என் மலர்
நீங்கள் தேடியது "இந்து சமய அறநிலையத்துறை"
- சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும்.
- மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3-வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில், 17.30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்தது.
திருப்பணியில் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், திருப்பணி என்ற பெயரில் கோவிலின் தல விருட்சமான 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.கே. ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகநாதன், அரச மரத்தை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதுவதால், அதை அகற்றக்கூடாது என்று வாதிட்டார்.
இந்து அறநிலையத்துறை சார்பில், சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும். பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விழிப்புடன் உள்ளனர். மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
- 103 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை 2 கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப்பிரிவு தொடங்கப்பட்டு, பரவசமூட்டும் பக்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறுகள், கோவில் கலை நூல்கள், சிலை நூல்கள், காவிய நூல்கள், ஓவிய நூல்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், இறையடியார்களின் பொன்மொழிகள், மெய்யைப் போதித்து, மெய்யைக் காக்கும் சித்தர் நூல்கள் என அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை 2 கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியிடப்பட்ட பக்தி நூல்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 103 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் 2-வது கூட்டத்தில், "இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக வெளியீடுகளை விற்பனை செய்வதற்கு 103 கோவில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், கூடுதலாக 100 கோவில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை செயல்படுத்திடும் வகையில் 100 கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் ஹரிப்ரியா, ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தொன்மையான திருக்கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 45 வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.
- வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று தொன்மையான திருக்கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 45 வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில், கிண்டி ஸ்ரீ பவானி முத்துமாரியம்மன் கோவில், சிந்தாரிப்பேட்டை சுப்பிரமணியசுவாமி கோவில், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் முத்துக்குமார சுவாமி கோவில், சுந்தரவீர ஆஞ்சநேயசுவாமி கோவில், திருக்குவளை வரதராஜப் பெருமாள் கோவில், ஆய்மூர் பசுபதீஸ்வரர்சுவாமி கோவில், திருவாரூர் கோமல், ராஜகோபாலசுவாமி கோவில், அலிவலம் கரியமாணிக்கப் பெருமாள் கோவில், மன்னார்குடி நல்லமெய்க அய்யனார் கோவில், தஞ்சாவூர் திருவிடைமருதூர் ஆபத்சாகாயேஸ்வரர் கோவில், கும்பகோணம் செந்தில் அழகர் கோவில், மயிலாடுதுறை அகரகீரங்குடி பிடாரியம்மன் கோவில், குத்தாலம் வனதுர்க பரமேஸ்வரி கோவில், சீர்காழி அய்யனார் கோவில், கோவை, ராமநாதபுரம் அங்காளம்மன் பிளேக் மாரியம்மன் கோவில், சுந்தராபுரம் முத்து விநாயகர் கோவில் உள்ளிட்ட 52 கோவில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது.
- விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளன.
திருப்பூர்:
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளா்த்ததிலும் ஆன்மிகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியதாகும்.
தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் நலனின் அரசு துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதிலமடைந்த கோவில்களை சீரமைப்பதில்லை. விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அற நிலையத் துறையின் கீழ் உள்ளன. இந்தக்கோவில்கள் மீது எல்லாம் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டும் அறநிலையத் துறை ஆதீனத்தின் மீது பாா்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?
காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் 233வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பரமாச்சாரியாா் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறாா். இந்நிலையில் அறநிலையத் துறை அமைச்சரின் உறவினா் பல்லாயிரம் கோடி சொத்துள்ள ஆதீன மடத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அவருக்கு தொல்லை கொடுத்து வந்த சூழலில் உடல் நலத்தைக் காரணம் காட்டி அவா் பதவியில் இருந்து விலகியுள்ளாா்.
இதைத்தொடா்ந்து காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆதீனத்தை ஆக்கிரமிக்கும் இந்து சமய அறநிலைத் துறை செயல்களை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
- தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசிக்கு ஆன்மீக சுற்றுலா பயணம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு இந்த ஆண்டில் 200 நபர்கள் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர்.
