search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்"

    • இளங்கோவனின் மகன் திருமகன் காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். உடல்நலக்குறைவால் அவர் ஜனவரி மாதம் 4-ந்தேதி காலமானார்.

    இதனால் பிப்ரவரி 27-ந்தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,923 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மேனகா 10,827 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 1432 வாக்குகளும் பெற்றனர்.

    2019-ல் நடந்த மக்களை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ. பன்னீர் செல்வம் மகனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தோல்வியை சந்தித்த ஒரு வேட்பாளர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம்தேதி நடந்தது.
    • முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள்.

    முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கை முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது.
    • அறையின் உள்ளேயும், வெளியேயும் என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ராஜாஜிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மட்டும் இரவு 9.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 74.89 சதவீத வாக்குகள் தேர்தலில் பதிவாகி இருந்தது.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பான அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    அறையின் உள்ளேயும், வெளியேயும், சுற்றுவட்டார பகுதி என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர் என 450-க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    தபால் வாக்கு பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று வரை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை காலை ஈரோடு மாநகராட்சியில் இருந்து தபால் ஓட்டு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள். இதனால் வேட்பாளர்களின் முகவர்களே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பார்கள்.

    முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கை முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • ஈரோடு கிழக்கில் 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் பணியில் உள்ளனர். இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று கொண்டு வரப்படும். அங்கு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    முன்னதாக, ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின் மின்னணு இயந்திரங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள்.
    • மிக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆக்கப்படுவார்.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக நேற்று பல்வேறு இடங்களுக்கும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.

    அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    நான் இந்த தொகுதியில் பார்த்தவரைக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்த தொகுதி மக்களாகிய நீங்கள் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச்செய்தால், மாதம் தோறும் ஒரு நாள் நான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்து உங்களுடன் இருப்பேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் அளிக்கிறேன்.

    அ.தி.மு.க. சார்பில் ஒரு வேட்பாளர் நிற்கிறார். அவரை தொகுதிக்குள் பல இடங்களில் விடாமல் மக்கள் துரத்துகிறார்கள். அந்த விரக்தியில் இங்கு பிரசாரத்துக்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏதோதோ பேசி இருக்கிறார். மீசை வச்ச ஆம்பளயா என்கிறார். மீசை இருந்தால் சவரம் செய்வாரோ என்னவோ... எடப்பாடி பழனிசாமியை போல நான் தரம்தாழ்ந்து பேச முடியாது. அப்படி பேசினால் அவரால் தாங்க முடியாது.

    வேட்டியை பற்றி பேசிய அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார். கூவத்தூரை மறந்து விட்டீர்களா?. ஒரு எம்.எல்.ஏ. விட்டால் போதும் என்று பஸ் ஏறி தப்பித்து ஓடினாரே. ஒருவர் சுவர் ஏறி குதித்தாரே... அங்கே நீங்கள் எப்படி முதல்-அமைச்சர் ஆனீர்கள். இதோ இப்படித்தான் (சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாண் கிடையாக விழுந்த படத்தை எடுத்துக்காட்டினார்). இவரை தெரிகிறதா... மீசை தெரிகிறதா... வேட்டி தெரிகிறதா...

    நீங்கள் ஆட்சியில் இருந்தபோது இதுவரை வரலாற்றில் அல்லாத வகையில் தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்ததே. அப்போது உங்கள் மீசை என்ன செய்தது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றீர்களே அப்போது உங்கள் மீசை என்ன செய்தது. ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு கொடநாட்டில் 3 கொலைகள், தொடர் கொள்ளைகள் நடந்ததே அப்போது உங்கள் மீசை என்ன செய்தது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். ரூ.5 லட்சம் கோடி கடன் இருந்த சூழலிலும், கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. கொரோனா நிவாரணமாக 12 பொருட்கள் கொடுக்கப்பட்டது. பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்பட்டது.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்கள் கவர்னரின் கையெழுத்துக்காக அவரது அலுவலகத்தில் காத்திருக்கின்றன. தமிழக உரிமை சார்ந்த இந்த மசோதாக்களை கையெழுத்து போட்டு புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையுடன் எப்போதாவது எடப்பாடி கவர்னரை சந்தித்து இருக்கிறாரா... அவரும் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரையும், பிரதமர் மோடியையும் சந்திப்பது தமிழக உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காக அல்ல, அவர்களின் கட்சி பிரச்சினை சார்ந்தது.

