search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ முகாம்கள்"

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
    • வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

    சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

    இதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    குளிர்கால மழை, வெப்பச்சலன மழை, கோடை, தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்திருக்கிறது. தற்போது தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையும் கூடுதலாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் எல்லாத்துறைகளும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க முதல்-அமைச்சர் வலியுறுத்தி யுள்ளார்.

    தமிழ்நாட்டில் முதல்முறையாக அனைத்து சேவைத்துறைகளும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    நோய் பாதிப்பு தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிராமத்தில் ஒருவருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அங்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாளை (15-ந்தேதி) தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

    சேலத்தில் 20 இடங்களிலும், சென்னை யில் 100 இடங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

    டெங்கு பாதிப்பால் 2012-ல் 66 பேர் தமிழகத்தில் இறந்துள்ளனர். ஒவ்வொரு 5 வருடத்திற்கும் டெங்கு பாதிப்பு வீரியமாகி வரும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுத்ததால் பெரிய அளவிலான இறப்புகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் தற்போது வரை 8 பேர் டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. அச்சப்பட தேவையில்லை.

    போதைப் பொருட்களை தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 70 லட்சம் மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறோம். ஆன்லைனில் வாங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகள் போதைக்காக பயன்படுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அங்கு சிக்கியவர்களுக்கும், சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 4 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலும், நேற்று நெல்லை அரசு மருத்துவ மனையில் வெள்ளம் புகுந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்த பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.


    இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் இன்று தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் கீதா மெட்ரிக் பள்ளி, டி.எம்.சி. காலனி, கோரம்பள்ளம், முத்தையாபுரம், புன்னக் காயல், முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல் பஸ் நிலையம், ஏரல் காந்தி சிலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களில் 31 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் ஒரு நாளைக்கு 3 இடங்களுக்கு சென்று முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் 93 இடங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் 4 பேர் கொண்ட ஒரு மருத்துவ குழுவும் தினமும் 3 இடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன் மூலம் 12 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இன்று நெல்லை மாவட்டத்தில் மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் 4 குழுக்களும், புறநகர் மாவட்ட பகுதிகளில் ஒரு குழுவும் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    • சென்னையில் ஒரு மண்டலத்துக்கு 3 என்ற வீதத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • பெரும்பாலான முகாம்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் மழைக்கால நோய்களும் பரவி வருகின்றன. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது.

    சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் இந்த மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள், வைரஸ் காய்ச்சல், சேற்றுப் புண், தொண்டை வலி ஆகியவை வருவது வழக்கம்.

    தற்போது இந்த நோய் பரவல்கள் உள்ளது. வருமுன் காக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க பொது சுகாதாரத் துறை நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துகிறது.

    இன்று முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை 10 ஞாயிற்றுக் கிழமைகளில் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    சென்னையில் ஒரு மண்டலத்துக்கு 3 என்ற வீதத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடக்கிறது.

    மழைக்கால நோய்களுக்கு தேவையான அனைத்து விதமான மருந்துகளும் முகாம்களில் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

    காலை 9 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை வரை நடக்கிறது. பெரும்பாலான முகாம்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 38 மாவட்டங்களிலும் நடைபாதைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
    • ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் நடந்து செல்பவர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை:

    நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகரில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் நடைபாதையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் டெங்கு பரவல் உள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

    டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களை கட்டுப்படுத்துவதற்காக வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் டிசம்பர் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பத்து வாரங்கள் வாரம் தோறும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் வீதம் பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் இலவசமாக பரிசோதனை செய்வது முதல் மருந்து மாத்திரைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

    நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் என்பது ஜப்பான் நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கு அரசு சார்பில் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கான நடைபாதை சிறப்பாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்த்தேன்.

    அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர் அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதற்கு உத்தரவிட்டார்.

    அதன்படி 38 மாவட்டங்களிலும் எட்டு கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நடைபாதைகள் குண்டு குழிகள் இல்லாமல் ஏற்ற இறக்கங்களும் சமம் செய்யப்பட்டு நடப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் நடந்து செல்பவர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கைகள் அருகில் அது அமர்வதற்கான இடம் என்பதை குறிக்கும் வகையில் அழகிய சிலை ஒன்றும் அமைக்கப்படும்.

    நடைபாதையில் இரு பக்கமும் பசுமையான மரங்கள் இடம்பெறுகிறது. நடந்து செல்பவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளையும் அழைத்து செல்லலாம் . அதை நினைவுபடுத்தும் வகையில் செல்ல பிராணியுடன் நடந்து செல்வது போன்ற காட்சியும் இடம்பெறும்.

    ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திலும் கிலோமீட்டரை குறிக்கும் அறிவிப்பு பலகை மற்றும் நடந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறுகிறது. எட்டு கிலோமீட்டர் தூரம் என்று அமைப்பதற்கு காரணம் எட்டு கிலோமீட்டர் தினமும் நடந்தால் 10 ஆயிரம் அடிகள் நடப்பதாகும். இது உடலுக்கு சிறந்த பயிற்சியை தரும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும்.

