என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2026 சட்டசபை தேர்தல்"
- இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 சதவீத நிதி பகிர்வை அளிக்க வேண்டும்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர். அவற்றில்
* தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்திக்கு விழா எடுப்பது, சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டு வருவது, தொடர் ரெயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்காததது, மாநில அரசுக்கான நிதியை விடுவிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
* கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில், பிரதமர் மோடி அமைதி காப்பது அம்மாநிலத்தை மத்திய அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பிரசாரத்தை இப்போதே தொடங்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொடங்க வேண்டும்.
* திமுக அரசின் திட்டங்களால பயனடைந்தவர்கள் 2026-ல் திமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வார்கள்.
* இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 சதவீத நிதி பகிர்வை அளிக்க வேண்டும்.
* மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு 50 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- நமக்கு வேண்டியது எல்லாம் தமிழ் பண்பாடு-தமிழ் மொழி காக்கப்பட வேண்டும்.
- தமிழர்களுடைய வாழ்வு உலக அளவில் சிறந்து விளங்கிட வேண்டும்.
சென்னை:
சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஏற்பாட்டில் எளியோர் எழுச்சி நாளையொட்டி 48 ஜோடியினருக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று இந்த திருமணங்களை நடத்தி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
எளியோர் எழுச்சி நாள் என்ற பெயரில் சென்னை வடக்கு மாவட்டம் சார்பாக இன்றைக்கு 48 இணையர்களுக்கான திருமணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த திருமண நிகழ்ச்சியில் 66 வகையான சீர்வரிசைகளை கொடுத்து 48 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளோம். இதில் சில திருமணங்கள் காதல் திருமணங்கள் என்று சொன்னார்கள். இது சுயமரியாதை திருமணம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நல்ல நண்பர்களாக இருந்து நல்ல இணையர்களாக இருந்து உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும்.
இப்போதெல்லாம் இந்த மாதிரி திருமணங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளம் நடக்கிறது. இதுதான் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஏற்படுத்தி உள்ள அந்த பண்பாட்டு புரட்சி.
இதுபோன்ற பண்பாட்டு புரட்சியை இந்த மண்ணில் திராவிட இயக்கம் நடத்தி கொண்டிருக்கிற காரணத்தினால்தான் நம்மீது ஆரியர்களுக்கும், ஆரிய அடிமைகளுக்கும் நான் யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.
அடங்காத வயிற்றெரிச்சல் கோபம் வருகின்றது. அவர்களுடைய வயிற்றெரிச்சல் பற்றியும், கோபத்தை பற்றியும் நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை. நமக்கு வேண்டியது எல்லாம் தமிழ் பண்பாடு-தமிழ் மொழி காக்கப்பட வேண்டும்.
தமிழர்களுடைய வாழ்வு உலக அளவில் சிறந்து விளங்கிட வேண்டும். இது தான் திராவிட இயக்கத்துடைய நம்முடைய முதலமைச்சரோட குறிக்கோள். அதன் அடிப்படையில் தான் முதலமைச்சர் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 16 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் சென்ற செப்டம்பர் மாதம் முதல் மாதம் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். இதையெல்லாம் மக்கள் மத்தியில் பேசணும். சொல்ல வேண்டும். இந்த திட்டங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழ் பண்பாட்டினுடைய காவலராக விளங்குகிற ஆட்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் கலங்கி போய் உள்ளன.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நம்முடைய திட்டங்களை பார்த்து பயங்கரமாக கோபம் வருகிறது. வரத்தான் செய்யும். வேற வழியில்லை அவருக்கு. ஆனால் மக்கள் நம்முடைய திட்டங்களை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்து அவருக்கு கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது.
நமது முதலமைச்சரை மக்கள் வாழ்த்துகின்றனர். அதனால் அவருக்கு அந்த வயிற்றெரிச்சல் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அவர் இன்னொரு கேள்வி கேட்கிறார். ஏன் எல்லா திட்டத்துக்கும் கலைஞர் பெயரை வைக்கிறீர்கள் என்கிறார்.
தன்னுடைய 96-வது வயதுவரை தமிழ்நாட்டுக்காக தமிழ் மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞரின் பெயரை சூட்டாமல் நாம் யார் பெயரை சூட்ட முடியும்?
