என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • நாளை காலை அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடக்கிறது.
    • நாளை இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, சப்பர வீதி உலா ஆகியன நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலையில் உலகம்மன், தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் காலை 9-10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மேளதாளம், வாண வேடிக்கை முழங்க பக்தர்களின் பக்தி கோஷங்களுடன் தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. பின்னர் தேர் காலை 9-50 மணிக்கு நிலையத்தை அடைந்தது.

    நாளை (சனிக்கிழமை) காலை 8-20 மணிக்கு மேல் யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் தெற்கு மாசி வீதியில் காசி விசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல் நடக்கிறது. இரவு 9 மணிக்கு மேல் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கவிதா, கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • இன்று பட்டு வாங்கும் உற்சவம் மற்றும் பூர சலங்கை உற்சவம் நடக்கிறது.
    • நாளை தபசு உற்சவமும், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

    சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிவகங்கை குளத்திற்கு எதிரில் சிவகாம சுந்தரி அம்பாளுக்கு தனி சன்னதி உள்ளது. சிவகாம சுந்தரி அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான ஐப்பசி பூர உற்சவம் கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை அம்பாளுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு முக்கிய வீதியில் வலம் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை பட்டு வாங்கும் உற்சவம் மற்றும் பூர சலங்கை உற்சவமும், நாளை(சனிக்கிழமை) காலை தபசு உற்சவம், இரவு சிவானந்த நாயகி சமேத சோமஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
    • நாளை பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

    தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்பாள் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவின் 9-ம் திருநாளான நேற்று காலை 7.35 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 9.30 மணிக்கு பாகம்பிரியாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு யானை, குதிரை, சிலம்பாட்டம், வால்சுருள் விளையாட்டு, தப்பாட்டம், கரகாட்டம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பெரிய தேரில் பாகம்பிரியாள் அம்பாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். ரதவீதிகளில் சுற்றி வந்து தேர் நிலையை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, பா.ஜனதா தலைமை செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மஞ்சள் இடித்தல், 10 மணிக்கு சுந்தரபாண்டிய விநாயகர் ஆலயத்தில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி, தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம்பிரியாளம் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சங்கரராமேசுவரர் ரிஷப வாகனத்தில் பாகம்பிரியாளுக்கு காட்சி தருதல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

    • 22-ந்தேதி செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
    • 22-ந்தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் காலை 8 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று 9-ம் நாள் திருவிழாவை யொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    காலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 5.30 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணி அளவில் வணிக வைசிய சங்கம் சார்பில் தேரோட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், துணைத் தலைவர் பரமசிவன், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், பழனி குமார் மற்றும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

    தேர் ரதவீதிகள் வழியாக மேளதாளம் முழங்க காலை 11.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் ஆய்வாளர் சிவகலை பிரியா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது.

    22-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8.15-க்குள் செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பூவனநாதர் யானை வாகனத்திலும், செண்பகவல்லி அம்மன் பல்லக்கிலும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • தம்டகோடி மலையில் நடந்தது
    • பக்தர்கள் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிபாளையம் தம்டகோடி மலையில் சுப்பிரமணி யசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் 13-ம்தேதி கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிருத்திகை விரதமிருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    மேலும் இரவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தங்கத் தேர் உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி ஆடி பாடி சென்றனர்.

    • ராஜபாளையம் அருகே புரட்டாசி தேரோட்ட திருவிழா நடந்தது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி பொங்கல் தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று தோரோட்டம் நடைபெற்றது. ஏ.கே.ஆர். குழும தலைவர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தேருக்கு பின்னால் விழுந்து வழிபாடு செய்து தங்களுடைய நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

    • நாளை இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
    • ஞாயிற்றுக்கிழமை இரவு பானக பூஜை நடைபெறுகிறது.