சென்னை:
உத்தரபிரதேச மாநிலம் காசியில் காசி தமிழ்ச்சங்கம் என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நாளை (19-ந்தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஒரு மாதம் நடைபெறும் இந்த கலாசார விழாவில் தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள தொடர்பு தமிழின் பெருமைகளை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 12 குழுக்கள் கலந்துகொள்கின்றன. இதற்காக ராமேஸ்வரம், கோவை, சென்னையில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கலந்துகொள்ள 2,500 பேர் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு, தங்கும் இடம், போக்குவரத்து அனைத்தும் இலவசம்.
இந்த நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசிக்கு ஆன்மீக சுற்றுலா பயணம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு இந்த ஆண்டில் 200 நபர்கள் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்' என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆன்மீகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மீகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
- அமைச்சர் முத்துசாமி ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
- 23 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் திண்டல் கோவிலில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு:
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இன்று 23 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டல் வேலாயுத சுவாமி கோவில் எதிரே உள்ள வேளாளர் மகளிர் கல்லூரி கலை அரங்கில் திருமண நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக கலையரங்கம் முன்பு வாழை தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் முத்துசாமி திருமண விழாவிற்கு தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.
மணமகன்கள், மணமகள்கள் பட்டு சேலை, வேஷ்டி அணிந்து மாலையுடன் தயாராக இருந்தனர். அமைச்சர் முத்துசாமி ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு 3 கிராம் தங்க திருமாங்கல்யம், பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, சட்டை துண்டு, வெள்ளி மெட்டி, சாமி படம், குத்துவிளக்குகள், பூஜை தட்டு, பூஜை மணி, குங்கும சிமிழ், சந்தன கிண்ணம், இரும்பு கட்டில், போம் மெத்தை, தலையணை, பெட்ஷீட், ஜமுக்காளம், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, ஹாட் பாக்ஸ், பெரிய சில்வர் அண்டா
சில்வர் பால் பாத்திரம், கை கோதி (முடியுறுவி கம்பி), எவர்சில்வர் சாப்பாடு தட்டு, எவர்சில்வர் சிப்பிதட்டு, எவர்சில்வர் பெரிய டம்ளர், எவர் சில்வர் சிறிய டம்ளர், எவர்சில்வர் அன்னக்கூடை, எவர்சில்வர் தாம்பூல தட்டு, எவர்சில்வர் காய்வடி கூடை, சில்வர் பாக்ஸ், எவர்சில்வர் போனி, 21 லிட்டர் பிளாஸ்டிக் பாக்கெட், பிளாஸ்டிக் கோப்பை, மணமக்களுக்கான 16 பொருட்கள் அடங்கிய அழகு சாதன பொருட்கள் பேழை என 34 வகையான சீர் வரிசைகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் புதுமண தம்பதிகள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து வேலாயுத சுவாமி திருக்கோவில் மண்டபத்தில் விருந்து நடைபெற்றது. 23 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் திண்டல் கோவிலில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை மாவட்ட அறங்காவல் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் மேனகா, உதவி ஆணையர்கள் அன்னக்கொடி, இளையராஜா, சாமிநாதன், ஆணையர், செயல் அலுவலர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் திருச்செங்கோடு ரமணி காந்தன் ஆய்வாளர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாட்டில் அதிக கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
- குடும்பக் கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசு, மாநில அரசு எவ்வளவோ செலவு செய்து நிதியை ஒதுக்கி பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 217 ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடந்தது.
சென்னையில் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் 47 கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை உரிமையை நாம் மீட்டுத் தந்திருக்கிறோம். மேலும் பல கோவில்களிலும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம். பெண் ஒருவரை நியமித்திருக்கிறோம். கோயில் பொது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். இது மிகப் பெரிய வரலாறு.
எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கக்கூடிய வகையிலே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனங்களைச் செய்து முடித்திருக்கிறோம். சமத்துவத்தை விரும்பாத சில சக்திகளின் மூலமாக, எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டத்தையும் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இத்தனையும், இதற்கு மேலாக இன்னும் பல இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த ஒரு துறையில் மட்டும் செய்யப்பட்டிருக்கக்கூடிய சாதனைகள். அதனால்தான் இன்றைக்கு அந்தத் துறையினுடைய அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபுவை இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல, எல்லா நிகழ்ச்சிகளிலும், செயல்பாபு, செயல்பாபு என்று நாம் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் சேற்றை வாரி இறைக்கிறார்கள். பொய் பித்தலாட்டத்தை அவர்கள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மதத்தை வைத்து நம் மீது இன்றைக்கு பல பழிகளை, குற்றங்களை, குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், எந்த ஆதாரமும் கிடையாது. நம்மை பொறுத்தவரைக்கும் நாம் அண்ணா வழியில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணக்கூடியவர்கள் நாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அந்த நிலையில் நாம் நம்முடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
அதனுடைய அடையாளம்தான் இன்று ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய 31 இணையர்களுக்கு, மணவிழா நிகழ்ச்சியை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். அறநிலையத்துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்போடு, கட்டுப்பாட்டோடு, எழுச்சியோடு இங்கே நடந்திருக்கிறது. இந்த 31 பேர் மட்டுமல்ல, இன்றைக்கு 217 இணையர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் சார்பில் மணவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் மறந்துவிடக்கூடாது மன்னராட்சிக் காலமாக இருந்தாலும் சரி, மக்களாட்சிக் காலமாக இருந்தாலும் சரி, அது கோவில்கள் என்பது மக்களுக்காகத்தான். அது எந்த ஆட்சியாக இருந்தாலும் கோயில்கள் என்பது மக்களுக்காககத்தான். கோவில்கள் ஒரு சிலருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. அந்த நிலையை மாற்றத்தான் நீதிக்கட்சிக் காலத்தில் இந்தத் துறை உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிக கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அந்த குட முழுக்கு யாருடைய ஆட்சி காலத்தில் அதிகமாக செய்யப்பட்டது என்றால் தலைவர் கலைஞருடைய ஆட்சி காலத்தில்தான் அதிகம் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.
ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமை நம்முடைய முதல்வராக இருந்த கலைஞருக்குத்தான் உண்டு.
பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது கழக ஆட்சி காலத்தில்தான். அந்த வழியில்தான் இப்போது நம்முடைய அரசு சேகர்பாபு பொறுப்பேற்றிருக்கக்கூடிய இந்த துறையின் சார்பில் நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு தன்னுடைய சாதனையை செய்து கொண்டிருக்கிறது.
கோவில் சீரமைப்புப் பணிகளை இதுவரை இல்லாத அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அமைச்சர் ஒவ்வொரு கோயிலுக்கும் நேரடியாக போய்க்கொண்டிருக்கிறார். எப்படி போகிறார்? விமானத்தில் போனால்கூட இவ்வளவு வேகமாக போக முடியாது. அவர் இதற்காக ஸ்பெஷலாக விமானம் வைத்திருக்கிறாரா? என்று சந்தேகபடக்கூடிய அளவிற்கு, ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு, அதிசயப்படக்கூடிய அளவிற்கு மூன்று மணிக்கு விடியற்காலையில் எங்கேயாவது இருக்கிறார். இங்கே ஆறு மணிக்கு சென்னையில் வந்திருக்கிறார். ஆக அலுப்பில்லாமல், சலிப்பில்லாமல், அவர் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய பொறுப்பை நம்முடைய அரசுக்கு பெருமை தேடித் தரக்கூடிய வகையில் அவர் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக நான் அரசின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வாழ்த்தை, பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஆகவே, இது ஏதோ எங்களுக்கு புதுசல்ல, இப்போதும் மட்டுமல்ல, எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள். இன்றைக்கு ஆட்சி என்கின்ற அந்த அதிகாரம், மக்கள் நம்மிடத்தில் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே, மக்களுடைய எதிர்பார்ப்பை ஏற்ற வகையில், அனைவருக்கு மான அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் தமிழ்நாட்டு மக்கள் ஐந்து முறை கலைஞர் கையில் ஆட்சியை ஒப்படைத்தார்கள். இந்த ஆட்சியை, 6-வது முறையாக அவருடைய மகன் இந்த ஸ்டாலின் இடத்தில், யாரிடத்தில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அவருடைய நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற வகையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.