    பா.ஜனதா என்பது ஆடியோ, வீடியோ வைத்து நடக்கிற கட்சி. உன் வீடியோ என்னிடம் இருக்கு, உன் ஆடியோ என்னிடம் இருக்கு என மிரட்டி கட்சி நடக்கிறது. அதுமட்டுமின்றி அது கவர்னர் பயிற்சி மையமாக உள்ளது. முன்பு இல.கணேசன், அக்காள் தமிழிசை சவுந்தரராஜன், இப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் கவர்னர்களாக மாறி இருக்கிறார்கள். மிக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆக்கப்படுவார். அவருக்கு இப்போதே நமது வாழ்த்துகள். எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜனதா தலைவர் ஆகிவிடுவார். அ.தி.மு.க.வை பா.ஜனதாவில் இணைத்து விடுவார். இவர்கள் எப்படி தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்கள்?.

    உங்களை அன்பாக, பணிவாக, பண்பாக, உரிமையாக, தலைவரின் மகனாக, அதைவிட கருணாநிதியின் பேரனாக கேட்கிறேன். தந்தை பெரியாரின் பேரனுக்கு, கருணாநிதியின் பேரன் நான் கேட்கிறேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். நன்றி.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் அணி துறை செயலாளர் கே.ஈ.பிரகாஷ் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம்.
    • கிட்டத்தட்ட 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கடந்த 3-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று அவர் மீண்டும் அதுபோன்ற புகார் மனுவை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம். அப்போது 238 வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு செய்தீர்களா? என கேட்டிருந்தனர். அதன்படி நாங்கள் பூத் வாரியாக சரிபார்த்தோம். அப்போது 30,056 பேர் உரிய முகவரியில் இல்லை. இறந்துபோன 7,947 பேர் இடம்பெற்று இருந்தனர். 1,009 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்று இருந்தனர்.

    இப்படி கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர்கள், அதாவது 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து விட்டோம். தற்போது இங்கும் தந்திருக்கிறோம். தற்போது அளித்துள்ள புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் தருவதைப் பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.

    தற்போது எதிர்க்கட்சிகள் அங்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலையை ஆளுங்கட்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். பாதுகாப்பு, மத்திய காவல்படையினர் கையில் வரவேண்டும் என தெரிவித்தார்.

    • 21 மாத கால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதற்கான விடை தெரியும் என்றார் எடப்ப்பாடி பழனிசாமி.

    ஈரோடு:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்கள் தான் வாக்களிக்கிறார்கள். மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். 21 மாத கால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதற்கான விடை தெரியும்.

    தி.மு.க. எந்த முன்னேற்றத்தையும் வைத்து ஓட்டு கேட்கவில்லை. பணத்தை வைத்து ஓட்டு கேட்கிறார்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய ஜனநாயக படுகொலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் எந்த அளவு விதிமீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகம், பத்திரிக்கை நண்பர்கள் மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

    எங்களைப் பற்றி விமர்சிக்க தி.மு.க.விற்கு அருகதை இல்லை. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் நடமாட்டம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிக்கப்படும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவில்லை.

    8 வழிச்சாலை திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது மவுனம் சாதிக்கின்றன. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத கட்சிகள் அனைத்தும் அடிமை கட்சிகள் தானே?

    தி.மு.க. வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை அதற்காக மத்திய அரசிடம் குரல் கொடுத்திருக்கிறார்களா? தி.மு.க.வுடன் அங்கம் வகிக்கிற கூட்டணி கட்சிகள் அனைத்தும் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தி.மு.க.விற்கு ஒத்தூதி கொண்டிருக்கின்றன என குற்றம்சாட்டினார்.

    • 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்குசட்டமன்ற தொகுதிக்கு 27-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்குசட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

    காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு உள்பட 77 பேர் களத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் காங்கிரசுக்கும், அ.தி.மு.க.வுக்கும்தான் நேரடி போட்டி நடக்கிறது.

    இருதரப்பினரும் தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 15-ந் தேதி முதல் 5 நாட்கள் ஓட்டுவேட்டை நடத்துகிறார்.

    இதுதவிர கூட்டணி கட்சிகளும் களம் இறங்கி பிரசாரம் நடத்த இருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெறுவதால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

    தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டு உள்ளன.

    தேர்தலையொட்டி 4 நிலை கண்காணிப்பு குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

    பல்வேறு இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்றால் அவைகள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன.

    பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே கடந்த 8-ந் தேதி சென்னை ஆவடி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 160 வீரர்கள் ஈரோட்டுக்கு வந்தார்கள்.

    மத்திய துணை ராணுவப்படை வீரர்களும் வரத் தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் ரெயில் மூலம் வந்தனர். நேற்று காலை மேலும் 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரெயில் மூலம் வந்தனர்.

    இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 4 கம்பெனி வீரர்கள் நேற்று மாலை வந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் ஒரு கம்பெனி வீரர்கள் ஈரோடு வர உள்ளனர்.

