என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பொருள் கடத்தல்"

    • போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர்.
    • சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கஞ்சா, போதைப்பொருள் விற்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீசாருக்கு கோவை மாநகர பகுதிகளில் உயர் ரக போதைப்பொருட்கள் விற்க கும்பல் ஒன்று இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் தனபால் தலைமையிலான போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட், அம்மா உணவகம் கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக 7 பேர் நின்றிருந்தனர்.

    இதை பார்த்த போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.


    உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர். பின்னர் அவர்களை பிடித்து சோதனை செய்தனர்.

    அவர்களிடம் எம்.டி.எம்.ஏ. பவுடர், கொகைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள் இருந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில், இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி இத்தலார் போத்தியாடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது39), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆனந்தூரை சேர்ந்த விநாயகம் (34), கோவை பி.என்.பாளையம் கிருஷ்ணகாந்த் (35), வடவள்ளி மகாவிஷ்ணு (28), சுங்கம் பைபாஸ் ஆதர்ஷ் (24), நஞ்சுண்டாபுரம் ரித்தேஷ் லம்பா (41), ரோகன் செட்டி (30) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

    கைதான மணி கண்டன் என்பவர், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ரிதேஷ் லம்பா மூலமாக மகராஷ்டிராவை சேர்ந்த ஜேக்கப் பிராங்களின் என்பவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள் மற்றும் கொகைன் வாங்கி, இவர்களுடன் சேர்ந்து இங்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோல் கிரிஷ் ரோகன் செட்டி என்பவர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து கஞ்சா மற்றும் கிரீன் கஞ்சா, உயர் ரக போதைப்பொருட்களை கோவைக்கு வாங்கி வந்து, அதனை இங்கு பதுக்கி வைத்ததும், அதனை கோவையில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    போதைப்பொருள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவர்கள் அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்று சம்பாதித்த பணத்தில் கோவைப்புதூரில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகின்றனர். அத்துடன் காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிதாக வீடும், ஒரு வீட்டு மனை வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

    மேலும் போதைப்பொருள் விற்று அதில் சம்பாதித்த அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு 12 வங்கி கணக்குகள் இருப்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், அதனை முடக்குவதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

    கைதானவர்களில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விஜயலட்சுமியின் மகன் ஆவார்.

    கைதானவர்களிடம் இருந்து போலீசார் 24.40 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், 12.47 கிராம் எம்.டி.எம்.ஏ. பவுடர், 92.43 கிராம் கொகைன், 1.620 கிலோ கிரீன் கஞ்சா, 1 கிலோ 16 கிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப்பணம், பணம் எண்ணும் எந்திரம், போதை பொருள் எடை பார்க்கும் எந்திரம், பீர் பாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள் என ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். 

    • போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
    • நாட்டின் மீது குற்றம்சாட்டப்படுவது முதல் முறை.

    அமெரிக்க தேசிய உளவுப்பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆண்டு அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் ஃபெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றம் சீனாவில் இருந்து அதிகளவில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்தியா மீது இத்தகைய குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இந்தியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பல்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. எனினும், ஒட்டுமொத்த நாட்டின் மீது குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு சமீப காலங்களில் பெருமளவு அதிகரித்து வருகிறது. போதை பொருள் பயன்பாட்டை குறைக்கவும், சட்டவிரோத போதை பொருள் கடத்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில், போதை பொருள் தயாரிப்புக்கான ஃபெண்டானில் என்ற ரசாயன கடத்தலில் சீனா மற்றும் இந்தியா தான் முன்னிலையில் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ஃபெண்டானில் என்ற ரசாயனக் கலவை வலி நிவாரணி வடிவில் வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    ஃபெண்டானில் ரசாயம் செயற்கை போதையை உருவாக்கும் தன்மை கொண்டது ஆகும். சில வகை அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் ஃபெண்டானில் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்து இருக்கிறது. எனினும், இதன் அளவு சற்று அதிகரித்தாலும் போதைப் பொருளாக மாறும் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து பயன்படுத்தும் போது, மக்கள் இதற்கு அடிமையாகவும் வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக போதை பொருள் தயாரிக்கும் கும்பல்கள் இந்த ரசாயனத்தை போதைப் பொருளாகவே மாற்றியுள்ளன. இது பொடி மற்றும் மாத்திரை வடிவில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமெரிக்க போதை பொருள் கடத்தல் கும்பல்கள் ஃபெணடானில் தயாரிப்பதற்கான ரசாயனங்களை பெரும்பாலும் சீனாவில் இருந்து அதிகளவில் வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஃபெண்டானில் போதை பொருளை அதிகம் எடுத்துக் கொண்டதால் 52 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதை அடுத்து, இதனை ஒழிக்கும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்காகவே ஃபெண்டானில் தயாரிப்பதற்கான ரசயானங்களை தயாரிக்கும் சீனா மீது அதிபர் டிரம்ப் அதிக வரி விதிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும், போதை பொருள் கடத்தலை தடுத்த தவறியதாக கனடா மற்றும் மெக்சிகோ மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

