search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students suffer"

    • ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
    • அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது.

    7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, அசம்புரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    காலை முதலே மழை பெய்து வந்ததால் பள்ளிக்கூடங்களுக்கு வந்த மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வருவதற்கு சுணக்கம் காட்டினார்கள். பெற்றோர் அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு வந்தனர். குடை பிடித்தவாறு வந்தாலும் ஒரு சில மாணவிகள் மழையின் வேகத்தினால் நனைந்தனர். சீருடைகள் நனைந்ததால் மாணவிகள் அவதிப்பட்டனர்.

    பள்ளிக்கூடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    இடலாக்குடி பகுதியில் சாலையில் உள்ள பள்ளம் எங்கு கிடக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்.

    சுசீந்திரம், கன்னியாகுமரி, கொட்டாரம், அஞ்சுகிராமம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தக்கலை, குருந்தன்கோடு, சுருளோடு, மயிலாடி, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை கொட்டியது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    கோழிப்போர் விளை பகுதியில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மட்டுமின்றி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கோதை ஆறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக உள்ளது. அணைக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 637 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. அணைக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 16.14 அடியாகவும்,பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 40.76 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் 17.90 அடியாகவும் உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கன்னிமார் 17.2, கொட்டாரம் 27.8, மயிலாடி 15.2, நாகர்கோவில் 32.4, ஆரல்வாய்மொழி 13, பூதப்பாண்டி 25.2, பாலமோர் 34.4, தக்கலை 49.6, குளச்சல் 40, இரணியல் 14.4, அடையாமடை 23, குருந்தன்கோடு 28.2, கோழிப்போர்விளை 62.2, மாம்பாழத்துறையாறு 29, சிற்றாறு 1-10.2, சிற்றாறு 2-28.4, களியல் 14.2, பேச்சிப்பாறை 32.8, பெருஞ்சாணி 44.6, புத்தன் அணை 39.8, சுருளகோடு 31.2, ஆணைக்கிடங்கு 28.4, திற்பரப்பு 13, முள்ளங்கினாவிளை 43.8.

    • அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி நேரு நினைவு மேல்நிலைப் பள்ளியில் மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை கடந்து வகுப்பறைக்குள் செல்லும் நிலை உள்ளது.
    • மேலும் கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி கிடப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவலத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் நேரு நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12 வரை வகுப்புகள் உள்ளன. இங்கு மேட்டுப்பட்டி, பேகம்பூர், முத்தழகுபட்டி, தோமையார் புரம், பாறைபட்டி உள்ளிட்ட திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி நின்ற வண்ணம் உள்ளது. நேரு நினைவு மேல்நிலைப் பள்ளியில் மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை கடந்து வகுப்பறைக்குள் செல்லும் நிலை உள்ளது.

    மேலும் கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி கிடப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவலத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 1000 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் சுகாதார வளாகம் முறைப்படியும், போதுமானதாக வும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    திறந்த வெளியில் தேங்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது என்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடு வீடாகவும், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர், திறந்தவெளி சிறுநீர் கழிக்கும் நிலையை பள்ளி நிர்வாகம் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விடுமுறை தினமான நேற்று பள்ளியின் வாசல் முன்பு மீண்டும் அந்த கழிவு லாரியை போலீசார் நிறுத்தி உள்ளனர்.
    • இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி மீண்டும் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆலங்குளம்:

    தமிழகத்தில் கேரளாவிற்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், அங்கிருந்து திரும்பி வரும்போது அங்குள்ள இறைச்சி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து தென்காசி மாவட்டங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகிறது.

    அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கேரளாவில் இருந்து பிளாடிக், மருத்துவக்கழிவு என சுமார் 10 டன் கழிவுகளை முறைகேடாக ஏற்றி வந்த லாரியை ஆலங்கு ளத்தில் வாகனச்சோ தனையின்போது போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    பின்னர் அந்த லாரியை போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தினர். அந்த லாரியை அங்கு நிறுத்தியதால், ஆசிரியர்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் மாதக்கணக்கில் போலீசார் அந்த லாரியை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றாமல் உள்ளதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து சில நாட்களாக அந்த லாரி போலீஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று பள்ளியின் வாசல் முன்பு மீண்டும் அந்த லாரியை போலீசார் நிறுத்தி உள்ளனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி மீண்டும் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசாரிடம், தனியார் பள்ளி முன்பு உங்களால் இப்படி லாரியை நிறுத்த முடியுமா? என ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதனை போலீசார் கண்டு கொள்ளாமல் அலட்சியமான பதிலை கூறி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். எனவே உடனடியாக அந்த லாரியை காட்டுப்பகுதிக்குள் எடுத்துச்சென்று விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    • முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.
    • சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அருகே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை உள்ளது. இங்கு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் தில்லைவிளாகம், வடகாடு முத்துப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை திருவாரூர் போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.

    தற்போது தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    குறிப்பாக பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில நாட்களாக திண்டு க்கல்-நிலக்கோட்டைக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
    • ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆட்டோவில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து திண்டுக்கல், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்ற னர்.

    மேலும் அலுவலகம் செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக திண்டு க்கல்-நிலக்கோட்டைக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேலும் வத்தலக்குண்டு பகுதிக்கும் குறைவான அரசு பஸ் சேவையே உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆட்டோவில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏழை, எளிய மாணவர்கள் ஆட்டோவிற்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை போக்கு வரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பஸ் சேவை பாதிக்கப்பட்ட தாக அவர்கள் தெரி வித்தனர்.

    தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காலை நேரத்தில் அரசு பஸ்களை நம்ப முடியவில்லை. இதனால் தனியார் பஸ் மற்றும் ஆட்டோக்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாணவ-மாணவிகளின் எதிர்காலம் கருதி போதிய அளவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்
    • படிப்பு வீணாகி போவதாகவும் குற்றச்சாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில்

    இருந்து தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    மாலை நேரம் கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆரணி பழைய பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி வசதிகள் இல்லாத காரணத்தினால் தினந்தோறும் 2 பாடபிரிவுகள் பின்னரே கல்லூரிக்கு செல்ல நேரிடுகின்றன.

    இதனால் கல்லூரி படிப்பு வீணாகி போவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீட்டு மதிய நேரத்தில் செய்யாறு பகுதிக்கு அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்கி மாணவர்களின் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும என்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.
    • சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முக சுந்தரபுரம் ஊராட்சியில் கரிசல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்று க்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.

    இதனால் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    இது சம்பந்தமாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கரிசல் பட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடத்தை உடனடியாக பராமரிப்பு செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து சமுதாய கூடத்தில் இயங்கும் பள்ளிக்கூடத்தை சொந்த கட்டிடத்திற்கு உடனடியாக மாற்றித்தரும்படி மாணவ ர்களின் பெற்றோர்களும் கரிசல்பட்டி பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல்லில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்
    • சாலை பணியை விரைவு படுத்த பொதுமக்கள் கோரிக்கை

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு கம்பிகள் பொருத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்த பணியும் நடக்கவில்லை.

    இருபுறமும் ஒரு கார் அல்லது ஆட்டோ மட்டுமே செல்ல வழி உள்ளது. மற்ற வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சரளைக் கற்கள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டி உள்ளது. கடந்த 1 மாதமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு இருந்த காலத்திலேயே இப்பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் பள்ளிக்கு வருகின்றனர்.

    இரவு நேரங்களில் எந்தவித எச்சரிக்கை பலகையும் இல்லாததால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்லும் இந்த சாலையில் ஆபத்தை உணராமல் வாகனங்கள் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது.
    • பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து விளக்கு அருகே நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதேபோல் ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ்சும் பழுதாகி அடுத்தடுத்து நின்றது.

    இதனால் அதில் இருந்த பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சாலையோரம் காத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவ்வழியே வந்த மாற்று பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அங்கிருந்த பயணிகள் கூறியதாவது:-

    ஆலங்குளத்தில் இருந்து பாவூர்சத்திரம் சென்ற பஸ் நேற்று தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எப்.சி. காண்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்குள் பழுது ஏற்பட்டு ஓடியதால் அதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

    பயணிகள் கோரிக்கை

    நெல்லை- தென்காசி சாலையில் பழுதான பஸ்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. அதில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரிவர செல்ல முடியாமல் போகும் சூழ்நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பள்ளி செல்லும் சாலையில் சேறும் சகதியு மாக மாறி அவ்வழியாக சென்று வர மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். கொல்லன்குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே கிணற்றுபட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பாலா தோட்டம், களத்து ப்பட்டி, கணவாய்ப்பட்டி, தொட்டியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர்.

    இதன் அருகேயே அங்க ன்வாடி கட்டிடம் உள்ளது. இங்கு குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் சாலை அருகே கொல்லன்குளம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த குளம் நிரம்பி சாலை யில் தண்ணீர் தேங்குகிறது.

    இதனால் சேறும் சகதியு மாக மாறி அவ்வழியாக சென்று வர மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகளும் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியா மல் தவித்து வருகின்றனர்.

    எனவே இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். கொல்லன்குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • இந்த கனமழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் ஒழுகுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்டது தாழங்காடு கிராமம். இந்த பகுதியை சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பெரும்பாலா னோர் விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தற்பொழுது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 43 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்த பள்ளியின் ஓடுகள் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்து விட்டது.  இது குறித்து அப்பகுதி ெபாதுமக்கள் கூறியதாவது:-

    பழுதான இந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் அமைச்சர்கள் வரை கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் ஒழுகுகிறது.  இதுபோல் மழை நீர் ஒழுகுவதால் பள்ளியில் அமர்ந்து மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சிதலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கொடைக்கானலில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இன்று காலையிலும் சாரல்மழை பெய்தவண்ணம் இருந்தது.
    • கொடைக்கானலில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாதது மாணவ-மாணவிகளை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கொடைக்கானலில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இன்று காலையிலும் சாரல்மழை பெய்தவண்ணம் இருந்தது.

    தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் பள்ளிக்கு சென்றனர். கொடைக்கானலில் எப்போது மழைபெய்யும், எப்போது நிற்கும் என்று தெரியாத நிலையில் பள்ளிகளுக்கு சென்றபிறகும் மழை பெய்தபடி இருந்தது.

    இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்க முயன்றபோது அவர் அலைபேசியை எடுக்கவில்லை. கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கேட்டபோது காலை 6 மணிமுதல் 7 மணிவரை மழை பெய்தால்மட்டுமே விடுமுறை விடமுடியும். கொடைக்கானலில் அதுபோன்ற சூழல் தற்போது இல்லை.

    எனவே விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் அறிவிக்கப்படவில்லை என்றார். வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது.

    இருந்தபோதும் கொடைக்கானலில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாதது மாணவ-மாணவிகளை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியது.

    எனவே கொடைக்கானலில் மாணவர்களின் நலன்கருதி மழைக்காலங்களில் உரிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும் என பெற்றோர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×