலுக்கு வந்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. அடிப்பட்டு திருந்துவார். அப்போது நிதானம் ஆகிவிடுவார். தேசிய கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் இதுபோன்ற போக்கை கட்சி தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் திங்கட்கிழமை பா.ஜ.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    • வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

    சென்னை:

    கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ள பந்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. பந்த் அன்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் ஆதரவு தருமாறு பா.ஜ.க. நிர்வாகிகள் அழுத்தம் தருகின்றனர்.

    இந்த விவகாரம் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது.

    எனவே வரும் திங்கட்கிழமை பா.ஜ.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

    • கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

    கோவை:

    கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பாரதம் உருவானது. ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

    நவீன அறிவியல் தொழில்நுட்ப கல்வியோடு சேர்த்து பாரத பண்பாடுகளோடு கூடிய கல்வி முறை தேவைப்படுகிறது.

    தமிழகம் பல முனிவர்கள், யோகிகளை கொண்டிருந்த மண். யோகாவை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறந்த ஆளுமையால் இந்தியா வழி நடத்தப்பட்டு வருகிறது. யோகாவையும், இயற்கை மருத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சனாதன தர்மம் இந்த நாட்டின் அடையாளம்.

    பயங்கரவாதம் நாட்டின் பெரும் பிரச்சினையாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. பயங்கரவாதம் அனைத்திற்கும் எதிரானதாக உள்ளது.

    கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல். இது பயங்கரவாத தாக்குதல். இதில் அதிக அளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனாலும் தமிழக அரசு கோவை சம்பவத்தை தாமதிக்காமல் உரிய நேரத்தில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொடுத்திருக்க வேண்டும்.

    கோவையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னால் பெரும் திட்டங்கள் இருந்துள்ளது.

    இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் பெருவளர்ச்சியை நோக்கமாக கொண்டு செல்கிறோம். ஆனால் பயங்கரவாத தாக்குதல் வளர்ச்சியை தடுக்கும் விதமாக உள்ளது.

    பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது கவலையளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையில் குண்டு வெடிப்பு போன்ற சதி திட்டத்தை நடத்தும் எண்ணத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலருடன் முபின் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • முபின் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து இது தொடர்பாக போலீசார் துப்பு துலக்கி இருக்கிறார்கள்.

    சென்னை:

    கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு ஒரு வாரமாகியும் அடங்காமலேயே உள்ளது.

    காரில் இருந்த சிலிண்டர்கள், வெடி மருந்துகள் ஆகியவை வெடித்து சிதறியதால் காரை ஓட்டிச் சென்ற ஜமேசா முபின் பலியானான். கோவையில் மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்றும் நோக்கத்தில் முபின் செயல்பட்டிருப்பது அம்பலமானது.

    இதைத் தொடர்ந்து முபினின் வீட்டில் சோதனை செய்த போலீசார் 75 கிலோ வெடிமருந்துகளை கைப்பற்றினர். இந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி கோவையில் 3 இடங்களில் குண்டு வைப்பதற்கு முபினும் அவனது கூட்டாளிகளும் திட்டமிட்டது வெட்டவெளிச்சமானது.

    இது தொடர்பாக முபினின் கூட்டாளிகளான முகமது தல்சா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6-வதாக முபினின் நெருங்கிய உறவினறான அப்சர்கான் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் முதலில் கைதான 5 பேரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் கோவையை தாண்டி வெளி மாவட்டங்களிலும் முபின் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக நெல்லை மாவட்டம் ஏர்வாடி மற்றும் கடலூர் பரங்கிப்பேட்டையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும் தமிழக போலீசாரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் 15 பேர் வரை முபினின் நெருங்கிய கூட்டாளிகளாக செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் இந்த 15 பேரையும் பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் சேர்ந்து மாநில போலீசாரும் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவையில் குண்டு வெடிப்பு போன்ற சதி திட்டத்தை நடத்தும் எண்ணத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலருடன் முபின் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முபின் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து இது தொடர்பாக போலீசார் துப்பு துலக்கி இருக்கிறார்கள்.

    அந்த வகையில் முபினுக்கு பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஒருசிலர் பண உதவி களையும் பொருள் உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.

    இது போன்று பல வழிகளில் சதி திட்டத்துக்கு உதவிகரமாக முபினின் கூட்டாளிகள் 15 பேரும் செயல்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்தே அவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள 6 பேரிடமும் கோவை மாநகர போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டு விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில் இனி தமிழக காவல்துறையிடம் முபினின் கூட்டாளிகள் யாராவது சிக்கினால் அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி மேல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவார்கள்.