    • குலியாகன் விமான நிலையத்திற்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
    • போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின்போது 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனான கஸ்மேன் கைது செய்யப்பட்டதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்து வாகனங்களுக்கு தீ வைத்தனர். குலியாகன் விமான நிலையத்திற்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 விமானங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறையைத் தொடர்ந்து விமான சேவை நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு பதிலடி கொடுத்தனர்.

    இந்த வன்முறையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 19 பேர், பாதுகாப்பு படை தரப்பில் 10 பேர் என மொத்தம் 29 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை மந்திரி லூயிஸ் கிரசென்சியோ சந்தோவல் கூறினார்.

    போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    வன்முறையின் மையப்பகுதியான சினலோவா தலைநகர் குலியாகன் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓவிடியோ கஸ்மேன் இப்போது அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • கப்பலிலிருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்படுவதை ஒரு கண்காணிப்பு விமானம் கண்டறிந்துள்ளது.
    • போதைப்பொருள் கடத்தலை தடுத்த காவல்துறையினரை சிசிலி பிராந்திய தலைவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

    இத்தாலியின் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் 5300 கிலோ (5.3 tons) கோகைன் போதைப் பொருளை ஒரு கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் போது காவல்துறை கைப்பற்றியது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.7700 கோடி ($946 million) ஆகும்.

    தென் அமெரிக்காவிலிருந்து பயணிக்கும் ஒரு கப்பலை காவல்துறை கண்காணித்து வந்தது. அப்போது சிசிலி ஜலசந்தி பகுதியில் இழுவை படகின் மூலம் எடுத்து செல்வதற்காக அந்த கப்பலிலிருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்படுவதை ஒரு கண்காணிப்பு விமானம் கண்டறிந்துள்ளது.

    உடனே அந்த இழுவை படகை நிறுத்தி பரிசோதித்தபோது அதில் சில தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவில் போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக துனிசியாவை சேர்ந்த இருவர், ஒரு இத்தாலியர், ஒரு அல்பேனியர் மற்றும் ஒரு பிரெஞ்ச் நாட்டவர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தலை தடுத்த காவல்துறையினரை சிசிலி பிராந்திய தலைவர் ரினாடோ ஸ்கிஃபானி வெகுவாக பாராட்டியுள்ளார்.

    "போதைப் பொருள் என்பது நமது சமூகத்தின் கேடு. நம்பிக்கைகளை சிதைத்து குடும்பங்களை அழித்து மரணத்தை விதைக்கும் இரக்கமற்ற நபர்களால் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது" எனவும் அவர் கூறியுள்ளார். 

    • 12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஆசாம் மாநிலம், தோலாய் பகுதியில் உள்ள லோக்நாத்பூரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், மர்ம நபர்களிடம் இருந்து 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    சம்பவ இடத்தில் இருந்து,12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த கடத்தல் போதைப் பொருட்கள் தோல் பைகள் மற்றும் சோப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு அண்டை மாநிலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டபோது பிடிபட்டது.

    அசாம் போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் சமீபத்தில் அகற்றப்பட்டது.
    • ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    டெல்லியில் கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்தஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் சமீபத்தில் அகற்றப்பட்டது.

    இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

    இதேபோல், சென்னை தி.நகரில் உள்ள இயக்குனர் அமீர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு.
    • ஜாபர் சாதிக்குக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின்.

    வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

    இந்த நிலையில், ஜாபர் சாதிக்குக்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நிலையில், ஜாபர் சாதிக்குக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை மாதத்தின் முதல் தங்கள் கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். செல்போன் எண்ணை அதிகாரிக்கு வழங்கி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.

    பாஸ்வோர்ட்டை ஒப்படைக்க வேண்டும். முகவரி மாற்றினால் அதுகுறித்த தகவலை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும், என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    ×