search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லை பெரியாறு அணை"

    • 152 அடியாக உயர்த்த கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம்.
    • முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் அ.தி.மு.க. தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தியது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர் கேம்பில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இ.பெரியசாமி கூறியதாவது,

    முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசுதான். அதேபோல் 152 அடியாக உயர்த்த கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம். இந்த வழக்கிலும் வெற்றி பெற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என்றார்.

    அதன் பிறகு பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு மரியாதை செலுத்த வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் அ.தி.மு.க. தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கையால் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அமைச்சர் இ.பெரியசாமி தி.மு.க. ஆட்சியில் தான் இது செயல்படுத்தப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளர். தமிழக மக்களுக்கு மிகவும் நன்றாக தெரிந்த விசயத்தை மறைத்து அமைச்சர் இ.பெரியசாமி இவ்வாறு பொய்யான தகவலை கூறுவது ஏற்புடையதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
    • 4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் பராமரிப்பு பணி தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறையினர் 2 லாரிகளில் 4 யூனிட் எம்.சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொண்டு சென்றனர்.

    வல்லக்கடவு சோதனைச்சாவடியில் கேரள வனத்துறையினர் லாரிகளை தடுத்து நிறுத்தி அணைப்பகுதிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். கடந்த 3 நாட்களாக பல்வேறு விவசாய சங்கங்கள் லோயர் கேம்பில் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம், பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் ஆகியவற்றை நடத்தினர்.

    ஆனால் கேரள அரசு இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லாரிகளை அனுமதிக்காததால் 4 நாட்களாக சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கேரள அரசு நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    லாரியின் டிரைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் வல்லக்கடவு பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக அணை பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக செல்லும் தளவாட பொருட்களை இத்தனை நாட்கள் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் அனுமதித்திருக்க வேண்டும்.

    ஆனால் 4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது. எனவே இன்று மாலைக்குள் தளவாட பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை அணை பகுதிக்குள் அனுமதிக்காவிட்டால் நாளை குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களும் சிரமத்திற்கு ஆளாகின.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கொண்டு செல்லப்படும் தளவாட பொருட்களை கேரளா தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து மத்திய கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியும் 7 மாதங்களாக அணைப்பகுதிக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல கேரளா அரசு மறுத்து வருகிறது.

    முல்லை பெரியாறு அணை தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் சென்றதால் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவும், துணைக்குழுவும் சமீபத்தில் கலைக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணிக்காக எம்சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருட்களை 2 லாரிகளில் ஏற்றிக்கொண்டு இடுக்கி மாவட்டம் குமுளி வட்டம் வல்லக்கடவு வழியாக முல்லை பெரியாறு அணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சோதனை சாவடியில் அந்த லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் இன்று 4-வது நாளாக சோதனை சாவடியிலேயே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நவம்பர் தொடக்கத்தில் தளவாட பொருட்களை கொண்டு செல்வது தொடர்பாக கடிதத்தை தமிழக நீர்வளத்துறையினர் கேரள வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

    இச்சம்பவத்தை கண்டித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் லோயர் கேம்ப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை லோயர் கேம்ப்பிலேயே தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 4வது நாளாக பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் கேரள எல்லையில் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    நேற்று மாலை தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் லோயர் கேம்ப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் 1 கி.மீ. தூரத்திற்கு 2 புறமும் அணிவகுத்து நின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களும் சிரமத்திற்கு ஆளாகின. இரவு 10 மணிக்கு பிறகும் போராட்டம் தொடர்ந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    கடந்த 4 நாட்களாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் யாரும் இதுகுறித்து பேசாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில்,

    தளவாட பொருட்களை கொண்டு செல்ல கேரளா அரசு அனுமதி வழங்காவிட்டால் குமுளியில் 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் நடைபெறும். தமிழக அரசு இப்பிரச்சனையில் மவுனத்தை கலைத்து கேரளா அரசு மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடையும். அணைப்பிரச்சனையில் சமரசத்திற்கே இடமில்லை என்றார்.

    விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் இருமாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
    • முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்மட்டம் உள்ள இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக 1979-ம் ஆண்டு முதல் கேரளா அரசியல்வாதிகள் பிரச்சனை செய்து வருவது நமக்கு கவலைக்குரிய ஒரு விஷயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    எப்பொழுதெல்லாம் கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் இந்த முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து கேள்வி எழுப்பி சந்தேகம் எழுப்பி, கற்பனை கதைகளை கட்டவிழ்த்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை, வீடியோக்களை ஆதாரம் இல்லாமல் வெளியிடுவதை கேரளா வழக்கமாக கொண்டுள்ளது. கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

    அணை கேரளாவில் இருந்தாலும், கட்டுப்பாடு முழுவதும் தமிழக நீர்வளத்துறையிடம்தான் உள்ளது. ஒவ்வொரு மாதமும் மத்திய கண்காணிப்பு குழுவினரும், துணை கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்சநீதி மன்றத்திலே சமர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.

    அணை பலமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பிறகும் அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை எழுப்பி புதிய அணை கட்டுவோம் என்று சொல்லி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று கேரளா மக்களிடத்தில் அச்சத்தை பரப்பி, பதட்டத்தை உண்டாக்கி இரண்டு மாநில மக்களிடத்திலே இருக்கிற சகோதர உறவை கேள்விக்குறி ஆக்கி வருகிறது.


    இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருப்பதை மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் வேடிக்கை பார்ப்பது எதிர்காலத்திற்கு இந்த நட்புறவிலே இந்த சகோதர உறவிலே ஒரு இடைவெளி ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சமீபத்திலே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட நூற்றுக்கணக்கான வீடுகள், நிலச்சரிவிலே மூழ்கி ஏராளமான உயிர்கள் பலியானது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. இந்த இயற்கை பேரிடர் சம்பவத்தை முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையுடன் முடிச்சு போட்டு இடுக்கி எம்.பி. உள்ளிட்ட கேரளா அரசியல்வாதிகள் வலைதளங்களிலேயே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.

    இதுகுறித்து தமிழக அரசு இதற்கு தக்க பதிலடி கொடுக்கின்ற வகையிலே தமிழக முல்லைப் பெரியாறு அணை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலே, இந்த பாதுகாப்பு குறித்து ஒரு உரிய விளக்கத்தை வெளியிட்டு இதுபோன்ற ஆதாரம் இல்லை கற்பனை செய்திகளை, வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முதலமைச்சர் தயாரா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
    • தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் கேரளா எம்.பி. ஹிபி ஏடன் பேசும்போது, "முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    மேலும், "முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம். மத்திய அரசு புதிய அணை கட்டி கேரளத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

    முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரளா தெரிவித்து வந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி பெற்றது. தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயனடைகின்றன.

    தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என உச்சநீதிமன்றமும் வல்லுநர்கள் குழுவும் திட்டவட்டமாக தெரிவிததுவிட்ட நிலையிலும் கேரளா மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

    முல்லைப் பெரியாறு அணையை பல ஆண்டுகளாக கேரளா எதிர்த்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 54.89 அடியாக உள்ளது. வரத்து 1485 கன அடி.
    • சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பரவலாக மழை பெய்த நிலையில் அதன்பிறகு படிப்படியாக குறைந்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது.

    தற்போது தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.90 அடியாக உள்ளது. வரத்து 3216 கன அடி. திறப்பு 1333 கன அடி. இருப்பு 4460 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.89 அடியாக உள்ளது. வரத்து 1485 கன அடி. திறப்பு 969 கன அடி. இருப்பு 2701 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 57 அடி. வரத்து மற்றும் திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 78.4, தேக்கடி 44.6, சண்முகாநதி அணை 12.6, ஆண்டிபட்டி 10.6, அரண்மனைபுதூர் 21, பெரியகுளம் 13, சோத்துப்பாறை 12, வைகை அணை 9.6, போடி 26.4, உத்தமபாளையம் 8.6, கூடலூர் 9.2.

    கனமழை காரணமாக சுருளி அருவியில் நேற்று சீரான நீர்வரத்து வந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதல் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் போடி அருகில் உள்ள அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியிலும் அதிக அளவு தண்ணீர் தடுப்புகளை தாண்டி செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் நீர்வளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.
    • அணையின் ஒட்டுமொத்த நிலை மற்றும் கட்டமைப்பு திருப்திகரமாக உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என பாராளுமன்றத்தில் ஜல்சக்தி துணை இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில், முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட, நிதி ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என கேரள எம்.பி. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த துணை இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி, அணைகளின் பாதுகாப்பு என்பது அணையின் உரிமையாளர்களான மாநில அரசுகளின் வசமே உள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், அணையின் உரிமையாளராக தமிழக அரசின் நீர்வளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

    அணையின் ஒட்டுமொத்த நிலை மற்றும் கட்டமைப்பு திருப்திகரமாக உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதைய நிலையில் 152 அடியாக உயர்த்த முடியாது.