    இப்படி என்.ஐ.ஏ. விசாரணையும், தமிழக காவல்துறை விசாரணையும் தீவிரமாகி இருப்பதால் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் அடுத்தடுத்து பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முறையான விசாரணை நடத்தி, கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப்புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும். தேசியப்புலனாய்வு முகமையானது பா.ஜ.க.வின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு முகமையின் வசம் இவ்வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. வன்முறைச்செயலில் ஈடுபட்டு, சமூக அமைதியைக் குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேசமயம், இவ்வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ளவர்கள் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, அச்சமூகத்தினரையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது.

    இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, அக்கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதை காட்டுகிறது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் மாற்றமில்லை.

    கோவை:

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் கடந்த 23-ந்தேதி அதிகாலை நடந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தமிழக டி.ஜி.பி.யும் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் அந்த கார் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பான முழு விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேரிடம் அந்த கார் கைமாறி உள்ளது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கோவையில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை பாரதிய ஜனதா அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறது. அதன் தலைவர் உண்மைத் தன்மை தெரியாமல் பேசி வருகிறார்.

    காவல்துறை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் உண்மை தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார். எனவே அவருக்கு இந்த ஆதாரங்கள் எப்படி கிடைத்தது, எதன் அடிப்படையில் இவ்வாறு அவர் வெளியிட்டார் என்பது தொடர்பாக என்.ஐ.ஏ. முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெளி மாநிலம் கடந்து விசாரணை நடத்த உள்ளதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் பா.ஜ.க.வினர் கூறியதனால் தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார் என கூறி வருகின்றனர்.

    கோவையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 40 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அரசியலாக்க நினைக்கும் பாரதிய ஜனதா, முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது அவர்கள் வந்து மரியாதை செலுத்தினார்களா அல்லது அதுசம்பந்தமாக ஏதாவது பேசினார்களா?

    இந்த சம்பவத்தால் கோவை மக்கள் பாதிக்கப்படவில்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டும் பா.ஜ.க.வினர் முழு அடைப்பு அறிவித்துள்ளனர். இது தேவையற்றது. சட்டத்துக்கு புறம்பாக கடைகளை அடைக்க சொன்னாலும், மிரட்டினாலோ மக்களை துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது, மக்கள் யாரும் அச்சப்படவில்லை. தமிழகத்தில் ஏராளமான கட்சிகள் உள்ளன. விசாரணை நடக்கும் பட்சத்தில் மற்ற கட்சியினரும் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஆனால் பாஜகவினர் மட்டும்தான் இதனை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அனைத்து கட்சி கூட்டம் தேவையற்றது. கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த சம்பவத்தையும் தற்போது நடந்த நிகழ்வையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர், உண்மைக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற அச்சத்தை உருவாக்க வேண்டாம்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதை காட்டுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் மாற்றமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்தபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணிநேரம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

    கோவை:

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு பாரதிய ஜனதாவினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் பாரதிய ஜனதா சார்பில் கோவையில் வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்தபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த நிலையில் கோவையில் தற்போது நடக்க இருந்த சம்பவம் அதிர்ஷ்டவசமாக நடக்கவில்லை. நடந்த சம்பவம் சிலிண்டர் வெடிப்பு தான் காரணம் என கூறினார்கள். ஆனால் அதுதான் இல்லை.

    பா.ஜ.க அலுலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் தி.மு.க அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. எங்களுக்கு வந்த தகவல்படி கோவையில் 1½ டன் வெடிபொருட்கள் கிடைத்துள்ளது.

    கொங்கு நகரின் தலைநகராக கோவை உள்ளது. ஆனால் இங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து வருகிற 31-ந்தேதி முழு அடைப்பு நடைபெற உள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்புதர வேண்டும்.

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணிநேரம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. எல்லா இஸ்லாமியர்களும் பயங்கரவாதிகள் இல்லை. இஸ்லாமிய மக்கள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

    சென்னை

    கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

    இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவை சம்பவம் போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க காவல்துறையில் சிறப்பு படை உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    உளவுத்துறையில் கூடுதல் காவலர்கள் நியமனம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்புவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனை கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 23-ந்தேதி அதிகாலையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவரது நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

    முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்புவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    ×