    மத்திய துணை ராணுவ வீரர்கள் வருகையை தொடர்ந்து நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்டு உள்ள இடங்களில் 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தொழிலக பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் ரதோர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 128 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள் 90 பேர், சட்டம்-ஒழுங்கு போலீசார் 30 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் கூறும்போது, "வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. நாளை (அதாவது இன்று) முதல் மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பதற்றமான பகுதிகளில் ரோந்து, வாகன சோதனை மற்றும் பறக்கும் படை குழுவில் பணி செய்வார்கள். நிலையான குழுவிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் தினத்தன்று பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ள 32 வாக்கு மையங்களிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்" என்றார்.

    இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பணி அதிகாரிகள் மற்றும் பெல் நிறுவன என்ஜினீயர்களும் ஈடுபட்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மேலும், ஒரு நோட்டாவுக்கான இடம் சேர்த்து 78 இடங்கள் வேண்டும். எனவே ஒரு கட்டுப்பாட்டு கருவியுடன் தலா 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் மொத்தம் 1,430 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும். ஏற்கனவே 286 எந்திரங்கள் தயாராக உள்ளன. எனவே கூடுதலாக 1,144 வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 3 நாட்களில் முடிந்து விடும்.

    பாதுகாப்புக்காக 5 கம்பெனி துணை ராணுவப்படை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே தேர்தல் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 93 வழக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

    இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.

    • சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
    • தமிழகத்திற்கு வேலைக்காக வந்துள்ள வடமாநிலத்தவர்களால் ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கிறது

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    இது ஈ.வே.ரா.வின் மண் என்றும், பெண்ணியம் பேசக்கூடிய மண் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை, திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை. இந்த கட்சிகள் தேர்தல்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

    பண பலமும் பதவி பலமும் இருக்கக் கூடிய இந்த அரசியல் களத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்று என்னை இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் பல இருக்கின்றன. குறிப்பாக குடிநீரே இப்போது நஞ்சாக மாறியிருக்கிறது. சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் மாநகரம் இப்போது கேன்சர் சிட்டியாக மாறி வருகிறது. இதையெல்லாம் முதலில் மாற்ற வேண்டும். அதேபோல் எங்களுக்கு அதிகாரம் வந்தால், மக்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் இழுத்து மூடுவோம்.

    தமிழகத்திற்குள் நுழைந்துள்ள வடமாநிலத்தவர்கள் தமிழர்களை அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காவல்துறை மீதே கைவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் இங்கே வந்து ஏதோ தொழில் செய்கிறார்கள் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் தொழிலை மீறி தவறான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. அவர்களால் ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கிறது. இதை நிச்சயம் தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அண்ணன் (சீமான்) சொல்வது சரிதான்.

    ஒரு பேனாவைக் கொண்டு கடலுக்கு நடுவில் வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்? கலைஞரின் நினைவாக, மக்களுக்காக அனைத்து வசதிகளையும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை அமைத்து கொடுங்கள். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஐயா கலைஞரை மக்களும் சந்தோஷமாக நினைப்பார்கள். அல்லது, ஐயாவின் நினைவாக பள்ளிக்கூடம் அமைத்துகொடுக்கலாம். இதையெல்லாம் மீறி பேனாவைத்தான் வைப்பேன், அதையும் கடலில்தான் வைப்பேன் என்று சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். இந்த விஷயத்தில் அண்ணன் சொல்வது சரிதான். பள்ளிகளை சீரமைக்க பணம் இல்லாதபோது, பேனா வைக்க எங்கிருந்து பணம் வரும்? என்று அண்ணன் கேட்பது நியாயம்தானே? பேனா சின்னம் வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது.
    • இதில் 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. இதில் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    வரும் 10-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வேட்புமனுதாக்கல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர்.

    • இடைத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.
    • அமமுகவின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு களத்தில் பரப்புரை பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். ஆகவே வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம்.

    இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக்கழக நிர்வாகிகளின் ஆலோசனையை கருத்தில் கொண்டு, இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

    மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • என்னுடைய பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
    • மக்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாலை மலர் யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    என் மகன் மறைந்த திருமகன் ஈவெரா, சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மக்களுக்கு நல்ல காரியங்களை செய்துள்ளார். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த பணிகளை நான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற முனைப்பில் போட்டியிடுகிறேன். என்னுடைய பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

    இங்கே மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் இங்கே இருக்கின்றன. அந்த பணிகளை செய்வதற்கு வாய்ப்பை தாருங்கள் என்று மக்களோடுதான் பேசிக்கொண்டிருக்கிறேனே தவிர, சீமான் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கெல்லாம் நான் முக்கியத்துவம் தருவதில்லை.

    என்னைப் பொருத்தவரை அதிமுவில் அவர்கள் பிரிந்து இருந்தாலும் சரி, இணைந்து இருந்தாலும் சரி ஒன்றுதான். ஈரோடு மக்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது. எனவே, எதிரணியில் எப்படி போட்டியிட்டாலும் எனக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×