என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரான்"

    • சீனாவில் இது (பூரான்) முக்கியமான உணவு பொருள். இதனை பெரிதாக நினைக்க வேண்டாம் என விற்பனையாளர் அலட்சியமாக பதில் கூறினார்.
    • மது பாட்டிலை வாங்கிக் கொண்ட விற்பனையாளர் வேறு பாட்டிலை கொடுத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார்.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு நண்பர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் 2 குவார்ட்டர் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். அதனை திறக்க முயன்றபோது ஒரு பாட்டிலில் ஏதோ பூச்சி கிடப்பது போல் தெரியவந்தது. பாட்டிலை குலுக்கி பார்த்த போது, அதில் கிடந்தது பூரான் என தெரியவர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது பற்றி அங்கிருந்த விற்பனையாளரிடம் கூறியபோது, சீனாவில் இது (பூரான்) முக்கியமான உணவு பொருள். இதனை பெரிதாக நினைக்க வேண்டாம் என அவர் அலட்சியமாக பதில் கூறினார். இதனால் மது அருந்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த மது பாட்டிலை வாங்கிக் கொண்ட விற்பனையாளர் வேறு பாட்டிலை கொடுத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார்.

    இருப்பினும் அதிர்ச்சியில் இருந்து மீளாத குடிமகன், பூரான் கிடக்கும் மது பாட்டிலை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். அரசு விற்கின்ற மதுபானங்களில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், இது குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடிமகன் வீடியோவில் தெரிவித்திருப்பது தற்போது வைரலாகி உள்ளது.

    • 2 வாலிபர்கள் வாந்தி, மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி கிருஷ்ணன் (வயது 21). இவர் தனது நண்பர் கலையரசனுடன் (20) நேற்று இரவு, கொங்கணாபுரம்-ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர். வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார்.
    • கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.

    உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தீபா தேவி என்பவர் தனது 5 வயது மகனுக்காக ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார்.

    ஆர்டர் செய்யப்பட்ட அமுல் வெனிலா மேஜிக் ஐஸ்கிரீமை திறந்தபோது அதில் பூரான் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் ஐஸ்கிரீம் தொகையை திரும்ப அளித்தனர். தீபா தேவி புகார் தொடர்பாக அமுலுக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

    கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அந்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது. இதையடுத்து அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்கிரீமை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஐஸ்கிரீமில் பூரான் இருப்பது ஐஸ்கிரீம் பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    • திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
    • அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சர்ச்சை முடிவதற்குள் திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்ததுடன் அதுபோன்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டது.

    இந்நிலையில், திருப்பதியில் அன்னதான கூடத்தில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


    • இறந்த நிலையில் பூரான் ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
    • டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அக்கரகாரப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 34). கூலித்தொழிலாளி. நேற்று இவர், அக்கரகாரப்பட்டியில் நிலக்கோட்டை-மதுரை சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். பின்னர் கடையில் 4 உளுந்த வடை மற்றும் 3 பருப்பு வடை பார்சல் வாங்கினார்.

    அந்த வடைகளை தனது அக்காள் அழகு ராணியிடம் ஜெயபிரகாஷ் கொடுத்தார். இதையடுத்து அழகு ராணி மற்றும் அவரது குழந்தைகள் 3 உளுந்த வடைகளையும் சாப்பிட்டனர். தொடர்ந்து பருப்பு வடையை எடுத்து 2 ஆக அழகுராணி பிரித்தார். அதற்குள் இறந்த நிலையில் பூரான் ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து அழகுராணி மற்றும் குழந்தைகள் வாந்தி எடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் டீ கடையில் வாங்கிய ஒரு வடையில் பிளேடு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே நிலக்கோட்டை பகுதியில் உள்ள டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×