அவருக்கு இப்போது மோடி பெயரை வைக்கலாம் அல்லது அமித்ஷா பெயரை வைக்கலாம் என்பார். இவர் 3 மாதம் முன்பு என்ன சொன்னார். எந்த நேரத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்றார். இப்போது சேலத்தில் 10 நாளுக்கு முன்பு ஐ.டி. ரெய்டு நடந்தது. ரெய்டு நடந்த அடுத்த நாளே சொல்கிறார். கூட்டணி பற்றி இப்போது பேச முடியாது. தேர்தல் நெருக்கத்தில் பேசிக் கொள்ளலாம் என்கிறார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும் அ.தி.மு.க.வை பா.ஜ.க. வோடு இணைத்தாலும், இணைத்து விடுவார். அந்த அளவுக்கு இன்றைக்கு அ.தி.மு.க. நிலைமை உள்ளது. இதையெல்லாம் மக்களிடம் நீங்கள் பேச வேண்டும்.
வருகிற 2026 தேர்தல் மிக மிக முக்கியமாக தேர்தல். 2024-எம்.பி. தேர்தலில் மிகப்பெரிய சாதனை வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் தந்தார்கள். அதன் தொடர்ச்சியாக 2026-ல் குறைந்தது 200 தொகுதியில் வென்றாக வேண்டும் என தலைவர் அறிவுறுத்தி உள்ளார். அதற்கு நீங்கள் உங்களது பங்களிப்பை தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, கலாநிதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, கே.பி. சங்கர், எபிநேசர் மற்றும் இளைய அருணா, மனோகரன், இரா.கருணாநிதி, மருது கணேஷ், பாண்டி செல்வம், நரேந்திரன், சென்னை வடக்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் வே.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை.
- பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்ற புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு ஆகியோர் இந்த புத்தகத்தை வெளியிட்டனர். இந்தியக்குடியரசு கட்சியின் மாநில தலைவர் தமிழரசன், இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றி மாறன் ஆகியோர் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:-
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்மந்தப்பட்டு, விசாரணையில் இழுக்கப்படாமல் உள்ளவர்களை மறுவிசாரணைக்கு உட்படுத்தி சட்டரீதியான போராட்டத்தை தொடர வேண்டும். இதில் யாரும் விடுபட்டுவிடக்கூடாது. ஒரு கட்சியின் தலைவரை கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இங்குள்ள உளவுத்துறை, போலீசார் ஏன் இதை பற்றி சொல்லவில்லை இது கேள்வியை எழுப்புகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. எந்த அரசு ஆட்சியில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் நாங்கள் கேள்வியை கேட்போம். கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை.
பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இது அவருக்கு செய்யும் மரியாதை. இதற்காக அவரின் மனைவியை நாம் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கான வேலைகளை தொடங்கலாம். வெற்றி, தோல்வி விசயமல்ல. அவரை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்தில் அனுப்புவதை நாம் திட்டமாக வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் 3 சதவீதம் உள்ளவர்கள் இந்த நாட்டை ஆளும் போது, நாம் ஏன் ஆள முடியாது. அரசியல் அதிகாரத்தில் நமக்கான தேவைகளை அடைய திருமதி ஆம்ஸ்ட்ராங்கை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
- கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.
7-வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். இதற்காக 234 சட்டசபை தொகுதிகளிலும் தொகுதி வாரியாக தி.மு.க. தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளார்.
இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெறும் கட்சிப் பணிகள் குறித்தும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் குறித்தும் விசாரித்து தலைமைக்கு தகவல் அனுப்பி விடுகின்றனர்.
சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளதால் (15 மாதம்) கட்சிப் பணிகளை வேகப்படுத்துவதற்காகவும் ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி கூட்டி உள்ளார்.
இதுகுறித்து பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.
அப்போது உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த குழுவில் முதலமைச்சருடன், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 5 துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 27 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
- அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகிறது.
- அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டனர்.
கோவை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி பல விமர்சனங்களை அண்மை காலங்களாக தெரிவித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியாகிய நான் அவரை பற்றி விமர்சனம் செய்வதாக, அவரது கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் தெரிவித்துள்ளார்.
ஏதோ நான் முதலமைச்சரை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், எதிர்கட்சி தலைவர் என்ற நிலையில் இருந்து நான் தவறுதலாக பேசுவதாக விமர்சனம் செய்திருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், எப்படியெல்லாம் பேசினார் என்பது உங்களுக்கு தெரியும். குறிப்பாக என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக வர ஊர்ந்து பறந்து சென்றார் என விமர்சனம் செய்தார்.
இப்படி முதலமைச்சர் தன்னுடைய பதவியை, நிலையை மறந்து தன்னை விமர்சிக்கிறார்.
