search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்மஸ்ரீ விருது"

    • கடந்த 2021 ஆம் ஆண்டு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
    • பிரதமர் மோடி பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார்.

    விவசாயத்தில் பங்களிப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் (109) பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 100 வயதை கடந்தும் இயயற்கை விவசாயம், ஆரோக்கிய உணவு பழக்கம் என சுறுசுறுப்பாக வலம் வந்தவர் ஆவார்.

    சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் தனது வாழ்க்கையை விவசாயத்திற்காக அர்ப்பணித்தார். விவசாயத்தை முறையாக கற்றுக் கொள்ள தமிழக வேளான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராகவும் இருந்தார்.

    விவயாசயத்தில் இவர் செய்த சாதனைகளை பாராட்டும் வகையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. கோவையை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த பாப்பம்மாளை கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்த போது, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். 

    • கமலா பூஜாரி ஜி மறைவு வேதனை அளிக்கிறது.
    • பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தார்.

    பத்மஸ்ரீ விருது பெற்றவரும் புகழ்பெற்ற இயற்கை விவசாயியுமான கமலா பூஜாரி. அவருக்கு வயது 74, அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரகம் தொடர்பான நோயால் இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த கமலா பூஜாரி சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

    கோராபுட் மாவட்டத்தில் உள்ள பைபரிகுடா தொகுதியின் பத்ராபுட் கிராமத்தில் பிறந்த பூஜாரி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவராகவும், 100 வகையான அரிசிகளை அறுவடை செய்தவராகவும் இருந்தார். அவர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்.

    அவருக்கு 2019 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் 2018 ஆம் ஆண்டில் மாநில திட்டமிடல் குழுவில் உறுப்பினராக இருந்தார் மற்றும் 2004 ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தால் சிறந்த விவசாயி விருதைப் பெற்றார்.

    2002 இல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 'ஈக்வேட்டர் இனிஷியேட்டிவ் விருதை' வென்றார்.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மோகன் சரண் மாஜி, அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்தார். பூஜாரியின் மகன் தங்கதர் பூஜாரியிடமும் மாஜி தொலைபேசியில் பேசினார்.

    "விவசாயத் துறையில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்" என்று ஒடிசா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார் அதில்,

    கமலா பூஜாரி ஜி மறைவு வேதனை அளிக்கிறது. அவர் விவசாயத்திற்கு ஒரு மகத்தான பங்களிப்பைச் செய்தார், குறிப்பாக இயற்கை விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு விதைகளைப் பாதுகாத்தல். நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும் அவர் ஆற்றிய பணி பல ஆண்டுகளாக நினைவுகூரப்படும். பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
    • நடிகர் பவன் கல்யாணின் 'பீமலா நாயக்'கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார்.

    தெலுங்கானாவை சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. இவர் கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் எஞ்சியிருப்பவர். கின்னேரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும்.

    அரிய இசைக்கருவியான 'கின்னரா'வை புதுப்பித்ததற்காக, தர்ஷனம் மொகிலையாவுக்கு 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இதையடுத்து அப்போதைய முதல்-மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்த தர்ஷன் மொகிலையாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஐதராபாத்தில் அரசு சார்பில் ஒரு வீட்டு மனை ஒதுக்குவதாகவும், அதன் கட்டுமானம் மற்றும் இதர செலவுகளுக்காக 1 கோடி ரூபாய் வழங்குவதாகவும் முதல்-மந்திரி தெரிவித்தார்.

    இந்நிலையில், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற தர்ஷன் மொகிலையாவின் தற்போதைய நிலை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    ஐதராபாத் அருகே துர்க்காயமஞ்சலில் உள்ள கட்டுமான தளத்தில் மொகிலையா வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து மொகிலையா கூறும் போது, "எனது மகன்களில் ஒருவன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான். எனக்கும், என் மகனுக்கும் மருந்துக்கு மட்டும் மாதம் 7,000 ரூபாய் தேவைப்படுகிறது. பிறகு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இதர செலவுகள் உள்ளன. அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது. ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து கேட்ட போது, அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார்.

    மேலும் ரூ.1 கோடி மானியத்துடன் ராங்காரெட்டி மாவட்டத்தில் 600 சதுர அடி கொண்ட இடத்தை ஒதுக்குவதாக அரசு கூறியது. ஆனால் அந்த ஒதுக்கீடு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றார்.

    முன்னதாக, நடிகர் பவன் கல்யாணின் 'பீமலா நாயக்'கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன

    2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.

    இந்நிலையில், இன்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு, பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    விளையிட்டு துறையில் சிறந்து விளங்கிய டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஹன் போபண்ணாவிற்கு பதம்ஸ்ரீ விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    கலைத் துறையில் சிறந்து விளங்கிய பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

    கலைத் துறையில் சிறந்து விளங்கிய நாட்டுப்புற நடனக் கலைஞர் நாராயணன் ஈபி, வங்கதேச பாடகி திருமதி ரெஸ்வானா சவுத்ரி பன்யா, பஜனை பாடகர் ஸ்ரீ கலுராம் பாமணியா ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய தேஜஸ் மதுசூதன் படேல் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கிய சீதாராம் ஜிண்டாலுக்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    சமூக பணி துறையில் சிறந்து விளங்கிய பிந்தேஷ்வர் பதக்கிற்கு (மரணத்திற்கு பின்) பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விருதை அவரின் மனைவி அமோலா பதக் பெற்று கொண்டார்.

    விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோஹியாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய ராம் சேத் சவுத்ரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மனோகர் கிருஷ்ணா டோலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    • பத்ம விருது பெற தேர்வாகியுள்ளவர்களுக்கு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருது பெறுகிறார்கள்.

    பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த் ஆகியோருக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்திய நாட்டின் இரண்டாவது உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்ம விபூஷன் விருது பெற்ற கலைஞர்கள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமணியம், பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமிய கலையான கும்மி ஆட்ட பயிற்சியாளர் பத்தரப்பன், சின்னப்பா, இயற்கை விவசாயி செல்லம்மாள் உள்ளிட்ட விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

    • “ஆழி சூழ் உலகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
    • நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன்.

    நெல்லை:

    குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி பத்ம விபூஷன் விருது 5 பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்து பாளை புனித சவேரியார் பள்ளியில் அவர் தனது உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.

    தமிழ் நெய்தல் குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் இவர் பணியாற்றினார். இவர் கொற்கை, ஆழிசூழ் உலகு உள்ளிட்ட பல நாவல்களையும், புலம்பல்கள் என்ற கவிதையையும், விடியாத பொழுதுகள் உள்ளிட்ட ஏராளமான ஆவண படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனங்களை இவர் எழுதி உள்ளார்.

    இந்நிலையில் அவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடற்கரை மக்களுக்கான அங்கீகாரமாக இதனை நான் பார்க்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை.

    நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன். அந்த வகையில் அதனை மத்திய அரசு அங்கீகரித்திருப்பதில், கடலோர மக்களை அரசு மதிக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம் என்றார்.

    • வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
    • பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூரில் 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி பிறந்தவர் பத்ரப்பன். வள்ளி கும்மியாட்ட கலைஞராக உள்ளார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பத்ரப்பன், சிறுவயது முதலே கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்டு இருந்தார். அதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்க ளில் வள்ளி கும்மி என்னும் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

    இதுதவிர 20 ஆண்டுகளில் தாசனூரில் உள்ள மாணவ, மாணவிகள் 170 பேருக்கு இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்தார். மேட்டுப்பாளையம் நகராட்சி ராஜபுரத்தில் உள்ள மகளிர் குழுவிற்கும் இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்துள்ளார்.

    வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

    கிராமிய கலையான வள்ளி கும்மி கலையில் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஈடுபட்டு வந்த நிலையில், அதை மாற்றி பெண்களும் அதிகளவில் பங்கேற்கவும், அவர்களுக்கு பயிற்சியும் அளித்த பெருமைக்குரியவர் பத்ரப்பன்.

    அந்த கலையின் வாயிலாக தேசப்பற்று, வரலாறு ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    தொடர்ந்து வள்ளி கும்மி கலைக்கு சேவையாற்றி வரும் இவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.

    இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும், நக்கீரன் என்ற மகனும், முத்தம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவியும், மகனும் இறந்துவிட்டதால் தனது மகள் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்து விவசாயம் பார்த்து வருகிறார். முத்தம்மாளின் கணவர் ரங்கசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.


    பத்மஸ்ரீவிருது குறித்து பத்ரப்பன் கூறியதாவது:-

    நாட்டுப்புற கலை என்பது இயல்பாகவே நம் மண்ணில் உருவானது. இந்த கலைவடிவம் மூலம் தான் மற்ற தகவல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும். நான் 20 வயதில் இருந்தே வள்ளி கும்மி நடனம் ஆடி வருகிறேன்.

    இக்கலை என்னோடு அழிந்து விடாமல் இருப்பதற்காக மேட்டு ப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்டோருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்.

    அவர்கள் தற்போது பல பேருக்கு கற்றுக்கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கலைகளுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளி கும்மி கலை உள்ளது. இதன்மூலம் உடலில் நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். பாரம்பரிய கலை, பண்பாடு, பழக்க வழக்கம், ஒழுக்கத்தை தர முடியும்.

    பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும். 87 வயதில் எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வள்ளி கும்மி மட்டுமல்லாமல் மற்ற கலைத்துறைகளிலும் உள்ளவர்கள் ஊக்கத்துடன் செயல்பட இந்த விருது துணை புரியும். எனக்கு விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறனே். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை நான் எனக்காக கருதாமல் ஒட்டுமொத்த கிராமிய கலைஞர்களுக்கு கிடை க்கும் பரிசாகவும், அங்கீகாரமாகவும் கருதுகிறேன்.