    38 மாவட்டங்களிலும் இந்த நடைபாதைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள எட்டு கிலோமீட்டர் நடை பாதையில் சிறிது தூரம் நடந்து சென்று கடற்கரையில் அமைக்கப்படும் மேடையில் இருந்தபடி ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நடைபாதைகளையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மற்றும் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.

    பெசன்ட் நகரில் நடிகர், நடிகைகள், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். பெசன்ட் நகரில் நடந்து செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்தப் பாதையில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 24.06.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
    • முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை முகாம் நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படவுள்ளது.

    தருமபுரி,

    முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட தலைமை செயலாளரால் திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 24.06.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், எலும்பியல் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, பல், மனநலம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், காசநோய், தொழுநோய், கொரோனா பரிசோதனைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.

    மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, RFT, Cholesterol பரிசோதனை, E.C.G, ECHO, U.S.G (Scan), மகப்பேறு மருத்துவம், பெண்களுக்கான மார்பாக புற்றுநோய், கர்ப்பபை வாய் புற்றுநோய், கண்டறியும் பரிசோதனை ஆகியவை பொதுமக்களுக்கு அளிக்கப்படவுள்ளது.

    முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை முகாம் நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படவுள்ளது. இம்மருத்துவ முகாமில் மேற்கண்ட சிகிச்சை தொடர்பான சிறப்பியல் மருத்துவர்கள் (இருதய நோய் நிபுணர், சிறுநீரகவியல் நிபுணர், நரம்பியல் நிபுணர்) பங்கேற்கிறார்கள். மேலும், இம்மருத்துவ முகாமில் மருந்துகள், மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். இதில், தருமபுரி மாவட்ட பொது மக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    • காய்ச்சல் சளி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
    • சென்னையில் இன்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இன்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், ஒரு நர்சு, ஒரு உதவியாளர். சுகாதார பணியாளர் ஒருவர் உள்ளனர். காய்ச்சல் சளி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

    • கிராமபுறபகுதிகளில் 136 இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
    • மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டு தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை கோட்டை உருது நடுநிலைப்பள்ளி, மற்றும் அண்ணாநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள் மற்றும் கிராமபுறபகுதிகளில் 136 இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

    இந்த முகாமில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் மற்றம் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர் என அனைவருக்கும் காய்ச்சல், இரத்த அழுத்தம், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்ளுக்கு மருந்துகள், மாத்திரைகள், மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்களின் உடலை பரிசோதனை செய்துக்கொண்டு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டு தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.

    பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து க்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகளை மூடி வைத்திடவேண்டும். குடிநீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும்.

    இந்த சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாமில் 36 நடமாடும் மருத்துவ குழு மற்றும் பள்ளி சிறார்களுக்காக சிறப்பு குழு என 400 மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் இனியள் மண்டோதரி, தாமரைதென்றல், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

    • பக்தர்களின் நலன் கருதி 50 கி.மீ. தொலைவு இடைவெளியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும்.
    • பழனி கோவிலில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன.

    ஆறுமுகநேரி:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான ஆறுமுகநேரி தங்கமணி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விழாக்காலங்களில் தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் மேலூர், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, செங்கோட்டை, தென்காசி போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்களின் நலன் கருதி 50 கி.மீ. தொலைவு இடைவெளியில் சித்த ஆயுர்வேத மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும். தற்போது நடந்து முடிந்த பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இதுபோன்று பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன. இது பாராட்டிற்கு உரியது.

    எனவே மாசி திருவிழாவிற்கு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக பரமக்குடி, அருப்புக்கோட்டை, ஆறுமுக நேரி ஆகிய இடங்களிலும் ஆலங்குளம், நெல்லை, குரும்பூர் ஆகிய இடங்களிலும் வள்ளியூர், சாத்தான்குளம், பரமன்குறிச்சி ஆகிய இடங்களிலும் உவரி, குலசேக ரன்பட்டினம், ஆலந்தலை ஆகிய இடங்களிலும் மருத்துவ முகாம்களை அமைத்து செயல்படுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறு வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத்திறனா ளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் கீழ்காணும் விவரப்படி நடைபெற உள்ளன.

    வருகிற 4-ந்தேதி போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 5-ந்தேதி பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 11-ந்தேதி நயினர்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 13-ந்தேதிமுதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 18-ந்தேதி கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 19-ந்தேதி கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 25-ந்தேதி ஆர்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

    பிப்ரவரி 7-ந்தேதி திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 7-ந்தேதி திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 14-ந்தேதி மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 16-ந்தேதி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.

    இதில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு, ஆதார் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்து வக்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×