ஆனால் என்னை பொறுத்தவரைக்கும், அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளை பொறுத்தவரை எந்த ஒரு எதிர்கட்சியினரையும் தவறுதலாக விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால் எங்களை பற்றி ஆளுங்கட்சியினரின் தவறுதலான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி அவ்வப்போது கொடுப்போம். அ.தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்ற தவறான கருத்தை முதலமைச்சர் தெரிவிக்கிறார். கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காகவே தி.மு.க. பல திட்டங்களை ஆமை வேகத்தில் மேற்கொண்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டனர்.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்று தெரிவிக்கிறார். எப்படியாவது இந்த ஆட்சியாளர்கள் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களை கோவைக்கு கொண்டு வந்தார். திட்டங்களை அறிவிக்கிறார். எந்த திட்டமும் நடைமுறைப்படுத்தவில்லை. பணி தொடங்கவில்லை. பல மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு போகிறேன் என்கிறார். தி.மு.க ஆட்சியில் எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. எந்த பணியும் நடக்கவில்லை. அப்படி இருக்கையில் எப்படி போய் ஆய்வு பணி மேற்கொள்ள முடியும்.
அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்களை அறிவித்து, பணி முடிந்ததும் நாங்கள் அதனை திறந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை தான் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதுதான் நிலைமை.
2021 தேர்தலின் போது அவர் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள் என நான் முதலமைச்சரிடம் கேள்வி கேட்டேன். அதற்கு முதலமைச்சர் பதில் சொல்லாமல், உதயநிதி பதில் சொல்கிறார். முதலமைச்சர் எங்கே போனார்.
ஏற்கனவே நான் சொன்னபடி எல்லா மாநிலத்திலும் ஒரு முதலமைச்சர் தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் உதயநிதி பதில் சொல்லி கொண்டிருக்கிறார். முதலமைச்சர் சொல்ல வேண்டிய பதில் முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும். அதிகார மையங்கள் 4 இருக்கிறது. அது யார் என்பது உங்களுக்கு தெரியும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. அப்படி ஒரு முதலமைச்சர் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். பொதுமக்கள் பிரச்சனை என்று சொன்னால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடையாது.
அ.தி.மு.க. கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் தொடர் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்துடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் வர ஒன்றரை ஆண்டு காலம் இருக்கிறது. அப்போது தான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும். ஏற்கனவே ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரும் என தெரிவித்துள்ளேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்பதை நாங்கள் பலமுறை தெரிவித்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலைஞரின் சிலையை திறக்கவாய்ப்பு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி.
- முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மரகதம் கந்தசாமி திருமண மண்டபத்தின் முன்பு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதிக்கு 3 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
எனக்கும் இந்த விழுப்புரம் மாவட்டத்திற்கும் ஒரு நெருங்கிய, மறக்க முடியாத சொந்தமும், பந்தமும் உண்டு. நான் இளைஞரணி செயலாளராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பலமுறை இங்கு வந்துள்ளேன்.
ஆனால் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக உங்களுடைய அன்பைப்பெற்று இங்கு வந்துள்ளேன். அதுவும் முதல் நிகழ்ச்சியாக கலைஞரின் சிலையை திறக்கவாய்ப்பு பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் 21 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2003-ம் ஆண்டில் தளபதி நற்பணி மன்றம் சார்பாக கவுதமசிகாமணி ஏற்பாடு செய்த விளையாட்டுப்போட்டி தான், எனது பொது வாழ்வில் முதன்முறையாக தொடங்கி வைத்த போட்டியாகும்.
தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்று மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளை தொடங்கிவைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.
கலைஞரின் கொள்கைகள், லட்சியங்கள், அவருடைய எழுத்துக்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்று அனைத்து இடங்களிலும் கலைஞர் சிலையை திறந்து வைத்து வருகிறோம்.
கலைஞர் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்திய திட்டங்களில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். மகளிருக்கு கட்டண மில்லா பஸ் பயணம் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை மகளிர் சேமிக்கிறார்கள்.
இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளன. அதேபோல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகைவழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தமிழ் புதல்வன் என்றபெயரில் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு திட்டம் என்ற அற்புதமான திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது.
இதுதவிர முத்தாய்ப்பு திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில மாவட்டங்களில் இந்ததொகை விடுபட்டிருப்பதாக குறைகள் இருக்கிறது. அந்த குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று இந்தநேரத்தில் உறுதி அளிக்கிறேன்.
நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.விற்கு தேடிக் கொடுத்தீர்கள்.
40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து 100 சதவீதம் வெற்றியை கொடுத்தீர்கள். தி.மு.க. அரசுக்கு மக்களால் கொடுக்கப்பட்ட நற்சான்றுதான் இந்த வெற்றிக்கு காரணம்.
