என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரியம்"

    • மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மின்வாரியத்தில் உள்ள முக்கியமான காலிப்பணியிடங்களை நிரப்ப நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    சட்டசபையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில்,

    * மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மின்மாற்றி பழுதை சரிசெய்ய விவசாயிகளிடமோ, நுகர்வோரிடமோ கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மின்வாரியத்தில் உள்ள முக்கியமான காலிப்பணியிடங்களை நிரப்ப நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    * 234 தொகுதிகளிலும் மின்வாரியம் சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

    அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயசங்கரன் குற்றம்சாட்டிய நிலையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது.
    • முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.

    51 சதவீதம் கட்டண உயர்வு, 96 சதவீத வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6,920 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு,

    ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு:

    இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா?

    தமிழ்நாட்டில் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்திருக்கும் போதிலும் இழப்பு தொடர்வதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    51% அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை என்பது தான் அரசும் மின்வாரியமும் எந்த அளவுக்கு ஊழலில் திளைக்கின்றன என்பதற்கு சான்றாகும்.

    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்துள்ள 2023-24ம் ஆண்டிற்கான வரவு & செலவு கணக்குகளில் இருந்து பல புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

    திமுக ஆட்சியில் முதன் முதலாக 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது.

    இதில் சுமார் 20% மின் வணிகம் அதிகரித்ததன் காரணமாக கிடைத்தது என்று வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள சுமார் ரூ. 18,400 கோடி கூடுதல் வருவாய் கட்டண உயர்வின் மூலம் கிடைத்தது. 2021&22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் இழப்பு ரூ.9130 கோடி தான் என்பதால், கிடைத்த கூடுதல் வருவாயைக் கொண்டு மின்வாரியம் குறைந்தது ரூ.10,000 கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.

    2023- 24ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கு 2.18% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கும் அதே அளவு கட்டணம் உயர்த்தப்பட்டது. அது நேரடியாக மக்கள் மீது திணிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசால் நேரடியாக செலுத்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் குறையவில்லை.

    அதனால், 2023- 24ஆம் ஆண்டிலாவது மின்சாரவாரியம் லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஆண்டிலும் மின்சாரவாரியம் தொடர்ந்து இழப்பைத் தான் சந்தித்திருக்கிறது.

    2023- 24ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.97,757 கோடி ஆகும். இது 2021-22ஆம் ஆண்டின் வருவாயான ரூ.49,872 கோடியை விட 96%, அதாவது ரூ.47,885 கோடி அதிகமாகும்.

    இடைப்பட்ட காலத்தில் மின் வணிகம் 1137.8 கோடி அதிகரித்துள்ளது. 2022&ஆம் ஆண்டில் ஒரு யூனிட்டின் சராசரி கட்டணம் ரூ.5.60 என்பதால், அதன் மூலம் கிடைத்த ரூ.6371 கோடியை கழித்தாலும் கூட, கட்டண உயர்வின் மூலம் மட்டும் இரு ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு ரூ.41,514 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

    அதன் காரணமாக மின்சார வாரியம் குறைந்தது ரூ.32 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இரு ஆண்டுகளில் வருவாய் ரூ.41,514 கோடி அதிகரித்திருந்தாலும் கூட, இழப்பு ரூ.2210 கோடி மட்டும் தான் குறைந்திருக்கிறது என்றால், கட்டண உயர்வால் கூடுதலாக கிடைத்த மீதமுள்ள ரூ.39,304 கோடி எங்கே சென்று மாயமானது?

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு தொடர்வதற்குக் காரணம் அங்கு நடைபெறும் ஊழல்கள் தான். தமிழ்நாடு மின்வாரியம் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை செயல்படுத்தி, மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்றால் ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கும் மேலாக லாபம் ஈட்ட முடியும்.

    ஆனால், அவ்வாறு நடந்தால் ஆட்சியாளர்களால் கமிஷன் வாங்கி கோடிகளை குவிக்க முடியாது என்பதற்காகவே மின்திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

    மின்சாரத்தை வாங்குவதில் எந்த அளவுக்கு கொள்ளை நடந்திருக்கிறது என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே தெளிவாக நிரூபிக்கின்றன.

    2021- 22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த மின் வணிகம் 8200.20 கோடி யூனிட் ஆகும். இதில் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டது 7262.90 கோடி யூனிட். அதாவது மின்வாரியத்தின் மொத்த வணிகத்தில் 12.91% மட்டும் தான் மின்வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 87.09% மின்சாரம் தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. 2023- 24ஆம் ஆண்டில் மொத்த வணிகமான 9338 கோடி யூனிட்டுகளில் 8290.60 கோடி யூனிட்டுகள், அதாவது 88.79% வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது.

    ஒரு மாநிலத்தின் மின்வாரியம் அதன் மொத்த வணிகத்தில் சுமார் 90% மின்சாரத்தை வெளியிலிருந்து அதிக விலைக்கு வாங்கினால் எவ்வாறு லாபம் ஈட்ட முடியும்?

    வெளியிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு இரு ஆண்டுகளில் 14% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், செலவு 70% அதிகரித்திருக்கிறது. 2021&22ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.4.50க்கு வாங்கப்பட்ட நிலையில், 2023&24ஆம் ஆண்டில் இது ரூ.6.72 ஆக அதிகரித்திருக்கிறது. இது 49.33% உயர்வு ஆகும். மின்சாரத்தின் விலை இந்த அளவுக்கு உயருவதற்கு வாய்ப்பே இல்லை.

    ஆட்சியாளர்களுக்கு தங்களுக்குத் தேவையானவற்றை பெறுவதற்காகவே இந்த அளவுக்கு அதிகவிலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் சிலரே கூறுகின்றனர்.

    ஒரு மின்வாரியம் ஆண்டுக்கு ரூ.55,754 கோடிக்கு வெளியில் மின்சாரம் வாங்கினால், அதில் எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்கக் கூடும் என்பதை பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

    அதேபோல், தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு இந்தக் காலத்தில் வெறும் 21% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், அதற்கான ஆன செலவு மட்டும் 77% உயர்ந்திருக்கிறது.

    இதுவும் எங்கேயும் நடக்காத அதிசயம். 2021&22ஆம் ஆண்டில் 2552 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.14,061 கோடி, அதாவது ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 செலவாகியுள்ளது.

    ஆனால், 2023&24ஆம் ஆண்டில் 3110.60 கோடி யூனிட் உற்பத்தி செய்ய ரூ.24,920 கோடி செலவாகியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.8.01 செலவாகியுள்ளது.

    இது 46% உயர்வு ஆகும். சந்தனக் கட்டைகளை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்தால் கூட இந்த அளவு செலவாகாது எனும் நிலையில், நிலக்கரி அதிக விலை கொடுத்து வாங்கியதால் தான் இவ்வளவு அதிக செலவாகியிருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்த பிறகும் ரூ.6920 கோடி இழப்பில் இயங்குவது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

    வெளியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் விலை 49.33% அளவுக்கும், மின்வாரியத்தின் உற்பத்திச் செலவு 46% அளவுக்கு உயர்ந்ததன் காரணம் என்ன? என்பது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஜேம்ஸ்ராஜ் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
    • இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்ராஜ் (வயது 55). இவர் கழுகுமலை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று இரவு வழக்கம்போல் தூங்க சென்றார். இன்று காலை உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரபி சுஜீன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஜேம்ஸ்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் ராஜ் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.
    • மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.

    எனவே தஞ்சை மாநகர கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டி பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப ல்கலைக்கழகவளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ்நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சி க்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    பண்டிகை தினங்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.
    • வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மின்வாரிய தொ.மு.ச. மாநில பொதுச் செயலாளர் மணிமாறன் ஆலோசனையின் படி, சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சேர்மன் உமா மகேஸ்வரி, தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், திட்டத்தலைவர் தங்கமாரிமுத்து, திட்ட பொருளாளர் சத்யராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து மின்வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞர் அணி சரவணன், தி.மு.க. மாவட்ட மாணவரணி உதயகுமார், கார்த்திக், தொ.மு.ச.வை சேர்ந்த சத்தியராஜ், வெள்ளத்துரை, கலாவதி, கருப்பசாமி, கிருஷ்ணகுமார், பால்ராஜ், கிருஷ்ணசாமி, முத்துபாண்டியன் சிவசுப்பிரமணியன், பேச்சிமுத்து, தி.மு.க. அவைத்தலைவர் முப்புடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கோட்டச் செயலாளர் சரவணமுருகையா செய்திருந்தார்.

    • நீங்கள் பணம் கட்டிய விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்துங்கள் என்றும் மோசடியாக சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
    • நம்பி பொதுமக்கள் ஏமாறாத வேண்டாம் இது உண்மையல்ல.

    மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உங்களது முந்தைய மாத மின்கட்டணம் கட்டாவிட்டால் மின் இணைப்பு இன்றிரவு துண்டிக்கப்படும் என்று பலருக்கு எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மூலம் தகவல் வருவதாக புகார்கள் வருகின்றன. அதில் நீங்கள் பணம் கட்டிய விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்துங்கள் என்றும் மோசடியாக சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாறாத வேண்டாம் இது உண்மையல்ல.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தகவல்
    • மின்வயர்களை, புதைவடங்களாக மாற்றும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    திமுக தணிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி யான செய்தி வந்துள்ளது. 23.08.2022 அன்று மின்வாரியத்திற்கு நான் அளித்த புகார் மனுவை அடிப்படை யாகக்கொண்டு, கடந்த 27.10.2022 அன்று தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலா ஜியை தலைமை செயலகத் தில் நேரில் சந்தித்து குமரி மாவட்டத்தில் இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களின் தேர் பவனி செல்லும் பகுதிக ளில் அமைந்துள்ள மின்வ யர்களை, புதைவடங்களாக மாற்றுவது தொடர்பாக கோரிக்கைமனு அளித்திருந் தேன். மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை தமிழ் நாடு அமைச்சர் செந்தில்பா லாஜி தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக் கும்படி கேட்டுக்கொண்டார். தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்து றையின் கீழ் இயங்கி வரும் நாகர்கோவிலில் அமைந் துள்ள நாகராஜா கோவில், கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசு வாமி கோவில், வடிவீஸ்வ ரத்தில் அமைந்துள்ள அழ கம்மன்கோவில் மற்றும் பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேர் ஓடும் பகுதியில் உள்ள மின்வயர்களை, புதைவடங் களாக மாற்றும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுமதிக் காக சமர்ப்பிக்கப்பட்டுள் ளது. அனுமதி பெற்ற உடன் வாரிய விதிமுறைப்படி பணிகள் தொடங்கப்படும் என்பதை அரசாங்க தரப் பில் இருந்து கடிதம் மூல மாக தெரிவித்துள்ளனர்.

    பக்தர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு என்னுடைய கோரிக்கையின் அடிப்ப டையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழ் நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
    • மின்கம்பிகளுக்கும் கட்டடங்களுக்கும் போதிய இடைவெளி இருக்குமாறு கட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் பகுதியில் விவசாய தொழிலாளி ஒருவர் தென்னை மரத்தில் குச்சி மூலம் தேங்காய் பறிக்க சென்றபோது மின் கம்பியில் குச்சி பட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த நிலையில் மின்கம்பங்களின் அருகே செல்லும்போது கவனமுடன் செயல்பட மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து, பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு ) திருஞானசம்பந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தெற்கு அவிநாசி பாளையத்தில் கடந்த 27 ந்தேதி அன்று, தென்னை மரத்தில் குச்சி மூலம் தேங்காய் பறிக்கச் சென்றபோது மின் கம்பிகளில், அந்த குச்சி பட்டதால் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். எனவே இத்தகைய மின்விபத்துகளை தவிர்க்க விவசாயிகள், மின் கம்பிகள் அருகே செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் கட்டடங்கள் கட்டும் போதும் இருக்கும் கட்டடங்களை விஸ்தரிக்கும் போதும் மின்கம்பிகளுக்கும் கட்டடங்களுக்கும் போதிய இடைவெளி இருக்குமாறு கட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் குறைதீர்க்கும் முகாம் தியாகராஜ நகரில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கு பொது தேர்வு நடப்பதால் சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் தியாகராஜ நகரில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    அதிகாரிகளுக்கு உத்தரவு

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் கிராமப்புறம் ( பொறுப்பு) வெங்கடேஷ்மணிக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது கிராமப்புற கோட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கு அரசு பொது தேர்வு நடப்பதால் சீரான மின்விநியோகம் வழங்குவதற்கும், இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏதேனும் மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின் விநியோகம் வழங்குவதற்கும், தவிர்க்க இயலாத சூழலில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். 

    • தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
    • மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

    நாளுக்கு நாள் வெயில் தாக்கம் கடுமையாகி வருவதால், பல வீடுகளில் இரவில் மட்டுமின்றி பகலிலும் ஏசி, மின்விசிறி, காற்று குளிர்விப்பான் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளன.

    இது மட்டுமின்றி கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைக்கும் குளிர்சாதனப் பெட்டிகளின் பயன்பாடும், அலுவலகங்கள், மென்பொருள் நிறுவனங்களிலும் ஏ.சி.க்களின் பயன்பாடும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலவரப்படி மொத்த மின் பயன்பாடு தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவாக 17 ஆயிரத்து 705 மெகாவாட்டாக அதிகரித்தது.

    இந்த தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி, மின் கொள்முதலில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் மின் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும், மின் நுகர்வோர் இந்த மாதிரியான சமயங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உயரமான சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.
    • மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 70 ஆண்டுகள் பழமை யானது. இந்த பள்ளிக்கு தற்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவ தற்காக வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லை அளவீடு செய்யும்போது திருப்பத்தூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான மின்மாற்றி பள்ளியின் எல்லைக்குள் வருவது கண்டறியப்பட்டது.

    உடனடியாக அங்கு ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயல் அதிகாரி தனுஷ்கோடி மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் அந்த மின்மாற்றியால் பள்ளி மாணவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்மாற்றிக்கு தேவையான அளவில் உயரமான சுற்றுச்சுவர் அமைத்து பள்ளியின் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்காக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டி ஆலோசனை வழங்கினார்கள்.

    அதனடிப்படையில் மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்த அளவின்படி டிரான்ஸ் பார்மரை சுற்றி பள்ளி மாணவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் உயர மாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    ×