search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா சிவராத்திரி"

    • மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
    • பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    சேலம்:

    சேலத்தில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆடு, கோழிகளை கடித்தபடி பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் மாசி அமாவாசை அன்று நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. பல 100 ஆண்டுகளாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

    குறிப்பாக சேலம் டவுன் தேர்வீதி, ஜான்சன்பேட்டை, வின்சென்ட், கிச்சிப்பாளையம் நாராயண நகர் ஏரிக்கரை மற்றும் ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளங்களுடன் ஆங்காங்கே உள்ள சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, அங்காள பரமேஸ்வரி உள்பட பல்வேறு அம்மன்கள் வேடம் அணிந்து ஆடியவாறு சென்றனர். அப்போது, வழிநெடுக திரளான பக்தர்கள் நின்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி, சாமியாடியவாறு வந்தவர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்து வேண்டிக்கொண்டனர்.

     மேலும் ஆட்டுகுட்டிகளை வாங்கிய பக்தர்கள், அதை தங்கள் கழுத்து மேல் தூக்கி போட்டு ஆடியதோடு, ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்ததையும் காண முடிந்தது. இது ஒருபுறம் இருக்க, சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி சென்றனர்.

    மேலும், சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைக்குழியில் கிடந்த இறந்த மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆகியவற்றுடன் ஆடு, கோழிகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

    இந்த காட்சிகள் சாலையில் நின்றிருந்த பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சியை யொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ரோஷத்துடன் சாமியாடி வந்த பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், தீராத நோய்கள் குணமாகவும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சாமி வேடம் அணிந்திருந்தவர்கள் தாண்டி ஆக்ரோஷமாக சென்றனர்.

    • பொது இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் ஊரை நோக்கி தேரை எடுத்துச் சென்றனர்.
    • தேரை வளைத்த நாகேஸ்வரராவ், டிராக்டர் டிரைவர் கண்டுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், சிலக்கலுபேட்டை அடுத்த யாதவல்லியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு டிராக்டரின் மேல் பிரம்மாண்ட தேர் தயார் செய்தனர்.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பொது இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் ஊரை நோக்கி தேரை எடுத்துச் சென்றனர்.

    அப்போது கொட்டப்ப கொண்டா என்ற இடத்தில் தேர் சென்றபோது மின்கம்பியில் உரசாமல் இருப்பதற்காக தேரின் மேல் பகுதியை லேசாக வளைத்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக தேர் திடீரென சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் தேரை வளைத்த நாகேஸ்வரராவ், டிராக்டர் டிரைவர் கண்டுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    மேலும் டிராக்டரின் முன் பகுதி நொறுங்கியது. அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    • கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
    • கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று இரவு முழுவதும் அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    இதனை தொடர்ந்து தாழம்பூ சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல லட்சம் பக்தர்கள் ஓம் நமசிவாய எனும் சிவ மந்திரத்தை உச்சரித்தவாரே பக்தி பரவசத்துடன் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வணங்கினர்.

    கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

    கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே இரவில் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்ததால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தெருக்களிலும், சாலையோரங்களில் 4 சக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற வெளியூர் பக்தர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களால் சில இடங்களில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.

    திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 12 மணி நேர சிவராத்திரி விழாவை உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி கிரிவலம் வந்த பக்தர்களும் கண்டு ரசித்தனர்.

    மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவின் 8-வது நாள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்த ருளினர். கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் இருந்து தேரோட்டம் நடந்தது. சிவ கோஷத்துடன் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை முன்னி ட்டு கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முன்னதாக பக்தர்கள் அங்குள்ள நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.
    • வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து சனீஸ்வரரை வழிபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் நேற்று மாலை முதல் நடை சாத்தப்படாமல் 4 கால பூஜைகள் நடந்தது. நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் விடிய விடிய தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து இன்று விடுமுறை தினமான சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டனர்.

    முன்னதாக பக்தர்கள் அங்குள்ள நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.

    சென்னை, திருச்சி, கோவை, சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து சனீஸ்வரரை வழிபட்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர்.
    • உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 101 வருடங்களுக்கு மேலாக நடப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு சிவராத்தியை முன்னிட்டு அதே பகுதியை சேர்ந்த முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் நேற்று இரவு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுட்டனர். இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவிலில் திரண்டனர்.

    கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவார்கள். முன்னதாக பாசிப் பயிறு, தட்டாம் பயிறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் போட்டு இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

    மகா சிவராத்தரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும், எவ்வித நோயும் வராது என்பதும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இதற்கான நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அப்பத்தை பிரசாதமாக வாங்கி சென்றனர்.

    கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் மூதாட்டி முத்தம்மாள் கடந்த 61 வருடங்களாக சிவராத்தியன்று விரதம் இருந்து இதனை செய்து வருகிறார்.

    • நம் பாரத கலாச்சாரத்தில் மகா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ஈஷா மகா சிவராத்திரி விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன்.

    ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பெருமிதத்துடன் கூறினார்.

    கோவை ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை கோலாகலமாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் திரு.ஜகதீப் தன்கர் அவர்கள் விழாவில் பேசியதாவது:-

    சத்குரு முன்னிலையில் நடத்தப்படும் ஈஷா மகா சிவராத்திரி விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன். நம் பாரத கலாச்சாரத்தில் மகா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஈஷாவில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழாவானது தனித்துவமானது; ஈடு இணையற்றது. உலகம் முழுவதும் உள்ள நவீன காலத்து இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

    மதம், மொழி, இனம், தேசம், கலாச்சாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக இது திகழ்கிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது. அத்துடன் ஈஷாவில் கர்மா, பக்தி, ஞானம், க்ரியா என நான்கு மார்கங்களிலும் யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    சத்குரு அவர்கள் யோகாவை உலகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்று வருகிறார். மனித குல நல்வாழ்விற்காக அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்

    இவ்விழாவில் சத்குரு தொடக்க உரையாற்றுகையில், "இன்று நடைபெறும் மகாசிவராத்திரி விழா ஈஷாவில் நடத்தப்படும் 30-வது மகா சிவராத்திரி விழாவாகும். 1994-ம் ஆண்டு நாம் நடத்திய மகா சிவராத்திரி விழா, வெறும் 70 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டது. அப்போது 75 வயது பாட்டி ஒருவர் இரண்டே பாடலை இரவும் முழுவதும் பாடிக் கொண்டேயிருப்பார்.

    இருப்பினும் அவருடைய பக்தி மெய் சிலிர்க்க வைக்கக்கூடியது. கடந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவை மட்டும் உலகம் முழுவதுமிருந்து சுமார் 14 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மகாசிவராத்திரி நாளில் கோள்களின் அமைப்பால், ஒருவரின் உயிர் சக்தியானது இயல்பாகவே மேல்நோக்கி செல்லும். எனவே இந்நாள் வெறும் விழிப்புடன் மட்டுமே இருக்கும் நாளாக இல்லாமல், நம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை விழிப்படைய செய்யும் நாளாகவும் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்." எனக் கூறினார்.

    இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் மட்டுமின்றி அவரது மனைவி டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவிற்கு வந்த அவர்களை சத்குரு வரவேற்றார். பின்னர் அவர்கள் ஈஷாவில் உள்ள சூரிய குண்டம், நாகா சந்நிதி, லிங்க பைரவி, தியான லிங்கம் உள்ளிட்ட சக்தி தலங்களுக்கு சென்று தரிசித்தனர். மேலும் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத க்ரியா நிகழ்விலும் பங்கேற்றனர்.

    நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய விழா இன்று காலை 6 மணி வரை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகவும் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழா மேடையானது வாரணாசி கோவில் கோபுரங்களின் தோற்றத்துடன் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டிருந்து, இது அனைவரையும் கவர்ந்திழுத்தது.

    இரவு முழுவதும் களைகட்டிய கலை நிகழ்ச்சிகளில் கிராமிய விருது வென்ற பாடகர் சங்கர் மஹாதேவனின் இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து தெய்வீகம், விவசாயம் மற்றும் மண் சார்ந்த பாடல்களை தன் கம்பீர குரலால் பாடி அரங்கை அதிர செய்தார் தமிழ் நாட்டுபுற பாடகர் மகாலிங்கம்.

    அதுமட்டுமின்றி மும்பை தாராவியை சேர்ந்த இளைஞர்கள் தமிழிலும், இந்தியிலும் ராப் பாடல்களை பாடி மக்களின் உற்சாகத்தை பன்மடங்கு கூட்டினர். மேலும் லெபனீஸ் டிரம்ஸ் இசைக்குழுவினர், கர்நாடக இசையின் புகழ்பெற்ற பாடகர் சந்தீப் நாரயணன், பிரதிவி கர்தவ் மற்றும் சூஃபி பாடகர்கள், குரு தாஸ் மன், ரதஜீத் பட்டாசர்ஜி உள்ளிட்ட உலகின் தலைச்சிறந்த கலைஞர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

    • மகா சிவராத்திரி கொண்டாட்டம் நாளை அதிகாலை வரை நடக்கிறது.
    • 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கி தொடங்கியது. மகா சிவராத்திரி கொண்டாட்டம் நாளை அதிகாலை வரை நடக்கிறது.

    விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

    மேலும், துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ஈஷா யோக மையத்தில் தொடங்கியுள்ள மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். மேலும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில கவர்னர்களும் பங்கேற்றுள்ளனர்.


    • இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு.
    • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தங்களது குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

    இதற்காக நிலக்கோட்டையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திடியன் மலை அடிவாரத்தில் உள்ள வாலகுருநாதன் கோவிலுக்கு பாரம்பரியமாக இரட்டை மாட்டு டயர் வண்டியில் பங்காளிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து புறப்பட்டனர்.

