என் மலர்
நீங்கள் தேடியது "tag 109600"
- மதுரை பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது.
மதுரை
மதுரை அண்ணா பஸ் நிலையப் பகுதியல் மழைநீர் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளிட்டவற்றிற்கு வருவோர் அண்ணா பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மாட்டுத்தாவணி பஸ் நிலையம் தொடங்கப்படுவதற்கு முன்பாக முறையாக பராமரிக்கப்பட்டு வந்த அண்ணா பஸ் நிலையம் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது.
பஸ் நிலையத்தின் உள் பகுதியில் மழைநீர், கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி பணியாகவும் காட்சியளிக்கிறது. மேலும் பஸ் நிலைய பகுதி முழுவதுமே குடிமகன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பெண் பயணிகளும், பஸ் நிலையத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகிகளும், போக்குவரத்து கழகமும், மாநகர காவல் துறையும் இணைந்து செயல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா பஸ் நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும். பயணிகள் அச்சமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஈரோடு சிந்தன் நகரில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் ஊற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.
ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக இன்று மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.
அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜ், மாலதி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு ஒன்று திரண்டனர்.
அவர்கள் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில்கள் உள்ளன. திடீரென மாநகராட்சி சார்பில் குடியிருப்பு மத்தியில் பாதாள சாக்கடை கழிவுநீர்ஊற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதற்கு நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இன்று திடீரென மாநகர் சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் வந்தனர். நாங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் அவர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இருந்தாலும் போலீசார் உதவியுடன் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஊற்று நிலையம் அமைந்தால் எங்கள் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் இந்த வழியாகத்தான் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.
இதனால் துர்நாற்றம், சுகாதார கெடு, நோய் தொற்று பரவ ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைக்கப்படுவதற்கு பதில் ஊரின் ஒதுக்குப்புறமாக இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பு பணி நடைபெறுகிறது
- ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.
நாகர்கோவில் :
கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஆணையர் ஆனந்த் மோகன், மண்டல தலைவர் அகஸ்டினா கோகில வாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- கோயமுத்தூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற வேண்டும்.
- பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது.
வீரபாண்டி :
திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கோயமுத்தூர், பல்லடம்,பொள்ளாச்சி, உடுமலை ,பொங்கலூர். போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் நின்றுதான் பேருந்து ஏற வேண்டும்.
ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் எப்பொழுதும் மழைநீரும் சாக்கடை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது. மேலும் பேருந்து ஏறுவதற்கு இந்த கழிவு நீரின் வழியாகத்தான் பேருந்தில் ஏற வேண்டும். இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி சாலை ஒற்றக்கண் பாலம் அருகில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதிக அளவிலான இருசக்கர வாகனங்கள் கொங்கு மெயின் ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர். சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர் . நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 21-ந் தேதி பள்ளியிலிருந்து செல்லும் கழிவு நீர் குழாயை சீரமைக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்
- கழிவு நீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதோடு ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி :
குலசேகரம் அருகே உள்ள கூடைத்துக்கி படநிலத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) இவர் அங்குள்ள தனியார் பள்ளியின் தலைவராக உள்ளார்.
கடந்த 21-ந் தேதி பள்ளியிலிருந்து செல்லும் கழிவு நீர் குழாயை சீரமைக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ராதா கிருஷ்ணன் அந்தப் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
அப்போது மணலி விளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38)அங்கு வந்து தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் கழிவு நீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதோடு ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மணிகண்டன் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவு
- இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சிக் குழாய் அமைத்துவிடவேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தியது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருப்பினும் அதை சில குறிப்பிட்ட பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வந்தது. அந்த அடிப்படையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு முதல் 12-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது.
இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதை த்தொடர்ந்து கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம், கொட்டாரம் கீழத்தெரு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஐயப்பன் மற்றும் கொட்டாரம் வடக்கு தெரு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் பிச்சமுத்து ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் பிறகும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை தொடர்ந்து அடைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை அடைப்பதை கண்டித்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம் கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 5-வது வார்டு முதல் 12-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை அடைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 5-வது வார்டு முதல் 12- வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியாகும் குழாயை அடைப்பதற்கு இடைக்காலதடை விதித்து உத்தரவு பிறப்பித்துஉள்ளது. இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
- எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது.
- வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லலை.
அவினாசி :
அவினாசி சூளை பகுதியில் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் சாக்கடை நீர் குட்டைபோல் தேங்குவதால் பொதுமக்கள் பாதிககப்படுகின்றனர்.இதுகுறித்து எம்.பி.ஆர்.லேஅவுட் குடியிருப்புவாசிகள் கூறியதாவது:-
எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது. இதற்கு அருகில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அங்கு ள்ள நூற்றுகணக்கான வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லாததால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் எங்கள் எம்.ஆர்.பி.லேஅவுட் பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு சாக்கடை நீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் துர் நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களை தொற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிசை மாற்றுவாரியத்தினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மக்கள் விரோத நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-
குமரி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஓடைகளில் விடாமல் வீட்டிற்குள்ளேயே உறிஞ்சி குழாய் அமைத்து விட வேண்டும் என பொது மக்களுக்கு விரோதமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேரூ ராட்சி நிர்வாகமும் இதனை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டிவருகிறது.
இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களை உறிஞ்சி குழாய் அமைத்திட நிர்ப் பந்தப்படுத்தி வருகிறது. வீட்டில் உறிஞ்சி குழிகள் அமைத்து பராமரிக்க ரூ.1 லட்சம் செலவாகும். ஏழை மக்கள் இதற்கு எங்கு செல்வார்கள்.
சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில் நகராட்சித்துறை அமைச்சர், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். அந்த நிதியில் இருந்து பேரூராட்சி பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வீடுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். பிற மாவட்டங் களில் இதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், குமரி மாவட்டத்தில் பொதுமக்களை தொடர்ந்து துன்புறுத்தி இதனை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தி வருமானால் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு
- பேரூராட்சி செயல் அலுவலர் மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
கன்னியாகுமரி:
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சிக் குழாய் அமைத்து விட வேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தி உள்ளது.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். இருப்பினும் அதை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சில வார்டு பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது.
இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம், கொட்டாரம் கீழத்தெரு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஐயப்பன் மற்றும் கொட்டாரம் வடக்கு தெரு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஏ. பிச்சமுத்து ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ நம்பி கிருஷ்ணன், கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர்செல்வன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது இந்த 3 தெரு நிர்வாகம் சார்பில் கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறும் குழாயை நிரந்தரமாக அடைப்பதற்கு பதிலாக பாதாள சாக்கடை திட்டம் அல்லது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மாற்று ஏற்பாடு செய்யும்படி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி அதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் அங்குஇருந்து கலைந்து சென்றனர்.
- எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது.
- பழைய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி அவை கூடத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். மன்ற பொருள்களை கணக்கர் ராஜகணேஷ் வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,
உறுப்பினர் ரம்யாதன்ராஜ் பேசுகையில், எனது வார்டில் கடந்த ஐந்து மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
கவுன்சிலர் வள்ளிமாரிமுத்து: மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். கவுன்சிலர் வேல்முருகன்: சீர்காழி தீயணைப்புநிலையத்திற்கு தீயணைப்பு வாகனம் எளிதாக சென்று வரும் வகையில் சாலை அமைத்திடவேண்டும்.
கவுன்சிலர் ராஜசேகர்: நகரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது என்றார். குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரூபவர்களுக்கு டெண்டர் கொடுப்பதுதான் முறையாகும்.
கவுன்சிலர் முழுமதி இமயவரம்பன்: எனது வார்டில் பள்ளி கட்டிடம் பழுதாய் உள்ளது. இதை போல் சத்துணவு கூடமும் பழுது அடைந்துள்ளது இதனை சரி செய்ய வேண்டும். பனமங்கலம் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.