வரக்கூடிய 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தந்து குறைந்தது 200 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற வைத்து தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் எல்லோரும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக இன்று முதலே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். நம்முடைய அரசின் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளி இருப்பார்.
அவர்களை தொடர்பு கொண்டு இப்போதே பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனை கலைஞர் சிலை முன்பு நாம் எல்லோரும் உறுதி ஏற்கவேண்டும். எந்த திசையிலிருந்து யார் வந்தாலும் டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும், எப்பேற்பட்ட கூட்டணி போட்டு வந்தாலும் அவர்களை வீழ்த்தி விட்டு தி.மு.க. கூட்டணியை மாபெரும் வெற்றி பெற வைக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் அயராது தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது.
- தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியில் எடப்பாடி நகர அ.தி.மு.க சார்பில் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 11 சட்டமன்ற தொகுதியில் 10 இடங்களில் வென்றது அ.தி.மு.க கூட்டணி. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது. தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கட்சியை வளர்த்தவர்கள், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், மூத்த அமைச்சர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதியை இன்றைக்கு துணை முதலமைச்சராக்கி இருக்கின்றீர்கள் என்றால் அங்கு சர்வாதிகாரம் தலைதூக்கி இருக்கின்றது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்தது உதயநிதி இளவரசராக இருக்கின்றார். அவர் முதலமைச்சர் என்கிற ஸ்டாலினுடைய கனவு ஒருபோதும் தமிழகத்தில் பலிக்காது.
தி.மு.க.வில் கருணாநிதி தலைவராக இருக்கும்போது ஸ்டாலினை வளர்த்துவதற்கு கட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 20 ஆண்டு காலம் ஸ்டாலின் அந்த கட்சிக்காக உழைத்தார். இதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேயராக இருந்தார். எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்புறம்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதற்கு 20 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் கட்சிக்காக பாடுபடாமல் தி.மு.க. என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு, கருணாநிதி குடும்பம் என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் என பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்தியாவிலேயே மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் மன்னராட்சி என்பது ஒருபோதும் எடுபடாது. அதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டாங்க.
குடும்ப கட்சியாக மாறிவிட்டது தி.மு.க., வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும் ஸ்டாலின் அவர்களே. நீங்கள் எவ்வளவோ முயற்சி பண்ணுகிறீங்க. தன்னுடைய மகனை பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வைத்து மக்களிடத்திலே ஈர்ப்பு சக்தி உண்டாக்க வேண்டும் என்பதற்கு முயற்சி செய்கிறீங்க. எந்த ஒரு முயற்சியும் எடுபடாது.
மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டை பொறுத்தவரையும் விழிப்புணர்வு கொண்ட மக்கள். 2011-க்கு பிறகு 2021 வரை அதி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்தது என சற்று நினைத்து பாருங்கள்.
எடப்பாடி தொகுதி என்று சொன்னால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எடப்பாடியிலேயே இருக்கின்றார் என்கிற ஒரு அடையாளத்தை இன்றைக்கு தமிழக மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.
10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டினோம்.
தி.மு.க. ஆட்சியில் எதிர்கட்சி சொல்வதை காது கொடுத்து கேட்பது கிடையாது. தி.முக. ஸ்டாலின் ஆட்சியில் தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை நிறுத்தப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என எவ்வளவோ சூழ்ச்சி செய்தாங்க. ஆனால் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- 4 கட்சிகளை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணிக்கு 45.38 சதவீத வாக்குகள் கிடைத்தன.
அதே நேரம் ஆட்சியை இழந்த அ.தி.மு.க., கூட்டணியுடன் 75 இடங்களை பெற்றது. வாக்கு சதவீதமும் 39.72 சதவீதமாக குறைந்து போனது.
இதனால், வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால், ஓரளவு வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகள் எல்லாம் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க. எதிர்பார்க்கும் கூட்டணி அமைய வேண்டுமெனில், தி.மு.க. கூட்டணியில் மாற்றம் ஏற்பட வேண்டும். அது சாத்தியமாகுமா? என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில், அரசியல் களத்துக்கு புதிதாய் வந்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி காய்களை நடத்திவரும் நடிகர் விஜய், சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தினார். அந்த மாநாட்டில் திரண்ட தொண்டர்களின் கூட்டம் மற்ற கட்சிகளை சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுவும் மாநாட்டில் பேசிய விஜய், ''2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது உறுதி. என்றாலும், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும்'' என்று வெளிப்படையாக அறிவித்தது, தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வே விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் என்ன? என்று யோசித்து வருகிறது. வலுவான கூட்டணியுடன் களம் இறங்கும் தி.மு.க.வை வீழ்த்த இதுபோன்ற கட்சியுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று அ.தி.மு.க. கருதுகிறது.
