என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள் பே"

    • நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
    • UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.

    நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் பல இடங்களில் பணப் பரிவர்த்தனைக்கான UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்த முடியாததால் UPI Down என பயனர்கள் பலரும் தங்களது சமூகவலைத் தளங்களில் வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.

    • கார்த்திகேயன் தன்னுடைய நடப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார்.
    • ராணுவ வீரர் என்பதால் இந்த கணக்கில் பணம் அனுப்ப முடியாது. எனவே வேறு கணக்கு எண்ணை தருமாறு சாகில் குமார் கேட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர, வளர இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக ஆன்-லைன் மோசடி மூலம் தனி நபர்களையும், நிறுவனங்களையும் குறிவைத்து மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ஒருவர் ராணுவ வீரர் என கூறி 'கூகுள் பே' மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி செய்துள்ளது மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 52). இவர் கோவில்பட்டியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இதன் கிளைகள் விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது, தான் சாகில் குமார், ராணுவ வீரர் காஷ்மீரில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் தனக்கு பர்னிச்சர் பொருட்கள் வேண்டும் என கேட்டுள்ளார்.

    அதற்கு கார்த்திகேயன் நீங்கள் காஷ்மீர் மற்றும் அருகில் உள்ள இடங்களில் வாங்கிக் கொள்ளலாமே என தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த சாகில் குமார், சாத்தூரில் உள்ள எனது நண்பருக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்பதாலும், உங்கள் கடை 4 நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளதால் தரமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் வாங்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

    பின்னர் மீண்டும் கார்த்திகேயனை தொடர்பு கொண்ட சாகில் குமார், தனக்கு சோபா, மேஜை, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் வேண்டும் என அதற்குரிய மாதிரி படங்களை செல்போன் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தார்.

    அதனை பார்த்த கார்த்திகேயன், அதற்கான மதிப்பு ரூ.80 ஆயிரம் என தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் பேரம் பேசி ரூ.65 ஆயிரம் என விலை நிர்ணயித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆன்-லைன் மூலம் பணம் அனுப்புவதாக சாகில் குமார் தெரிவித்துள்ளார்.

    இதனால் கார்த்திகேயன் தன்னுடைய நடப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார். அப்போது, தான் ராணுவ வீரர் என்பதால் இந்த கணக்கில் பணம் அனுப்ப முடியாது. எனவே வேறு கணக்கு எண்ணை தருமாறு சாகில் குமார் கேட்டுள்ளார்.

    இதனால் கார்த்திகேயன் தனது மகன் அருண்குமார் என்பவரின் வங்கி கணக்கு மற்றும் அதற்குரிய 'கூகுள் பே' எண்ணையும் அனுப்பி உள்ளார்.

    முதலில் 1 ரூபாய் அனுப்பிவிட்டு அந்த பணம் வந்துள்ளதா என சாகில் குமார் கேட்டுள்ளார். ஆம் என கார்த்திகேயன் கூறியதும், செல்போனில் ஒரு லிங்கை அனுப்பி அதன் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    அருண்குமார் தனது செல்போன் எண்ணிற்கு வந்த லிங்கை தொட்டதும், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டதற்கான தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது தந்தையிடம் இதுபற்றி கூறி உள்ளார்.

    பின்னர் அவர் சாகில் குமாரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார். அப்போது ரூ.35 ஆயிரம், ரூ.18 ஆயிரம் என பல்வேறு லிங்குகளை அனுப்பி, அதனை தேர்வு செய்தால் உங்களுக்குரிய பணம் மீண்டும் உங்களது வங்கி கணக்கில் வந்துவிடும் என கூறி உள்ளார்.

    ஆனால் உஷாரான கார்த்திகேயன் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எளிமையான முறையில் பொருட்களை வாங்கவும், பணத்தை எடுத்து செல்வதால் ஏற்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும் ஆன்-லைன் பணபரிவர்த்தனை தற்போது தொடங்கப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஆனால் சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதால், ஆன்-லைன் பணபரிவர்த்தனை குறித்து பொதுமக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வந்தாலும் குற்றச் செயல்கள் ஒருபுறம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

    இதற்கிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அதில் சிலர் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டு தவறுதலாக வந்து விட்டது எனக்கூறி, பின்னர் அதனை வாங்குவதற்காக லிங்கை அனுப்புகின்றனர். அதனை பொது மக்கள் தேர்வு செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்த மொத்த தொகையையும் மோசடி கும்பல் எடுத்து கொள்கிறது.

