என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச மகளிர் தினம்"

    • சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டியை இலவசமாக காணலாம்.
    • இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி தொடங்கிய இத்தொடர் வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான போட்டியை பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரும் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் அதிகாரபூர்வ டுவிட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ஏற்கனவே, மகளிர் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளையும் பெண்கள், சிறுமிகள் இலவசமாக பார்க்கலாம் என பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
    • மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் என பலரும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா்.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து மகளிர் தின வாழ்த்தை தொிவித்துள்ளாா்.

    • கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
    • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.

    மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.

    • தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
    • மகளிர் தினத்தன்று அங்குள்ள செய்தி ஊடகத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 75 சதவீத பெண் பத்திரிக்கையாளர்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டோலோ நியூஸ் என்ற செய்தி ஊடகத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை ஊடகவியலாளர் சோனியா நியாஸி தொகுத்து வழங்கினார். இதில் பங்கேற்று பேசிய செய்தியாளர் அஸ்மா கோக்யானி, இஸ்லாம் மதத்தின் பார்வையில் பெண்கள் கல்வி பெறுவதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன என்று தெரிவித்தார்.

    முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர் ஸாகிரா நபில் பேசியபோது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த சமூகத்தில் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணால் பள்ளியில் கல்வி கற்க முடியாவிட்டால், அவள் வீட்டிலேயே கல்வி கற்றுக் கொள்வாள் என்று கூறினார்.

    சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான இந்த விவாத நிகழ்ச்சியில் பெண்களுக்கான உரிமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய டோலோ நியூஸ் செய்தி ஊடகத்திற்கு சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • சர்வதேச மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
    • அனைத்துத் துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர் என்றார்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் பெண்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கும், வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அவர்களை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இன்றும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், அதை நாம் தீர்க்க வேண்டும்.

    அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி, ஆயுதப்படை மற்றும் விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். பெண்களின் சக்தி மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாக இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பை நாம் கண்டோம்.

    மகளிர் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறவும், அனைத்துப் பெண்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
    • பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.

    சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்மசாட்டி உள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.

    திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை.

    பெண்கள் முன்னேற்றம்தான் சமுதாய முன்னேற்றம் என்பதை உணர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம்

    சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள்.

    ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள்.
    • சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    இன்று சர்வதேச மகளிர் தினம்...

    ஒரு ஆண் ஜெயித்தால் குடும்பம் ஜெயிக்கும். ஆனால் ஒரு பெண் ஜெயித்தால் சமூகமே ஜெயிக்கும்.

    பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற வார்த்தைகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்ற கேள்விக்கு தேசப்பிதாவின் வரிகளை நினைவு கூற வேண்டும். நாட்டின் சுதந்திரத்தை பெண்ணின் சுதந்திரத்துடன் ஒப்பிட்டு அவர் கூறிய வார்த்தைகள்...'நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்தில் நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க முடிகிறதோ அன்றுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்து விட்டதாக பொருள்' என்பதாகும். ஆனால் இன்று அந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோமா?

    எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் தான் அதனை பெண்கள் அடைந்து விட்டார்களா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்காமல் பள்ளிக்கூடங்களை நோக்கிய பயணம் தொடங்கியது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. விரும்பிய ஆடைகளை அணிவது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. பெண்கள் வேலைக்கு போவது, அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது, சுய தொழில் செய்வது போன்றவை தான் சுதந்திரம் என்றால் அதுவும் பெண்களுக்கு கிடைத்து விட்டது.

    வீட்டை விட்டு வெளியே வந்து சாதிப்பது தான் சுதந்திரமா..!! அப்படி எடுத்துக்கொண்டால் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக நம் தமிழ் சமூகத்தில் பெண் சுதந்திரம் இருந்துள்ளது என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள். அவ்வையார் முதல் காக்கைப்பாடினியார் வரை சங்க காலப் புலவர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏராளமான பெண்பாற்புலவர்கள் உள்ளனர்.

    சுதந்திரப்போராட்டத்தில் வீர மங்கை வேலுநாச்சியார் தொடங்கி தில்லையாடி வள்ளியம்மை வரை ஏராளமான பெண் போராளிகள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்றைய நிலையில் மருத்துவம், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம், அறிவியல், அரசியல், பொருளாதாரம் என பல துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். இவர்களெல்லாம் சுதந்திரம் கிடைக்கப் பெற்றவர்கள் என்று சொல்வதை விட, சுதந்திரத்தை எடுத்துக் கொண்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.



    இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள். இது நல்ல மாற்றத்தின் தொடக்கம் தான். ஆனால் இன்று வரை தொடக்கப் புள்ளியிலேயே நின்று கொண்டிருக்கிறோமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. எத்தனை ஆண்களால் 'என் வீட்டில் பெண்களுக்கு சம உரிமையையும், முழு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். தாயாய், தாரமாய், தோழியாய், மகளாய்.. என பல அவதாரங்கள் எடுக்கும் பெண்ணை பாலியல் பதுமையாய் பார்க்கும் போக்கு இன்னும் மாறவில்லை.

