search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ச்சை கருத்து"

    • ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
    • தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலமாக பேசி இருக்கிறார்.

    திருச்சி:

    தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க.விற்கு எதிராக பேசியிருந்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த அரசு வக்கீல் முரளி கிருஷ்ணன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

    எக்ஸ் வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள 2 வரிகளை தூக்கியதற்காக கொந்தளிப்பதா? என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று மிகவும் கண்ணியக் குறைவாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்கிற நோக்கத்தோடும் ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.

    இது சமூக வலைதளத்தில் பரவி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால் எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மனச்சோர்வு அடைந்து, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

    தமிழ்த்தாய் வாழ்த்தை சீமான் மிகவும் கொச்சைப்படுத்தி அரசின் உத்தரவின்றி தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வருவதால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றியும் அதன் மீது உள்ள நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    ஆகவே சீமான் மீது குற்றவியல் சட்டம் மற்றும் தேச துரோக வழக்கினை பதிவு செய்து அவருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    • சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
    • பல முறை சிந்தித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் ரத்து செய்யப்பட்ட 3 பண்ணை சட்டங்கள் தொடர்பாக கங்கனா ரணாவத் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கள் நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பை கிளப்பிய நிலையில் தனது கருத்துக்களை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார்.

    நேற்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.

    இந்த நிலையில் தேசப்பிதா மகாத்மா காந்தி என்று எழுதப்பட்ட காந்தியின் சிலை அருகே நின்றபடி நடிகை கங்கனா ரணாவத் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

    அதில் இந்திய நாட்டில் தேசப்பிதாக்கள் இல்லை. அனைவரும் மகன்கள் தான். மகாத்மா காந்தியும், லால்பகதூர் சாஸ்திரியும் பாரத தாயின் ஆசி பெற்ற மகன்கள்... என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் வாழ்த்து தெரி வித்துள்ளார்.

    தேசப்பிதா மகாத்மா காந்தி தொடர்பான கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சையான விமர்சனம் பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.விலும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஸ்ரீநேட் கருத்து தெரிவிக்கையில், மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடிகை கங்கனா ரணாவத் தேசப்பிதா காந்தி மீது கேலியான விமர்சனத்தை வைத்துள்ளார்.

    மேலும் பா.ஜ.க.வில் கோட்சேயின் வழித்தோன்றல்கள் இது போன்று காந்திக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பது வழக்கம் என்றாலும் கோட்சேயின் பக்தர்களை பிரதமர் நரேந்திர மோடி எந்த வகையில் மன்னிக்கப் போகிறார்.

    மகாத்மா காந்தி தான் நாட்டின் தந்தை நாம் எல்லோரும் அவரது பிள்ளைகள் என்ற உயர்ந்த எண்ணத்தோடு ஒவ்வொரு இந்தியர்களும் மகாத்மா காந்திக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறார்கள் என்றும் சுப்ரியா ஸ்ரீநேட் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் மனோரஞ்சன் காலியாவும் கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.

    மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடிகை கங்கனா ரணாவத் கூறிய சர்ச்சை கருத்து பதிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள மனோரஞ்சன் காலியா நடிகை கங்கனாவின் அரசியல் பயணம் மிகக் குறுகியது.

    சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி கூறி பரபரப்பு ஏற்படுத்துவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் மனோ ரஞ்சன் காலியா தெரிவித்துள்ளார்.

    மேலும் அரசியல் அவரது முழு நேர துறை அல்ல, அரசியல் வாதிகள் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் பேச கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முறை அல்ல பல முறை சிந்தித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.

    ஆனால் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் அவரது செயல்பாடுகள் பா.ஜ.க.வுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

    கங்கனா ரணாவத்தின் மகாத்மா காந்தி தொடர்பான சர்ச்சை பதிவிற்கு காங்கிரஸ் மட்டுமின்றி பா.ஜ.க. தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கனா ரணாவத் தற்போது நடிகை மட்டுமல்ல, பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவரது கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதை அவர் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சதீஷ் ஜார்கிகோளி மூடநம்பிக்கைக்கு எதிரானவர்.
    • நான் கூறியுள்ள கருத்துகள் தவறானவை என்று நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்.

    பெங்களூரு :

    இந்து மதம் குறித்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் மன்னிப்பு கேட்க பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

    கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக இருப்பவர் சதீஷ் ஜார்கிகோளி.இவர் நேற்று முன்தினம் பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இந்து என்ற சொல் பார்சியன் மொழியை சேர்ந்தது என்றும், அந்த சொல் ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தது என்றும், இந்து என்ற சொல்லுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் பேசி இருந்தார்.

    மேலும், இந்து என்ற சொல்லின் அர்த்தம் மோசமானது என்றும் தெரிவித்து இருந்தார். இந்து குறித்த அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கண்டித்ததுடன் இந்து மதம் குறித்த விஷயத்தில் காங்கிரசுக்கு உயரிய மரியாதை உள்ளதாக தெரிவித்தார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பெலகாவியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    இந்து மதம் குறித்து நான் கூறிய கருத்துகள் யாவும் என்னுடைய சொந்த கருத்து கிடையாது. அதுபற்றி விவாதம் நடைபெறட்டும் என்று சொன்னேன். அது தான் எனது நோக்கம். ஆனால் சிலர் தங்களுக்கு ஏற்றபடி எனது கருத்தை புரிந்து கொண்டு விமர்சித்துள்ளனர். இதுபற்றி என்னால் எதுவும் செய்ய முடியாது.

    நான் ஆதாரங்களுடன் விவாதத்திற்கு தயாராக உள்ளேன். யாராவது நான் கூறியுள்ள கருத்துகள் தவறானவை என்று நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார். நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க மாட்டேன்.

    இதுகுறித்து முதல்-மந்திரி ஒரு குழு அமைக்கட்டும். நான் என்ன கூறினேன் என்பது குறித்த விஷயத்தில் உண்மையை கண்டறிய வேண்டும். நான் கூறிய கருத்துகள் அனைத்தும் புத்தகத்தில் எழுதி வெளியிடப்பட்டவை. என்னை குறை சொல்கிறவர்கள், அந்த புத்தகத்தை பார்த்து தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும்.

    அவர்கள் என்ன செய்திருக்க வேண்டுமோ அதை நான் செய்துள்ளேன். இதற்காக அவர்கள் எனக்கு நன்றி கூற வேண்டும். மனுவாதிகள் உள்பட சிலர் என்னை இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு சதீஷ் ஜார்கிகோளி கூறினார்.

    சதீஷ் ஜார்கிகோளி மூடநம்பிக்கைக்கு எதிரானவர். இவர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கலால்துறை மந்திரியாக பணியாற்றினார் என்பதும், அவர் மந்திரியாக இருந்தபோது, பெலகாவியில் மயானத்தில் நிகழ்ச்சி நடத்தி அங்கேயே உணவு சாப்பிட்டு இரவில் தங்கி பேய்கள் குறித்த எண்ணம் மூடநம்பிக்கை என்று சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

    ×