    நான் ஏற்கனவே தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைமுதுமணி விருதுகளை பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ள பத்ரப்பனை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து எல் முருகன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதவாது

    ஒயிலாட்ட நாட்டுப்புற கலைகளின் முன்னோடியான, அய்யா பத்ரப்பன் அவர்களுக்கு, மத்திய அரசு "பத்மஶ்ரீ" விருது அறிவித்ததை அடுத்து உடனடியாக அவர்களது இல்லதிற்கு சென்று ஐயா அவர்களை நேரில் சந்தி்த்து மிகுந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன்.

    வள்ளிக்கும்மி எனும் நாட்டுப்புற நடனத்தில் இடம்பெறும் பாடல்கள் மூலம், தெய்வங்களின் வரலாறு, தேச வரலாறு மற்றும் சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து பேசுபவர்.

    ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கலையில், பெண்களுக்கும் சமமான அதிகாரமளித்து பயிற்சி கொடுத்த முன்னோடி.

    தொடர்ந்து 66 ஆண்டு காலமாக தான் நேசித்து செய்யும் இக்கலையின் மூலம், 150-க்கும் மேற்பட்ட தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி, குருவாக்கியுள்ளார். 300-க்கும் அதிகமான "கும்மி" நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.
    • கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி.

    2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த பத்திரப்பன் என்பவருக்கு கலைப்பிரிவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

    கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் என்பவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    87 வயதான பத்ரப்பன் தனது நடனம் மூலம் இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.

    கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் கவுரவிக்கப்படுகிறார்.

    இதில், பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மாலிக் மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

    தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், "குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்" என காட்டமாக பதிவிட்டார்.

    பஜ்ரங் புன்யாவை தொடர்ந்து, மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும் தடகள வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து விரேந்தர் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "எனது சகோதரியும், நாட்டின் மகளுக்காக, பிரதமர் நரேந்திர மோடியிடம் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன். உங்கள் மகள் மற்றும் எனது சகோதரி சாக்ஷி மாலிக்கைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். ஆனால், தங்களின் முடிவையும் முன்வைக்க வேண்டும் என நாட்டின் முன்னணி வீரர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ராவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

    • 300 இருளர்களில் ஒருவர் கூட மாநில, மத்திய அரசு பணியில் இல்லை என தெரிகிறது.
    • படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பிரதிநிதிகளை என்னிடம் பேச சொல்லுங்கள்.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பாக பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரின் வீட்டுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று அவர்களுக்கு வாழ்த்து கூறினார். அவர்கள் இருவரும் அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் போது எடுத்த புகைப்படங்களை அவர் பார்வையிட்டார்.

    பின்னர் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    நான் இங்கு வந்தது உங்களை புரிந்து கொள்ளவும், உங்கள் பிரசனைகளை தெரிந்து கொள்வதற்காகவும்தான், இருவருக்கும் வெகு விரைவில் ஜனாதிபதி பத்மஸ்ரீ விருதை வழங்க உள்ளார்.

    பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. இருளர் பழங்குடியின மக்கள் தொன்று தொட்டு பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இருளர் பழங்குடியின மக்களை பற்றி ஒருவரும் பேசுவதில்லை. இது வருந்தத்தக்க விஷயம். இந்தியாவில் பல இடங்களில் பாம்பு கடி பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்களால்தான் அந்த மருந்து தயாரிக்கப்படுகிறது என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அது வருந்தத்தக்கது. இதனை ஒரு தொழிலாக பாவித்து அதனை அங்கீகரிக்க வேண்டும். இருளர்கள் பாம்பு பிடித்து மனித உயிர்களை காப்பாற்றுகின்றனர்.

    நாம் இவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவித்தால் போதாது. அவர்களுக்கான மரியாதையை பெற்று தர வேண்டும். இருளர்களுக்கு டாக்டர்களுக்கு தரும் மரியாதையை வழங்க வேண்டும். சில தொழில்நுட்பங்களை பாம்பு பிடி தொழிலில் கொண்டு வர வேண்டும். டாக்டர்கள் பல்வேறு அங்கீகாரத்துடன் வசதியாக வாழ்கின்றனர். ஆனால் இருளர் இன மக்கள் வறுமையில் வாடுகின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் பல திட்டங்களை இருளர் இன மக்களுக்காக செய்துள்ளன. அவர்களில் ஒரு சிலர் முன்னேறி இருந்தாலும், பலர் வறுமையில் வாடுகின்றனர்.

    ஒரு இருளர் காலனி என்பது மற்ற இடங்களை போல தார் சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற வேண்டும்.

    இங்குள்ள 300 இருளர்களில் ஒருவர் கூட மாநில, மத்திய அரசு பணியில் இல்லை என தெரிகிறது. படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பிரதிநிதிகளை என்னிடம் பேச சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்து தருகிறேன். மாசி சடையன், வடிவேல் கோபால் அவர்களின் வீட்டுக்கு சென்றேன். என்னை மிகுந்த அன்போடு வரவேற்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சி முடிந்த பின்பு, சென்னேரி அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்று அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் மாணவர்கள் படித்து எதிர்காலத்தில் எந்த வேலைக்கு போக போகிறீர்கள் எனவும் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×