என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் தினம்"
- நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது.
- தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பால் பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐதராபாத்:
நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ந் தேதிவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனுதவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார்.
தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பையடுத்து பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நாளை சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- பெண்களுக்கு தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
நாளை (புதன்கிழமை) சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பெண்களுக்கு தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் மகளிர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டனர்.
- வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்.
- இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம்.
சென்னை:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்" என்ற பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்.
பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சித் திட்டங்களால் செய்து காட்டுவது தான் மாடல் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெண்ணினக் காவலர் கலைஞர் அவர்களும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம்.
'பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு, மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்போ' என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம். பெண்ணுரிமை காப்போம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம்!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தடைக் கற்களை உடைத்து பாதை அமைத்து கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை.
- பெண்களுக்கு கல்வி எனும் அடிப்படை உரிமையை கொடுப்பதில் நாம் உறுதி கொள்வோம்.
கன்னியாகுமரி:
மகளிர் தினத்தையொட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
சமூகத்தின் கண்களாக விளங்கி, நாட்டின் தூண்களாக தாங்கி, வீட்டின் விளக்காக ஒளி தரும் பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
பள்ளி கூடங்களில், கல்லூரிகளில், அலுவலகங்களில் மட்டுமின்றி இன்று நாட்டின் மிக முக்கிய பொறுப்புகளில் பெண்கள் சிறந்து விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நமது நாட்டின் எல்லா துறைகளிலும் நமது கொடியை உச்சத்தில் பறக்க விட பெண்கள் முன் நிற்கிறார்கள் என்றால் மிகையாகாது. இதற்காக அவர்கள் செய்கின்ற தியாகங்களும், நேரிடும் இன்னல்களும் எண்ணற்றவை. அவற்றை எல்லாம் கடந்து பெண்கள் சமூகத்தில் மிளிர்கிறார்கள் என்றால் அதுவே பெண் சக்தி.
பெண்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் தடைக் கற்களை உடைத்து அவர்களுக்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தட்டிக்கேட்டு அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமையாக கருதுவோம். பெண்களுக்கு கல்வி எனும் அடிப்படை உரிமையை கொடுப்பதில் நாம் உறுதி கொள்வோம். மகளிருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்கள் சுதந்திரமாக வாழ வழி வகுப்போம்.
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
இவ்வாறு விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழத்துகளை தெரிவித்துள்ளார்.
- இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது என்றார்.
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக சர்வதேச மகளிர் தினம் 2023 அமையட்டும்.
- பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே நமது திராவிட மாடல்.
சென்னை:
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக சர்வதேச மகளிர் தினம் 2023 அமையட்டும்!
பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே நமது திராவிட மாடல்!
பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!" என்று கூறியுள்ளார்.
- சிறந்த மாவட்ட கலெக்டர்களுக்கான விருது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு முதல் பரிசாக கிடைத்தது.
- கருணை அடிப்படையிலான பணி ஆணைகள் தமிழரசி, சுபா, சோபியா ஹரிணி, ராஜலெட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சென்னை:
சென்னை எத்திராஜ் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எலெக்ட்ரிக் ரெயில் முதல் பெண் ஓட்டுனர் திலகவதி, டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, தீயணைப்புத்துறை அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், மீனாட்சி விஜயகுமார், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ரசீதா பேகம், இசைத்துறையில் சாதனை படைத்த மாற்று திறனாளி ஜோதிகலை ஆகியோர் சேர்ந்து பூங்கொத்து வழங்கினர். பின்னர் இவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு விருதுகளையும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்றவர்கள் விவரம்,
அவ்வையார் விருது நீலகிரி கமலம் சின்ன சாமிக்கும் வழங்கப்பட்டது. இலக்கியம் சமூக பணியில் சிறந்து பணியாற்றி தொண்டாற்றி வரும் இவருக்கு 90 வயதாகிறது. 43 நூல்கள் எழுதி உள்ள முனைவர் கமலம் சின்னசாமி பெண்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வாதாரத்தை வலுவாக்க பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார்.
இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து அவ்வையார் விருது வழங்கி பாராட்டு சான்றிதழ், 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
சேலம் இளம்பிறைக்கு பெண் குழந்தை விருது கிடைத்தது. இவர் சேலம் புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். அறிவியல் ஆர்வம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கி பழுதானால் அதை சரி செய்ய புது கருவி கண்டுபிடித்ததற்காக இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
சிறந்த மாவட்ட கலெக்டர்களுக்கான விருது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு முதல் பரிசாக கிடைத்தது.
பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் நலன் பாதுகாப்பை திறம்பட செயல்படுத்தியதற்காக கிடைத்த இந்த விருதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றுக்கொண்டார்.
நாகப்பட்டின மாவட்ட நிர்வாகம் 2-ம் பரிசையும், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் 3-ம் பரிசையும் பெற்றது. இதை அந்தந்த கலெக்டர்கள் பெற்றுக்கொண்டனர்.
கருணை அடிப்படையிலான பணி ஆணைகள் தமிழரசி, சுபா, சோபியா ஹரிணி, ராஜலெட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விருது மற்றும் பணி ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
விழா நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது மகளிர் முன்னேற்றத்திற்கு தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் பங்கேற்றனர்.
- பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது.
- ஒரு ஆணே பெண்ணிலிருந்து பிறக்கிறான் எனும்போது அவன் உயர்வாகவும் அவள் தாழ்வாகவும் எப்படி இருக்கமுடியும்.
சர்வதேச அளவில் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தையொட்டி சத்குரு அவர்கள் ட்விட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
"பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது. ஒரு ஆணே பெண்ணிலிருந்து பிறக்கிறான் எனும்போது அவன் உயர்வாகவும் அவள் தாழ்வாகவும் எப்படி இருக்கமுடியும்."
https://twitter.com/IshaTamil/status/1633293963330490368?t=WErZ94b9C6OJYkLPee0R-A&s=19
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
- குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இவருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு மே 29-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வாவுக்கு திருமணம் நடந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த தம்பதியினருக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று உமேஷ் யாதவ் - தன்யா தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து உமேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Blessed with baby girl ❤️ pic.twitter.com/nnVDqJjDGs
— Umesh Yaadav (@y_umesh) March 8, 2023
மகளிர் தின நாளில் உமேஷ் யாதவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3- வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரை ஜெயிலில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள் கொண்டாடினர்.
- இதில் 35-க்கும் மேற்பட்ட ஜெயில் பெண் ஊழியர்கள், கைதிகள் நெய்த சுங்குடி சேலையை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.
மதுரை
தென் தமிழகத்தில் மிகப்பெரிய ஜெயில்களில் ஒன்று மதுரை மத்திய ஜெயில் ஆகும். இங்கு 1,850 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பெண் கைதிகள் தனி சிறையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிறையில் இருக்கும் போது பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.
அதில் உணவு தயாரிப்பது, தையல், தறி நெய்தல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். பெண் கைதிகள் தயாரிப்பில் நெய்யப்படும் சுங்கடி சேலைகள் ஜெயில் பஜார் அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மதுரை ஜெயிலில் மகளிர் தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 35-க்கும் மேற்பட்ட ஜெயில் பெண் ஊழியர்கள், கைதிகள் நெய்த சுங்குடி சேலையை அணிந்து விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பெண் கைதிகள் ரசித்து பார்த்தனர்.
இந்த விழாவில் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன், ஜெயிலர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரி பழனிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
- மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.
- அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.
சென்னை:
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.
இந்த 10 விளையாட்டுகளில் ஒன்றான நீச்சல் போட்டிகள் 10 இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.
வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு போட்டி தொடங் குகிறது. 11, 14, 17, 25, 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.
ஓபன் பிரிவு போட்டியான இதில் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றும் admin@tnsaa.in என்ற இ-மெயிலில் (97915 28636) பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
- பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும்.
- குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும்.
சென்னை:
மகளிர் தினத்தையொட்டி நடந்த கலந்துரையாடலில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சு இன்று டுவிட்டரில் பதிவிடப்பட்டு உள்ளது.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஆணுக்கு நிகர் பெண் என மகள்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.
இன்று வளர்ந்து வரும் நம் மகள்களிடையே நம்பிக்கையை வளர்த்து அவர்கள் ஆணுக்கு சமமான பாலினத்தவர்களாக இருப்பதற்கு தகுதியானவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும். அப்படி செய்யும்போது அவர்கள் தனிப்பட்ட முறையில் வளர்வது மட்டுமின்றி தங்கள் தேசத்தை வலிமையடையச் செய்கிறார்கள். உங்கள் வளர்ச்சியுடன் தேச நலனும் பின்னியுள்ளது என்பதை குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.
குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். அந்த முடிவை அடைய நாம் மட்டுமே அவர்களுக்கு வழிகாட்ட முடியும். நீங்கள் சரியாக வளரவில்லை என்றால் அது உங்களின் சொந்த இழப்பு மட்டுமல்ல. வீட்டுக்கும் நாட்டுக்கும் இழப்பு என்பதை குழந்தைகள் உணரும் வகையில் வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.