நாம் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், வெற்றி என்ற அந்த செய்தி வந்தவுடனே, நாம் ஆட்சியில் அமரப் போவதற்கு முன்னாலேயே, தேர்தல் செய்திகள், வெற்றி நிலவரங்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தபோது நான் தலைவருடைய நினைவிடத்திற்கு சென்றிருந்த நேரத்தில் பத்திரிகை நிருபர்கள் என்னை சூழ்ந்து கொண்டு, என்னிடத்தில் கேள்வி கேட்ட நேரத்தில், ஒரே வரியில் சொன்னேன். இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்து, வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும், வாக்களிக்காதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு வாக்களிக்க தவறிவிட்டோம் என்ற வருத்தப்படக்கூடிய அளவிற்கு நம்முடைய ஆட்சி செயல்படும் என்று நான் அப்போதே நம்பிக்கையை தெரிவித்தேன். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றக்கூடிய வகையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.
இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் எல்லாம் நலமும் வளமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும், மண மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உங்கள் குழந்தைகள் ஒன்றோ, இரண்டோ நிறுத்தி கொள்ள வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசு, மாநில அரசு எவ்வளவோ செலவு செய்து நிதியை ஒதுக்கி பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம். அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை. இப்படி எல்லாம் பிரச்சாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையை கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும், ஆக, சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதலமைச்சராக அல்ல, உங்களுடைய தந்தை என்கின்ற இந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டு, பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய், வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க, விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் சேகர்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் சந்திரமோகன், குமரகுருபரன், கண்ணன், அறங்காலர் குழுத்தலைவர் கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் இன்று காலை 5 ஏழை திருமண ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோயில் உற்சவர் மண்டபத்தில் நடைபெற்றது.
- மணமக்களின் சார்பில் உறவினர்கள், திருப்போரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்போரூர்:
தமிழக அரசு உத்தரவின்படி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் இலவச திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் இன்று காலை 5 ஏழை திருமண ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோயில் உற்சவர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி, காஞ்சிபுரம் உதவி ஆணையர் பாரதிராஜா, கோயில் ஆய்வாளர்கள் மற்றும் கோயில் செயல் அலுவலர்கள், மணமக்களின் சார்பில் உறவினர்கள், திருப்போரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமண ஜோடிகளுக்கு கோயில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
- வேதமந்திரம் முழங்க, மங்கள இசையுடன் 8 திருமண ஜோடிகளும் மணமகள் கழுத்தில் மணமகன் மாங்கல்யத்தை கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
- எட்டு திருமண ஜோடிகளுக்கும் தலா 2 கிராம் மாங்கல்யம், மெட்டி, புத்தாடை, மணமாலை ஆகியன இந்து சமய அறநிலையத்துறையினர் வழங்கினர்.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 திவ்ய தலங்களில் முதன்மையானதாகும். இக்கோவிலில் சுபமுகூர்த்த தினங்களில் 100 முதல் 300 வரையிலான திருமண விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கடலூர், விழுப்புரம், புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக திருவந்திபுரம் கோவிலில் திருமணம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி தேவஸ்தானத்தில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்யப்பட்டது. கோவில் எதிரில் உள்ள மலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள்ளான முகூர்த்த நேரத்தில் திருமண விழா சிறப்பாக நடந்தது.
திருமணத்தையொட்டி மண்டபத்தில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. எட்டு திருமண ஜோடிகளும் அலங்கரிக்கப்பட்டு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
திருமண விழா இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (பொறுப்பு) ஜோதி தலைமையிலும், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர்கள் வெங்கடகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் திருமண ஜோடிகளுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் எட்டு திருமண ஜோடிகளுக்கும் தலா 2 கிராம் மாங்கல்யம், மெட்டி, புத்தாடை, மணமாலை ஆகியன இந்து சமய அறநிலையத்துறையினர் வழங்கினர்.