கவுன்சிலர் சுவாமிநாதன்: பழைய பஸ் நிலையத்தில் கட்டணக் கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.
கவுன்சிலர் ரமாமணி : முன்பு எரிவாயு தகணமேடை நடத்திவந்தவரிடம் பணியாற்றி தற்போது டென்டர் கோரூம் பாபு கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவை செய்ததால் அவருக்கு டென்டர் விடவேண்டும்.
நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், சீர்காழி நகராட்சி பகுதியில் பொது நிதியின் மூலம் மின்விளக்குகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால் வசதி விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றார்.
தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் ஈசானிய தெருவில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு கீழ் சேவை அமைப்பால் நடத்தப்பட்டு வரும் எரிவாயு தகணமேடை டென்டர் விடுவது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே கட்சி பாகுபாடு இல்லாமல் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் நகர்மன்ற தலைவர் மேஜையை சூழ்ந்துக் கொண்டு மேஜையை தட்டி ஆட்சேபனை செய்து விவாதத்தில் ஈடுப்பட்டனர்.
குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த காமராஜர் மக்கள் நலசேவை அறக்கட்டளைக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவித்தார். இதனால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. டென்டரை நேசக்கரங்கள் அமைப்பிற்கு தரவலியுறுத்தி நகர்மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன், முழுமதி இமயவரம்பன், ராமு, ராஜேஷ், நித்யாதேவி, வள்ளி, கலைசெல்வி, ரம்யா, ரேணுகாதேவி ஆகிய 9 உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் முழங்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.
- வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.
- சுகாதார சீர்கேடு ஏற்படு வதிலிருந்து நிலத்தையும், நீரையும் காப்பது நமது தலையாய கடமையாகும். இது குறித்து தற்போது மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை, பருவநிலை மாற்றம், நாகரீகத்தின் நவீன பாதிப்பு, அதிகரித்து வரும் கட்டு மானங்கள், ஏனைய காரணங்களினால் வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.
இது மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள் ளது. குடியிருப்பு பகுதி களில் இருந்தும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேற்றப்ப டும் கழிவுநீர் கால்வாய்களிலும், குழாய்கள் மூலம் வாய்க்கால்களிலும் கலக்கப்படுவதால் நீர் மாசடைந்து, பாசன நிலங்களும் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உற்பத்திலும், உணவிலும் நச்சு கலக்கும் அபாயம் ஏற்படுகிறது. மனிதர்கள் குடிக்கும், குளிக்கும் நீரில் சாக்கடைநீர் கலந்து வருவதால் நோய் பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. மேலும் பொது இடங்களில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் அவ்விடம் மழைக்கா லங்களில் சேறும் சகதியு மாக காட்சியளித்து கொசுக் கள் உற்பத்தியாக வழி வகுக்கிறது.
சுகாதார சீர்கேடு ஏற்படு வதிலிருந்து நிலத்தையும், நீரையும் காப்பது நமது தலையாய கடமையாகும். இது குறித்து தற்போது மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் பொருட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் ஆகிய வற்றில் இருந்து உருவாகும் கழிவுநீரினை அதனை உருவாக்குபவர்களாலேயே முறையாக கையாளும் வகையில் அக்கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் பொது இடத்தில் வெளியேறாமல் தடுக்க கட்டிட உரிமையா ளரால் கழிவுநீர் உறிஞ்சு குழி அமைக்கவும், மீறும் இடங்களில் நிர்வாக அலுவலர்கள் மூலம் கழிவு நீர் வெளியேறும் முகப்பினை அடைக்கவும் 01.09.2022 முதல் 09.09.2022 வரை சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
எனவே, இதற்கு பொது மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கி கன்னியாகுமரி மாவட்டத்தை நன்னீரில் கழிவுநீர் கலக்காத மாவட் டமாக மாற்றிட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.