    அணையின் உரிமையாளரான தமிழக அரசின் நீர்வாளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது" என்றார்.

    • குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
    • அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    சென்னை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 131 ஆண்டுகள் பழமையான இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அணை பலவீனமாக உள்ளதாகவும், இயற்கை சீற்றங்களின் போது அணையை சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கேரள அரசின் இந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கேரளா அரசு மீறி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

    தமிழக விவசாயிகளும் கடந்த சில நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக நேற்று முன்தினம் நடக்க இருந்த நிபுணர் குழு கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் முல்லை பெரியாறு அணையை பார்வையிட மத்திய நீர் ஆணைய நிர்வாக என்ஜினீயர் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் அடுத்த மாதம் (ஜூன்) 13 மற்றும் 14-ந்தேதிகளில் முல்லைப்பெரியாறு அணையை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இவர்கள் அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மத்திய துணைகுழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசு மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது.
    • மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசும், தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மதுரை:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் ஜீவாதாரமாக விளங்கி வருகிறது. ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் முயற்சியால் கட்டப்பட்ட இந்த அணை கேரள மாநில எல்லை பகுதியில் அமைந்திருந்தாலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    பெரியாறு மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை மறித்து நீரை கிழக்கு நோக்கி திருப்பி மழை மறைவு பகுதியான தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டத்திற்கு பயன்படுத்தவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். அணையின் நீர்மட்டம் 155 அடியாக உள்ளது.

    சுரங்கம் வழியாக தமிழக எல்லையில் உள்ள சுருளி, வைகையாற்றில் திருப்பி விடப்பட்டு தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு பெரியாறு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுகிறது.

    தமிழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடக்கத்தில் இருந்த பல்வேறு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறது. அணை பலமாக இல்லை என கேரள அரசு தொடர்ந்து தெரிவிக்கிறது. இதனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலத்துக்கும் தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரள அரசு மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது. இதற்கான நிபுணர் குழு கூட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்காலிகமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசும், தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று தேனி மாவட்டத்தில் இருந்து 5 மாவட்ட விவசாயிகள் பேரணியாக முல்லைப்பெரியாறு அணையை நோக்கி சென்றனர். ஆனால் தமிழக எல்லையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று மதுரை தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
    • புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டவும் , பழைய அணையை இடிக்கவும் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை ஆய்வு செய்து தயார் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் வரும் 28 ஆம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டிருப்பதாக வந்திருக்கிற செய்தி தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. கேரள அரசின் இத்தகைய முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு, அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதையொட்டி 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு பயன்படுகிற வகையில் நீர்மட்டத்தை 142 அடியாக உறுதி செய்து அனுமதி அளித்தது. அதே நேரத்தில், கேரள அரசு இயற்றிய சட்டத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அணையை பலப்படுத்திய பிறகு 152 அடிவரை நீரை தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதற்கு பிறகும் புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் கருத வேண்டியிருக்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு காண வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினாலும், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அணையை பலப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவால் உறுதி செய்யப்பட்ட பிறகு, கேரள அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அதையும் மீறி தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்கும் செயல்களில் கேரள அரசு ஈடுபடுமேயானால், உடனடியாக இதை தடுத்து நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுகின்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    கூடலூர்:

    தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

    தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி முடிந்ததால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு 711 கன அடியில் இருந்து இன்று 105 கன அடியாக குறைக்கப்பட்டது.


    பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 83 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.35 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 417 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 1202 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.83 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன்பின்னர் நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 18 நாட்களாக அணையின் நீர் மட்டம் 71 அடியில் நீடித்தது. இந்தநிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் சற்று சரிந்து 70.85 அடியாக உள்ளது. அணைக்கு 916 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1169 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. அணைக்கு 282 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 59 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    ×