என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்கட்டணம்"
- மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை.
- மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும்.
மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை விதித்து தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.
ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது என்றும், ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், இனி வரும் மாதங்களில் ரூ.3000, ரூ.2000 என மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும்.
- மத்திய மின்சார துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக் விளக்கம் அளித்துள்ளார்.
- மின்சார கட்டணம் தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை
மக்களவையில் மத்திய மின்சார துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
மின்சார சட்டம் 2003 விதிகளின்படி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நுகர்வோருக்கு கட்டணத்தை நிர்ணயிக்கிறது என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்சார கட்டணம் தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
- அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் அல்லல்படுத்துகிறது.
- துவரம் பருப்பு-பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை நேரடியாகவும், மின் கட்டண உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வால் மறைமுகமாகவும் வாட்டி வதைக்கின்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசை கண்டித்து
அதிமுக சார்பில் கழக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெறுகிறது.
அன்று எதிர்க்கட்சித் தலைவராக "ஷாக் அடிப்பது மின்சாரமா மின் கட்டணமா" என்று ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு, இன்று முதல்வராக இருக்கும் அவருக்கு, இந்த விடியா ஆட்சியில் "ஷாக்அடிக்கும்_மின்கட்டணம்" என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்.
நிர்வாகத் திறமையின்மையே உருவான இந்த அரசு, ஒருபுறம் மின் கட்டண சுமையை மக்கள் மீது ஏற்றியதுடன், மறுபுறம் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் அல்லல்படுத்துகிறது.
போதைப்பொருள் எங்கும் கிடைக்கும் விடியா திமுக ஆட்சியில் பருப்பு_பாமாயில்_எங்கே ஸ்டாலின் என்று மக்கள் கேட்கிறார்கள்
மின் கட்டணத்தை உயர்த்தியும் ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வழங்கப்படுவதை நிறுத்த முயற்சித்தும் மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அநியாயமாக மக்கள் தலையில் சுமத்தப்படும் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுமாறும், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு-பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின் கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க. அரசு உயர்த்தியது.
- ஏழைஎளிய, நடுத்தர மக்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின் கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க. அரசு உயர்த்தியது. இதனால், ஏழைஎளிய, நடுத்தர மக்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இந்தச் சுமையிலிருந்து பொது மக்கள் மீண்டு வருவதற்குள்ளாக, மேலும் ஒரு நிதிச்சுமை அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு.
- வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்வு.
தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், " 24 மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.
இப்போது மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசு அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தும்" என்றார்.
இதேபோல், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது கண்டனத்திற்குரியது என பாமக வழங்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறத்து மேலும் அவுர், " விக்கிரவாண்டி தேர்தலுக்கு பிறகு மின் கட்டணத்தை அரசு உயர்த்தும் என முன்பே நாங்கள் கூறி வந்தோம்.
இந்த மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, மின்கட்டண உயர்வு என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "மின் கட்டண உயர்வால் திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர முடிகிறது" என்றார்.
- எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
- மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன்.
அரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வீர்சிங். இவர் செயலி ஒன்றில் இணை நிறுவனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அதில், கடந்த 2 மாதங்களில் மொத்தமாக ரூ.45 ஆயிரத்து 491 ரூபாய் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு மின் கட்டணம் செலுத்தியதற்கான ஸ்கிரின்ஷாட்டையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். அதனுடன், அதிக மின் கட்டண உயர்வு காரணமாக மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் எப்படி இவ்வளவு கட்டணம் வந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் தங்கள் வீடுகளுக்கும் அதிகப்படியான மின் கட்டணம் செலுத்துவது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
- மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும்.
- தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்தும் இன்று மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அ.தி.மு.க.வினர் தங்கள் கழுத்தில் மின்சார ஒயர்களை மாட்டிக் கொண்டும், அலுவலகத்தின் கதவை இழுத்து பூட்டியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு ஆண்டுக்கு 2 முறை மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தோடு, அபராத கட்டணம், நிலை கட்டணம், மின்விலை ஈடுகட்டுவதற்கான கூடுதல் வரி கட்டணம், காலதாமத கட்டணம் என்ற தலைப்புகளிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறது.
மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும். புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 150 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தி எதிர்காலத்தில் தனியாருக்கு மின்துறையை தாரை வார்த்து அவர்கள் பயன்பெறும் வகையில் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அரசு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கவர்னர் இப்பிரச்சினையில் தலையிட்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோமளா, மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள் குணசேகரன், நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
- மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
சென்னை:
தமிழ்நாட்டில் குறு-சிறு தொழில் நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இயங்கி வருகிறது. சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் அதிகமாக இந்த தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
'எம்.எஸ்.எம்.இ' என்று அழைக்கப்படும் இந்நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். 25 சதவீத கூடுதல் மின்கட்டணத்தை குறைக்க கோரி வலியுறுத்தினார்கள்.
இதனால் தமிழக அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 25 சதவீத கூடுதல் கட்டணத்தை 15 சதவீதமாக அரசு குறைத்தது. மீதி 10 சதவீதத்தை மின் வாரியத்துக்கு அரசு மானியமாக வழங்கியது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை உருவானது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எலக்ட்ரானிக் மின் மீட்டரை ஜூன் மாதத்திற்கு பிறகு ஸ்மார்ட் மீட்டராக மாற்ற உள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது. அப்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின் பயன்பாட்டை தனியாக கணக்கிட்டு அதன்படி 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இதன்படி இப்போது சென்னையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவன தொழிற்பேட்டைகளில், எலக்ட்ரானிக் மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மார்ச் முதல் வாரம் டெண்டர் முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு சென்னையில் உள்ள குறு-சிறு தொழிற்சாலைகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
அதேபோல் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.