    நிலக்கோட்டையில் வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சாமிபெட்டி அழைப்புடன் நிலக்கோட்டை, மெயின் பஜார், அணைப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வந்து கருப்புசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் ஊர்வலம் தொடங்கி மாட்டு வண்டியில் கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து 7 வருடத்திற்கு ஒருமுறை மாட்டு டயர் வண்டி மூலமாக குடும்பம் குடும்பமாக அனைவரும் மாசிமகா சிவராத்திரி விழாவுக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நாங்கள் சலங்கை கட்டிய மாட்டுடன் பாரம்பரிய முறையில் செல்கிறோம்.

    இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இந்த பயணம் வருங்கால சந்ததியினருக்கும் வழிகாட்ட வேண்டும் என்றனர். இதனை வழிநெடுகிலும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரித்துடன் கண்டு ரசித்தனர்.

    • துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    • ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

    கோவை:

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

    இதற்காக ஜகதீப் தன்கர் இன்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

    பின்னர் சாலை மார்க்கமாக ஜகதீப் தன்கர் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். மாலை 5.40 மணி முதல் இரவு 7 மணி வரை அவர் அங்கு நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அவர் மீண்டும் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


    ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். மேலும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில கவர்னர்களும் பங்கேற்கிறார்கள்.

    இதுதவிர மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி பிரதிமா பவுமிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
    • 4 கால பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் 8 நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆடி, தை, அமாவாசை நாட்களிலும், மகா சிவராத்திரி அன்றும் சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அதன்படி இன்று சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதலே சென்னை, திருச்சி, கோவை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.

    இன்று அதிகாலை 6 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் மலையேற அனுமதித்தனர்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர். மலைப்பாதையில் உள்ள சங்கிலிப்பாறை, வழுக்குபாறை, மாங்கனி ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்ததால் அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் 4 கால பூஜைகள் விடிய, விடிய நடைபெறுகிறது. ஆனால் இந்த பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலையேறிய பக்தர்கள் இன்று மாலை 4 மணிக்குள் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து விட வேண்டு மென வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு மலையடி வாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கி ஆடுகளை பலியிட்டு அன்னதானம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறை, சதுரகிரி கோவில் பகுதிளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மகா சிவராத்திரி அன்று சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி வழிபாடு நடத்துவார்கள். ஆனால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இரவு தங்க அனுமதி வழங்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • இன்று மங்கலகரமான வெள்ளிக் கிழமை, சிவராத்திரி.
    • சிவராத்திரி அன்று உபவாசம் இருக்க வேண்டும்.

    இன்று மங்கலகரமான வெள்ளிக் கிழமை. சிவராத்திரி. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இரவு உறங்காமல் சிவபூஜை, சிவ நாமஜெபம், சிவ தியானம், சிவபஜனை, சிவதரிசனம், சிவத்தொண்டு ஆகியவற்றைச் செய்ய வேண்டும். நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால், மகத்தான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

    சிவாலயத்தில் பலிபீடத்துக்கு அருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.

    கிழக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். தெற்கு, மேற்கு நோக்கிய சந்நதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். சிவராத்திரி அன்று உபவாசம் இருக்க வேண்டும்.

    உபவாசம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உபவாசம் என்பது உப+வாசம் என்று பிரியும். இறைவனுக்கு அருகில் செல்வது உண்ணாநோன்பு. அனேகமாக அனைத்து சமயநூல்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன.

    உண்ணாநோன்பு என்பது உயிருக்கும் மட்டுமல்லாமல் உடலுக்கும் நன்மை செய்கின்றது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை எல்லாம் உண்ணாநோன்பு வெளியேற்றுகின்றது. விரத நாளில் உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல, கெட்ட எண்ணங்களை எண்ணாமல் இருப்பதே உபவாசம் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

    சிவராத்திரியின் நோக்கம் என்னவென்றால் ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அவனுக்கு வேண்டிய குணங்கள் பொறுமை, மவுனம், அகிம்சை, சத்தியம், தயை, தானம், தூய்மை, புலனடக்கம். அக விழிப்புணர்வைத் தூண்டும் இந்த குணங்களை அடையச் செய்வதே சிவராத்திரியின் நோக்கமாகும்.

    இறைவனின் பெயர்களை 16 முறை சொல்லி பூஜிப்பது ஷோடச பூஜை. 108 முறை சொல்லி பூஜை செய்வது அஷ்டோத்திரம். முன்னூறு முறை இறைவனின் நாமங்களை சொல்லி பூஜிப்பது திரிசதி. ஆயிரம் முறை சொல்லி பூஜிப்பது சகஸ்ரநாம அர்ச்சனை. ஒரு லட்சம் முறை சொல்லி பூஜிப்பது லட்சார்ச்சனை. ஒரு கோடி முறை சொல்லி பூஜை செய்வது கோடி அர்ச்சனை. சிவநாமத்தை ஒரு கோடி முறை சொல்வதன் மூலமாக பிறவிப்பிணி அகன்று பிறவாப் பேரின்பநிலை பிறக்கும்.

    ×