இந்த நிலையில், வரும் 6-ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், சட்டசபை தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதற்காக சில திட்டங்களை வியூகங்களாக வகுத்து வருகிறது.
இதற்கு மத்தியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கும், செய்தி தொடர்பாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 கட்சிகளை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
'அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை' என்ற வகையில், தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், முன்கூட்டியே அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.
- அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது.
- 2026 சட்டசபை தேர்தல் குறித்து வியூகம்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள இந்த குழுவில் இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு ஏற்கனவே இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி, விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அப்போது கட்சிப் பணிகளை வேகப்படுத்துவது பற்றி உதயநிதி ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூடுகிறது.
இந்த கூட்டம் முடிந்ததும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
- தி.மு.க.வின் வாரிசு அரசியல் குறித்து பா.ஜ.க. தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கோவை:
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் இன்று தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்தார்.
பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். நாட்டின் சிறிய கிராமங்களிலும், மூளை முடுக்குகளிலும் சிறந்த மனித சேவை செய்பவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், சமூக சேவை செய்பவர்களையும் கண்டறிந்து உலகம் முழுவதும் அறியும் வகையில் குறிப்பிட்டு பேசி வருகிறார்.
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளார். தி.மு.க.வில் அனுபவமிக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் வாரிசு அரசியலையே காட்டுகிறது.
தி.மு.க.வில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும், அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்ற நிலையை தி.மு.க. பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளது.
மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டு சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுப்பதால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும்.
திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் என பேசும் தி.மு.க. அரசு, அமைச்சரவையில் முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழங்கவில்லை.
கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும், மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி தான் செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வின் இந்த வாரிசு அரசியல் குறித்து பா.ஜ.க. தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கருணாநிதி.
- 75 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வளையப்பேட்டை பகுதியில் தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உருவசிலையுடன் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கலைஞர் கோட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கருணாநிதி உருவ சிலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.பி கல்யாணசுந்தரம் ஆகியோர் கலைஞரின் கோட்டத்தை கும்பகோணத்தில் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
கும்பகோணம் தி.மு.க.வின் மண் என்பது கருணாநிதிக்கு மட்டும் அல்ல, இந்தி எதிர்ப்பு போராட்டம், கருப்பு கொடி போராட்டம் என தஞ்சையில் நீலமேகம் தலைமையில் சிறப்பாக நடத்திக்காட்டினர். அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கருணாநிதி. தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 100 சதவீதம் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மயிலாடுதுறையிலும் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.
75 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டியவர். தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வழிகாட்டி திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன. மேலும் மகளிர் உரிமை திட்டம் அனைத்து தகுதி உள்ள மகளிர்களுக்கும் கிடைக்கும்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக உடன்பிறப்புகள் சிறப்பாக பணியாற்றி மீண்டும் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று.
- எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10 கோடி உறுப்பினர்களுடன் உலகத்திலேயே அதிகமான தொண்டர்களுடன் இருக்கும் ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. கடந்த 2-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.
இந்தியா முழுவதும் இதுவரை 4.50 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 11 கோடி பேரை இணைக்க இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மட்டும் 1 கோடி பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ல் மோடி ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் சுட்டுக்கொலை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மோடி ஆட்சிக்கு பின்னர் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எல்லை தாண்டி மீனவர்கள் செல்லாமல் இருக்கவும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் மீனவர்களுக்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களிடம் 10 சதவீதம் பணம் இருந்தாலே 60 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் வங்கி கடனும் ஏற்பாடு செய்யப்பட்டு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கடல்பாசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் 1 லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாதி, மதம் பற்றி தி.மு.க.வினர் பேசக்கூடாது. தமிழகத்தில் தலித்துகளுக்கு ஒரு சுடுகாடு, மற்றவர்களுக்கு ஒரு சுடுகாடு என இரட்டை சுடுகாடு நடைமுறை இன்றும் இருந்து வருகிறது. பட்டியலின மாணவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தமிழக முதலமைச்சரும், கனிமொழி எம்.பி.யும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாதி, மதம் குறித்து பேச வேண்டும். சாதி, மதம் குறித்து தி.மு.க. பேசுவது நியாயமற்றது.
கோவில்களில் அரசுக்கு என்ன வேலை. இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
கோவில்களில் உள்ள பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்கும் தருணம் இது தான் என நாங்களும் எண்ணுகிறோம்.
4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று. மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். 4 மாநில சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தமிழகத்தில் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 18 சதவீதம் வாக்குகள் பெற்றோம். வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்