    எனவே உங்களுக்கு யாரேனும் லிங்க் அனுப்பினால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். மேலும் உங்களது வங்கி கணக்கு ஏ.டி.எம். எண், ஓ.டி.பி. எண்ணை யாரேனும் கேட்டாலும் எதிர்வினை ஆற்றவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    • மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.
    • ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர்.

    தாம்பரம்:

    சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். (40). இவர், நேற்று காலில் சிகிச்சை பெறுவதற்காக ஒமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவற்காக சென்ட்ரலில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.

    தாம்பரம் சானட்டோரியம் அருகே ரெயிலில் ஏறிய 4 மர்ம நபர்கள் ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் கூகுள் பே மூலம் ரூ.1400 பெற்றனர். பின்னர் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மெதுவாக சென்றபோது கொள்ளையர்கள் 4 பேரும் குதித்து தப்பி சென்றுவிட்டனர்.

    • செந்தில்நாதன் அதே பேப்பர் ஸ்டோரில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன் என்பவரின் செல்போனை திடீரென்று வாங்கி சோதனை செய்தார்.
    • கடந்த 2021 முதல் தற்போது வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டறிந்தார்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலத்தில் தனியார் பேப்பர் ஸ்டோர் உள்ளது. இதன் உரிமையாளர் செந்தில்நாதன் என்பவர், அதே பேப்பர் ஸ்டோரில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன் (வயது 41) என்பவரின் செல்போனை திடீரென்று வாங்கி சோதனை செய்தார். அதில் பேப்பர் ஸ்டோருக்கு திருமண அழைப்பிதழ் அச்சிட வரும் வாடிக்கையாளர்களிடம் தனது ஜிபே எண்ணை கொடுத்துள்ளார். அதன் மூலம் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளார்.

    கடந்த 2021 முதல் தற்போது வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டறிந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் செந்தில்நாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பேரில் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.
    • மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை, சீவலப்பேரி ரோட்டில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டேனியல் சுந்தர் (வயது 35) என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இந்த நிறுவனத்திற்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்ட சுண்டக்குறிச்சி மேல தெருவை சேர்ந்த முருகன் (29) என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.

    அதன்பேரில் டேனியல் சுந்தர், முருகனுடைய வீட்டில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளை இறக்கி விட்டு அதற்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது முருகன் உங்கள் நிறுவனத்திற்கு ஏற்கனவே பணத்தை கூகுல்-பே மூலம் அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து டேனியல் சுந்தர் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் எதுவும் நிறுவனத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதில், சென்னை, கொராட்டூர், பாலாஜி நகர், காமக்குடி தெருவை சேர்ந்த விக்னேஷ் (30), திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பைசூர் ரகுமான் (34) ஆகிய இருவரும் டேனியல் சுந்தரிடம், முருகன் போல பேசி கட்டுமான பொருட்களை வாங்கியதும், முருகனிடம், டேனியல் சுந்தர் பேசுவதாக கூறி பொருட் களுக்குரிய பணத்தை கூகுள்-பே மூலம் பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து விக்னேஷ், பைசூர் ரகுமான் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • யு.பி.ஐ. பின் நம்பரை பயன்படுத்தி ரூ. 5 ஆயிரத்தை திருப்பி அனுப்பி விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான்.
    • மொத்த பணமும் சுருட்டப்பட்டு விடும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    இணைய தள மோசடிகள் நாடு முழுவதும் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் தொடங்கி பல்வேறு வழிகளில் மோசடி பேர் வழிகள் இருந்த இடத்தில் இருந்து நமது வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    அந்த வகையில் 'கூகுள் பே' மூலமாக சிறிய தொகையை அனுப்பி உங்களது பின் நம்பரை தெரிந்து கொண்டு வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டும் நூதன மோசடி தற்போது அரங்கேறி வருகிறது. குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை மோசடி ஆசாமிகள் எங்கிருந்தோ உங்களுக்கு அனுப்புவார்கள்.

    அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து இந்த பணம் வந்த சில நிமிடங்களிலேயே உங்களை தொடர்புக் கொண்டு பேசும் நபர் எனது செல்போனில் இருந்து உங்களுக்கு தவறாக ரூ.5 ஆயிரம் பணத்தை அனுப்பிவிட்டேன். அதனை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று கூறுவார். நீங்களும் அதை நம்பி அடுத்தவர் பணம் நமக்கு எதற்கு? என நினைத்து யார் என்றே தெரியாத அந்த நபரது வங்கிக் கணக்குக்கு உங்களது யு.பி.ஐ. பின் நம்பரை பயன்படுத்தி ரூ. 5 ஆயிரத்தை திருப்பி அனுப்பி விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான்.

    இதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் சுருட்டப் பட்டிருக்கும். எதிர்முனையில் இருக்கும் நபர் உங்களது யு.பி.ஐ. பின் நம்பரை அப்படியே ஹேக் செய்து வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்திருப்பார்.

    இந்த மோசடியில் இருந்து தப்புவது எப்படி? என்பது பற்றி சைபர் கிரைம் போலீசார் விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

    அதன் விவரம் வருமாறு:-

    உங்களுக்கு சிறிய தொகையை தெரியாமல் அனுப்பி இருப்பவர் யார் என்றே தெரியாதவராக இருந்தால் நீங்கள் உடனடியாக அந்த பணத்தை திருப்பி அனுப்ப வேண்டியது இல்லை.

    பணத்தை அவர் திருப்பி கேட்கும் பட்சத்தில் அதற்கு மாறாக உங்களது பின் நம்பரை மாற்றி போட்டு அவரை குழப்பம் அடைய செய்யலாம்.

    இதுபோன்று தவறான பின் நம்பரை அடிப்பதன் மூலம் எதிர்முனையில் இருப்பவர் நீங்கள் அடித்திருப்பது உண்மையான பின் நம்பர் தான் என்று அவரும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு முயற்சிப்பார்.

    ஆனால், அது நடக்காது. அவரது முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்து விடும். இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தொடர்பு கொண்டு இது போன்று அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து பணம் வந்திருப்பதாக கூறி புகார் அளிக்க வேண்டும்.

    அதன் பின்னர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளிக்கலாம். அதற்கு நேரமில்லை என்றால் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

    இப்படி உஷாராக நீங்கள் செயல்படாமல் அவசரப்பட்டு உண்மையான பின் நம்பரை தெரிவித்து விட்டால் அடுத்த நொடியே உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் சுருட்டப்பட்டு விடும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
    • அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.

    நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன. இந்நிலையில் நாளை [பிப்ரவரி 1] முதல் பலரின் யுபிஐ ஐடி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பிப்ரவரி 1ஆம் தேதி முதல் [@,#, * உள்ளிட்ட] சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்கப்படாது என நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா[NPCI] அறிக்கை வெளியிட்டுள்ளது.

    எண்ணெழுத்து [0-9] மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடிகள் மட்டுமே செயல்படும் என கூறப்பட்டுள்ளது. சிறப்பு எழுத்துக்கள் உள்ள ஐடிகள் பிளாக் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


     

    யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதையும், பாதுகாப்பை மேம்படுவதும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று NPCI அறிவுறுத்தியுள்ளது.

    என்பிசிஐ தரவுகளின்படி, டிசம்பர் 2024 இல் 16.73 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது நவம்பரின் பதிவான 15.48 பில்லியன் பரிவர்த்தனைகளைவிட விட 8% அதிகமாகும். 

    • போலீசார் பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.
    • பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி.பூங்கா காய்கறி மார்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 45), பாஸ்கர் ரெட்டி (60) ஆகிய இருவரும், ஈரோடு மார்கெட்டுக்கு லாரியில் தக்காளி கொண்டு வந்தனர்.

    பின்னர் அவற்றை இறக்கிவிட்டு, மார்கெட் அருகில் உள்ள ஏ.பி.டி.ரோடு பகுதியில் தங்களது லாரியை நிறுத்தி சமைத்து சாப்பிட்டு விட்டு லாரியிலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு சென்ற 4 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த மகேந்திரன், பாஸ்கர்ரெட்டி இருவரையும் எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

    அப்போது லாரி டிரைவர்கள் இருவரும் தங்களிடம் பணம் இல்லை என கூறவே, கூகுள் பே மூலமாக தங்களது வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி மகேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து அவர்களது வங்கிக் கணக்கிற்கு ரூ.18 ஆயிரத்து 700 அனுப்பவைத்து, பின்னர் மகேந்திரனின் செல்போனில் இருந்து கூகுள் பே ஆப்பையும் அழித்துவிட்டு சென்று விட்டனர்.

    இதையடுத்து, மகேந்திரன், பாஸ்கர் ரெட்டி இருவரும் தாங்கள் தக்காளி பாரம் இறக்கிய மண்டி உரிமையாளர் வைரவேலிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ஆந்திர மாநில லாரி ஓட்டுனர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்தது, ஈரோடு வீரப்பன் சத்திரம், மிட்டாய்காரர் வீதியை சேர்ந்த சண்முகம் (19), சக்திவேல் (19) என்பது தெரியவந்த்து. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    ×