இதையடுத்து வேதமந்திரம் முழங்க, மங்கள இசையுடன் 8 திருமண ஜோடிகளும் மணமகள் கழுத்தில் மணமகன் மாங்கல்யத்தை கட்டி திருமணம் செய்து கொண்டனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் திருமண ஜோடிகளின் உறவினர்கள் மணமகிழ்வுடன் அச்சதை தூவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருமணம் முடிந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எட்டு திருமண ஜோடிகளுக்கும் காமாட்சி அம்மன் விளக்கு, பித்தளை தாம்புலத்தட்டு, 2 குத்துவிளக்கு, பஞ்சபாத்திரம், சில்வர் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தலையணை, பெட்ஷீட் ஆகியனவற்றை சீர்வரிசையாக வழங்கினர். இதனை மணமக்கள் மணமகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர்.
- திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
- மணமக்களுக்கு கட்டில், மெத்தை, தலையணை, வெள்ளியில் மெட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களும், ஒரு மாத மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது.
மண்ணச்சநல்லூர்:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று இலவச திருமணம் நடைபெற்றது.
ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில், திருக்கோவில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கான செலவுகளையும் திருக்கோவில் நிர்வாகமே ஏற்கும் என்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார்.
அதன்படி, ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை ஆணையர் மண்டலங்களில் 500 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, இன்று (4-ந்தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் திருமணங்கள் நடைபெற்றன. சென்னை இணைய ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்டோருக்கான திருமண விழா இன்று நடைபெற்றது.
அந்த வகையில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக திருமண ஜோடிகள் காலையிலேயே கோவில் மண்டபத்திற்கு வந்திருந்தனர். மணமகன் பட்டு வேட்டி, சட்டையிலும், மணமகள் பட்டுச்சேலையிலும் அமர வைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு தங்கம் பூட்டிய திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார். இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்களுக்கு கட்டில், மெத்தை, தலையணை, வெள்ளியில் மெட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களும், ஒரு மாத மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது. திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்கள் சுமார் 500 பேருக்கு நேற்று இரவு, இன்று காலை சிற்றுண்டியும், திருமணம் முடிந்ததும் பகல் உணவாக விருந்தும் வழங்கப்பட்டது.
- இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிககளின் தற்காலிக பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு ஆணை வழங்கப்பட்டது.
- தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு 2.72 கோடி ரூபாய் நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த கோவில்களில் திருப்பணிகள், தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் குறைந்த தொகுப்பூதியத்தினை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி ஆட்சிக்குழுக் கூட்டத்தில் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 225 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் 129 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகத்திலுள்ள மூன்று கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் மற்றும் பள்ளியின் 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார். இந்த தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு 2.72 கோடி ரூபாய் நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர்சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமர குருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பழனியிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட கலெக்டர் ச. விசாகன், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ(2)-ன்படி பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.
- கோவில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பார்கள்.
சென்னை:
இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ-ன் கீழ், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் வருவாய் மாவட்டங்களின் எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்டக் குழுக்கள் அமைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டக் குழுவின் தலைவராக க.சுப்பிரமணியமும், உறுப்பினர்களாக ப.கலைச்செல்வி, ராம. முத்துராமன் ப.ஜெகநாதன், க.சாமி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டக் குழுவின் தலைவராக ஆ. கலியபெருமாளும், உறுப்பினர்களாக மா.சண்முகம், டி.கே.ராமச்சந்திரன், சி.பாஸ்கர், சே.கோகிலா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் அந்தந்த வருவாய் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டப்பிரிவுகள் 49 (1), 46 (i), 46(ii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கோவில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பார்கள்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7ஏ(2)-ன்படி இக்குழுக்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.