search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் இருந்து இந்து சமய அறநிலைய  துறை வெளியேற வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் இருந்து இந்து சமய அறநிலைய துறை வெளியேற வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்

    • தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது.
    • விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளன.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளா்த்ததிலும் ஆன்மிகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியதாகும்.

    தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் நலனின் அரசு துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதிலமடைந்த கோவில்களை சீரமைப்பதில்லை. விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அற நிலையத் துறையின் கீழ் உள்ளன. இந்தக்கோவில்கள் மீது எல்லாம் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டும் அறநிலையத் துறை ஆதீனத்தின் மீது பாா்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?

    காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் 233வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பரமாச்சாரியாா் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறாா். இந்நிலையில் அறநிலையத் துறை அமைச்சரின் உறவினா் பல்லாயிரம் கோடி சொத்துள்ள ஆதீன மடத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அவருக்கு தொல்லை கொடுத்து வந்த சூழலில் உடல் நலத்தைக் காரணம் காட்டி அவா் பதவியில் இருந்து விலகியுள்ளாா்.

    இதைத்தொடா்ந்து காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆதீனத்தை ஆக்கிரமிக்கும் இந்து சமய அறநிலைத் துறை செயல்களை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×