    தற்போது வரை நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் எதுவும் அணியாமல் கூட தனியாக செல்ல முடியாது என்ற நிலையே நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பெண்களை வக்கிரமாக விமர்சிக்கும் நபர்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்ணுரிமை பேசும் பெண்களை திமிர் பிடித்தவள் என்று வீட்டுக்கு அனுப்பும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    அக்கறை என்ற பெயரிலும், பாதுகாப்பு என்ற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தும் நிகழ்வுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது. இப்போதைய நிலையில் ஆண்களிடமிருந்து மட்டுமல்ல பெண்களிடமிருந்தும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டிய நிலை உள்ளது. தாய்மார்களும், மாமியார்களும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். வீட்டுக்குள் முழு சுதந்திரம் கிடைத்தால் தான் சமூகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியும்.

    எனவே மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் தொடங்க வேண்டும். இப்போது சொல்லுங்கள்...எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?

    • இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர்.
    • பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது.

    இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி அரசியல் தலைவர்கள் தத்தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியின் மகாராஷ்டிர அரசின் நீர் வழங்கல் துறை அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இவர் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஷிண்டே பிரிவு சிவசேனாவின் முக்கிய தலைவர் ஆவார்.

    ஜல்கான் நகராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய குலாப்ராவ் பாட்டீல், மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறிய வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

    குலாப்ராவ் பாட்டீல் கூறியதாவது, பெண்கள் தங்கள் பர்சில் மிளகாய்ப் பொடி மற்றும் கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று வணக்கத்திற்குரிய பாலாசாகேப் தாக்கரே அறிவுறுத்தினார். இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர். ஆனால், தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பாலாசாகேப் கூறியதை பெண்கள் செய்ய வேண்டிய நேரம் இது.

    இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும்சூழலில், பெண்கள் புலிகளாக மாற வேண்டும். இன்றைய பெண்கள் பலவீனமாக இருக்கக்கூடாது. மாறாக வலிமையுடன் திகழ வேண்டும்.

    பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். அவ்வாறு செய்வோரை நிறுத்த வேண்டும். பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. பெண்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

    கடந்த மாத இறுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புனே பேருந்து நிலையத்தில் போலீஸ் சோதனைச் சாவடிக்கு வெறும் 100 மீட்டர் தொலைவில் நின்றுகொண்டுருந்த அரசு சொகுசு பஸ்ஸுக்குள் வைத்து 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • நிலைமை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்?
    • எங்கள் கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதியளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

    பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் மனநிலையைக் களைய பெண்கள் ஒரேயொரு கொலை செய்தால் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குடியரசுத் தலைவரிடம் பரப்பரப்பு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவின் சரத் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவர் ரோஹிணி கட்ஸே, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அவரது கடிதத்தில் கூறியதாவது, இந்த நாடு புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் நாடாகக் கருதப்படுகிறது. அமைதி மற்றும் அகிம்சையின் சிறந்த சின்னமாக இருக்கும் பூமி, இப்போது மன்னிப்பை எதிர்பார்த்து கோரிக்கை வைக்கிறது.

    இன்று நாட்டில் பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு, மும்பையில் 12 வயது சிறுமி ஒருத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். நிலைமை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்?

    உலக மக்கள்தொகை சீரமைப்பு கணக்கெடுப்பு முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை கொண்ட பல்வேறு நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்த கணக்கெடுப்பின்படி, ஆசியாவிலேயே இந்தியா உலகின் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக மாறியுள்ளது. இதில் பெண்கள் கடத்தல், குடும்ப வன்முறை குற்றங்கள் மற்றும் பிற தீவிர குற்றச் செயல்கள் ஆகியவை அடங்கும். எனவே, அனைத்து பெண்கள் சார்பாக ஒரேயொரு குற்றத்துக்காக எங்களை மன்னிக்க கோருகிறோம்.

    பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மனநிலை, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டுமென்ற மனநிலையை, செயலற்று கிடக்கும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைக் கொல்ல நாங்கள் விழைகிறோம்.

    இன்னலுற்ற நமது தேசத்தை காக்க மகாராணி, தாராராணி, புண்யஷ்லோக் அஹில்யாதேவி வாளை எடுத்துக்கொண்டு, நம் சமூகத்தை சீர்திருத்த நம்மிடம் கேட்கிறாள்.

    எங்கள் கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதியளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். சர்வதேச மகளிர் நாளான இன்று , இதையே உங்களிடமிருந்து கிடைக்கும் பரிசாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். 

    • சில வாரங்களுக்கு முன்பு குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளிக்க கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் பணி செய்து வந்த காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் வந்திருக்கிறார்.
    • தற்காலிக காவல் நிலைய கட்டடம் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் மகளிர் தின நிகழ்ச்சியின் பெயரில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மகாராஷ்டிர போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த மார்ச் 8 ஆம் தேதி சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பட்டோடாவில் போலீஸ் கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் (35 வயது) அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணை மகளிர் தின நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறி தற்காலிக காவல் நிலைய கட்டடம் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.

    அழைப்பை ஏற்று அங்கு வந்த பெண்ணை தனியான அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சம்பவத்தின் பின் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கான்ஸ்டபிளை அன்றைய தினம் இரவே போலீசார் கைது செய்தனர்.

    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மார்ச் 12 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

    சில வாரங்களுக்கு முன்பு குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளிக்க கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் பணி செய்து வந்த காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் வந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு அறிமுகமாகி கான்ஸ்டபிள் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

    ×