என் மலர்
நீங்கள் தேடியது "Southwest Monsoon"
- கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.
நெல்லை:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கி உள்ளது.
இதனால் கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகத்தால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 18 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது.
மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன் என்பதால் இந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களான நெல்லை , கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 7,000-க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் காற்றாலை சீசன் தொடங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.
- கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மீண்டும் தீவிரம் அடைந்து வடகிழக்கு திசையிலும், அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாகவும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது.
- நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
தென்காசி:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
அதாவது ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கி சீசன் களைகட்டும். இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கிவிட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் மிதமான சாரல் மழை பொழிய தொடங்கியது.
செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. அங்கு இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. வார விடுமுறை நாள் என்பதால் அதில் தற்போது சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ தொடங்கியுள்ளனர். மெயின் அருவி முழுவதும் பாறையாக காட்சியளித்த நிலையில் அதில் சற்று தண்ணீர் வழிய தொடங்கி உள்ளதால் எப்பொழுது தண்ணீர் அதிகரிக்கும் ஆனந்த குளியல் போடலாம் என சுற்றுலா பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது.
- பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
கூடலூர்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது. நாற்றங்கால் அமைத்து விவசாய பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மழை இல்லாததால் கவலையில் உள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.90 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் குடிநீருக்காக 250 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 51.91 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிறது. 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.73 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பருவமழை தொடங்கியதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரை நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- எல்லநள்ளியிலிருந்து கேத்தி செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
- ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குன்னூர்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் அவ்வப்போது மிதமானது முதல் பலத்த மழையும் பெய்து வருகிறது.
குன்னூர் நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று மதியம் முதல் பலத்த மழை பெய்தது. இரவிலும் மழை தொடர்ந்ததால் குன்னூர்-கோத்தகிரி சாலை, ஊட்டி சாலை உள்பட முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.
தொடர் மழைக்கு குன்னூர்-கோத்தகிரி சாலையில் வண்டி சோலை பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக குன்னூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதனிடையே எல்லநல்லி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்து கனமழையால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் எல்லநள்ளியிலிருந்து கேத்தி செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் மழை நின்றவுடன் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
இதேபோல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எருமாடு கிராம நிர்வாக அலுவலகம் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதேபோல் உப்பட்டி, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, சேரம்பாடி, கரியசோலை உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
- திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 31.40 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. அடையாமடை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததையடுத்து ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, களியல், குழித்துறை, தக்கலை, குளச்சல், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை பெய்தது பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் உள்ளது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானம் மட்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2 அணைகளில் இருந்தும் 884 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் தோவாளை அனந்தனாறு, புத்தனாறு சானல்கள் உட்பட அனைத்து சானல்களிலும் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 40.03 அடியாக இருந்தது. அணைக்கு 360 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 31.40 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 11.2, பெருஞ்சாணி 7.2, சிற்றார் 1-2, சிற்றாறு 2-7, பூதப்பாண்டி 3.2, களியல் 17.3, குழித்துறை 33, நாகர்கோவில் 1.4, சுருளோடு 9, தக்கலை 14.2, குளச்சல் 4.2, இரணியல் 8, பாலமோர் 25.4, மாம்பழத்துறையாறு 11, திற்பரப்பு 14.2, ஆரல்வாய்மொழி 1, அடையாமடை 57, குருந்தன்கோடு 4, முள்ளங்கினாவிளை 12.2, ஆணைக்கிடங்கு 8.2, முக்கடல் 5.
- தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
- ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது.
தென்காசி:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலமும் ஒன்றாகும்.
இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, புலியருவிகளில் சீசன் காலக்கட்டங்களில் வெளிமாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சீசன் களைகட்டும்.
இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 4-ந்தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்காசியில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்ய தொடங்கியது.
இதனால் தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பெய்த சாரல் மழை காரணமாக பாறைகளாக காட்சியளித்து வந்த குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கி உள்ளது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது.
இன்று காலை முதல் குற்றால பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் குளிக்க வந்தனர். அங்கு இன்று காலையில் வெயில் அடித்தாலும், குளிர்ந்த காற்று வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் மேலும் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
- இந்த ஆண்டு கேரளாவில் 66 பேர் எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர்.
- மாநிலம் முழுவதும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்கவும், சுகாதாரமான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக கடந்த 8-ந்தேதி தொடங்கியது.
பருவமழை தொடங்கியதுமே மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில சுகாதாரதுறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலும் சேகரிக்கப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 377 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிக்கப்பட்டோரில் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 3678 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மாநில சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டு கேரளாவில் 66 பேர் எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர். இதில் 22 பேர் எலி காய்ச்சலால் பலியானது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்கவும், சுகாதாரமான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்.
- இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை, சட்டப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த பெருமைக்குரியவர் அம்மா. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். ஆனால், இதனைத் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகம் திறந்து வேண்டுமென்ற நிலையில், இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.
அண்மையில் காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு சார்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை வைத்திருப்பதால் முதலமைச்சர், கர்நாடக முதல்-மந்திரியுடன் பேசி, தேவையான அழுத்தத்தை கொடுத்து, ஜூன் மாதத்திற்கு அளிக்க வேண்டிய நீரினை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிடவும், ஒவ்வொரு மாதமும் உரிய நீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதே சென்னையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
- 1991-ம் ஆண்டு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவில் மழை பெய்தது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். அப்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களிலும் மழை பொழிவு அதிகமாக இருக்கும்.
ஆனால் சென்னையில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் போதே மழை பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதே சென்னையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
இதற்கு முன்பு 1991-ம் ஆண்டு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவில் மழை பெய்தது. அதன் பிறகு 1996-ம் ஆண்டு சென்னையில் ஜூன் மாதத்தில் அதிகமாக மழை பெய்தது. இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் மாதத்தில் நேற்று வரை இயல்பாக 1.6 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் நேற்று ஒரே நாளில் இயல்பை விட 22 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 3 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.
- சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று வெயில் தலை தூக்கியது.
- சென்னையை தவிர 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை குளிர வைத்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று பகலில் மட்டுமின்றி இரவிலும் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் லேசாகவும் சில நேரங்களில் கன மழையாகவும் பெய்தது.
சென்னையை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று வெயில் தலை தூக்கியது. நள்ளிரவு வரை மழை பெய்தாலும் கூட காலையில் இருந்து சூரிய வெளிச்சம் தெரிந்தது.
இதற்கிடையே வங்கக் கடலில் தென்கிழக்கு கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையை தவிர 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான இடி-மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மதுராந்தகம் (செங்கல்பட்டு), தரமணி (சென்னை) இடங்களில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், மின்னல், சென்னை அயனாவரம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் தலா 7 செ.மீ. பதிவாகி உள்ளது.
- தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கோடை வெயிலின் வெப்பத்தால் அவதிபட்டு வந்த மக்களுக்கு 2 நாட்கள் பெய்த மழை இதமாக இருந்தது. 3 மாதங்கள் சுட்டெரித்த வெயில் பாதிப்பில் இருந்து மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து உள்ளது. ஒரு சில நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
அதன்படி இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலையில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரையொட்டிய மாவட்டங்களில் மழை தூறல் இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை சிறுசிறு தூறலாக பெய்தது. இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் இன்று காணப்பட்டது.