    புதுவை முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் தேசிகருக்கு காலையில் சேவை மற்றும் சாற்றுமுறையும், இரவில் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

    உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடக்கிறது. மின் விளக்கு அலங்காரத்தில் ஹயக்ரீவர், தேசிகர் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நாளை (சனிக்கிழமை) இரவு ஊஞ்சல் உற்சவமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு பானக பூஜையும் நடைபெறுகிறது.

    • நான்கு தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை இழுத்தனர்.

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் விநாயகர் தேர், முருகன் தேர், குற்றாலநாத சுவாமி தேர், குழல்வாய்மொழி அம்மன் தேர் ஆகிய நான்கு தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

    தேர்கள் ரத வீதிகளில் சுற்றி மீண்டும் புறப்பட்ட நிலையத்தை அடைந்தன. தேரோட்ட விழாவில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை இழுத்தனர்.

    • தேரை மன்னர் யதுவீர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
    • தேர் மீது பக்தர்கள் மரிகொழுந்தை வீசி கரகோஷங்களை எழுப்பினர்.

    உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி கடந்த 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடந்து முடிந்தது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் கடந்த 5-ந்தேதி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்து யானையில் ஊர்வலமாக சென்றார்.

    இந்த நிலையில் தசரா விழா முடிந்ததும் பவுர்ணமி நாளில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் வகையில் தேரோட்டம் நடப்பது வழக்கம். அதேபோல், பவுர்ணமியையொட்டி நேற்று சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.

    நேற்று நடத்த தேரோட்டத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். அந்த தேரை காலை 7.50 மணிக்கு சப லக்கனத்தில் மன்னர் யதுவீர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த தேரோட்டத்தையொட்டி மைசூரு சாமுண்டி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

    அவர்கள் தேரில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் வெள்ளத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தார். தேர் மீது பக்தர்கள் மரிகொழுந்தை வீசி கரகோஷங்களை எழுப்பினர். இதில் கலெக்டர் பகாதி கவுதம், எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, ராமதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி சாமுண்டி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • திருவோண நட்சத்திரத்தில் ரத்னாங்கி சேவை நடைபெற்றது.
    • இன்று (வியாழக்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினசரி சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை, மாலை வேளையில் சாமி வெவ்வேறு வாகனத்தில் வீதிஉலா வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் தேசிகர் எழுந்தருளினார்.

    இதையடுத்து டிராக்டர்கள் மூலம் தேர் இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று திருவோண நட்சத்திரத்தில் ரத்னாங்கி சேவை நடைபெற்றது. அப்போது பெருமாள் சன்னதியில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் தேசிகர் ஆகியோர் மலையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் எழுந்தருளினர். பின்னர் யோக நரசிம்மர் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கீழே கொண்டுவரப்பட்டு பெருமாள், ராமர், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார், ராஜகோபாலன், பள்ளிகொண்டநாதர், ஆண்டாள், ஆழ்வார், பாஷியக்காரர் ஆகிய சன்னதிகளில் தேசிகர் நேரில் சென்று தரிசனம் செய்தார்.

    பின்னர் பெருமாள், தாயார் தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி மற்றும் சாற்று முறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • நாளை மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.
    • நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில் நடந்தது.

    ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இரவு ஏழுமலையான் கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் பவனி வந்தார்.

    8-வது நாளான நாளை காலை மகா தேரோட்டம் நடக்கிறது. மாடவீதியில் உலா வரும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.

    9-வது நாளான நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பதியில் நேற்று 82,463 பேர் தரிசனம் செய்தனர். 35, 385 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக 'ராமச்சந்திரமூர்த்தி' அலங்காரத்தில் சுதர்சன சாளக்ராம ஹாரம் மற்றும் தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து தமக்கு பிடித்தமான, விசுவாசமான அனுமந்த வாகனத்தின் மீது அமர்ந்தபடி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அனுமனை போல் பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்துடன் பக்தர்களும், பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே மலையப்பசாமி அனு மந்த வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து காலை 6 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் மனைவி சொர்ணலதாரெட்டி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    மேலும் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. வாகனச் சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சூரிப பிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    ×