அதன் அடிப்படையில் 25 சதவீதம் கட்டணம் கூடுதலாக கணக்கிட்டு வசூலிக்கப்படும். இதற்காக சென்னை புறநகரில் உள்ள தொழிற்பேட்டைகளில் 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்மூலம் மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
- தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல் மின்சாரக் கட்டண உயர்வு தான்.
- மிகக்குறைந்த அளவை மட்டும் குறைப்பதாக அறிவித்த தமிழக அரசு, அதையும் நடை முறைப்படுத்தாதது ஏன்?
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8.15ரூபாயில் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த அக்டோபர் 18-ந் தேதி அறிவித்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்று வரை அக்கட்டணக் குறைப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை. பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த இரு மாத சுழற்சிக்கான மின்கட்டணம், பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.8.15 என்ற அளவில் தான் கணக்கிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பை செயல்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் வீடுகளுக்கான மின்கட்டணம் தான், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு இணைப்புகளுக்கும் வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாதத்திற்கு 100 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப் பட்டது. ஆனால், பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, வணிகப் பயன்பாட்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக சுமார் 10 மடங்கு அளவுக்கு உயர்த்திய தமிழ்நாடு அரசு, இலவச மின்சாரத்தையும் ரத்து செய்துவிட்டது. அதனால் பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் 13 மடங்கு அளவுக்கு அதிகரித்தது.
இப்போது முதலமைச்சர் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பின்படி, இனி 150 அலகு பயன்பாட்டிற்கு ரூ. 1029 கட்டணம் செலுத்த வேண்டும். இது பழைய கட்டணத்தை விட 9 மடங்கு அதிகம் ஆகும்.
பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை 13 மடங்கு உயர்த்திவிட்டு, அதில் மிகக்குறைந்த அளவை மட்டும் குறைப்பதாக அறிவித்த தமிழக அரசு, அதையும் நடை முறைப்படுத்தாதது ஏன்?
தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல் மின்சாரக் கட்டண உயர்வு தான். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழ்நாட்டு மக்களால் இன்னும் மீள முடியவில்லை. எனவே, அறிவிக்கப்பட்ட அளவில் இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை ஏற்கனவே இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும்.
முன்பு வழங்கப்பட்டதைப்போல பொதுப்பயன் பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின்சாரக் கட்டணம் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
- பெரும்பாலான குடும்பங்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மழை நின்று 36 மணி நேரம் கடந்தும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடியாத அவல நிலை நிலவுகிறது. பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி, இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி அல்லலுற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல், பல வீடுகளுக்குள் மழைநீர் உட்புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டுள்ள மரச் சாமான்கள், தொலைக் காட்சி பெட்டி, குளிர் சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் என பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மழை நீரினால் கடுமையாக சேதமடைந்து உள்ளன.
மொத்தத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், மின்சாரக் கட்டணம் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில், மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை குறைந்தபட்சம் ஒரு மாதம் நீட்டித்து தருமாறு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
- தட்கல் முறையில் விதிக்கப்படும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.
- கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் இன்று மாநிலத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார். பொருளாளர் பொன்னுச்சாமி, இளைஞரணி தலைவர் ஜெயபாலன் , மாநில அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு தலைவர் தங்கராஜ், கௌரவ ஆலோசகர் சக்திவேல், உஜ்ஜையினி மாகாளியம்மன் திருப்பணிக்குழு செயலாளார் துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு மலரின் முதல் பிரதியை வணிகப்பூஷனம் டாக்டர் வெள்ளைச்சாமி நாடார் வெளியிட மாநில அமைப்பு தலைவர் கணேசன் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து சேலம் நகர அனைத்து வணிகர் சங்கம் பொதுச் செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தீர்மானங்கள் விளக்க உரையாற்றினார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் வருகிற டிச ம்பர் மாதம் சுதேசி, தொழில் பாதுகாப்பு மாநாடு நடத்த வேண்டும். அதில் கலந்து கொள்ள அரசியல் கட்சி தலைவர்களை அழைக்க வேண்டும். விதேசிகளை வளர்த்திடவும், சுதேசிகளை அழித்திடவும் முனைப்புடன் செயல்படும் தேச விரோத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . மின் கட்டணம் உயர்வை குறைத்திட வேண்டும். தக்கல் முறையில் விதிக்கப்படும் மின் கட்டண உயர்வினை கைவிட வேண்டும் . ஒருங்கிணைந்த தென் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் . கடைகளில் மாமூல் கேட்பதும், மறுக்கும் கடை உரிமையாளர்களை தாக்குவதுமான செயலுக்கு கடை உரிமையாளர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் சமூக விரோதிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து அந்நிய முதலீடு ஆன்லைன் வியாபாரத்தை தவிர்ப்போம். உள்ளூர் வியாபாரிகளை ஊக்குவிப்போம். நம் கடைகளில் பொருட்களை வாங்குவோம் என்று வலியுறுத்தப்பட்டன.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் துரையரசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
- ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
- மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வையாவூர் கிராமத்தில் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் பழனி. விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது தாய், மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.
ஒரே ஒரு மின்விளக்கு, ஒரு மின் விசிறி, டி.வி. ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி வரும் பழனியின் வீட்டு மின் கட்டணமாக ரூ.26,850 வந்திருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் பழனியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
எங்கள் வீட்டில் குறைந்த அளவிலேயே மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் மின் கட்டணம் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்து உள்ளது.
அப்போது முறையிட்டும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மின் மீட்டரை மாற்றித் தரக்கோரி முறையிட்டேன். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில்தான் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக ரூ.26,850 மின் கட்டணம் வந்துள்ளது.
இவ்வளவு மின் கட்ட ணத்தை என்னால் செலுத்த இயலாது. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மகள்கள் படிக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே அதிக அளவிலான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது கூலி தொழிலாளி பழனியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்