என் மலர்
நீங்கள் தேடியது "Russia Ukraine war"
- பல நாடுகள் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன
- உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே புதின் கவனம் செலுத்துகிறார் என ரஷியா கூறியுள்ளது
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரை அறிவித்து, அந்நாட்டை ஆக்ரமிக்கும் முயற்சியை துவங்கியது.
இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. 18 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் போர் காரணமாக, இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
ரஷியாவின் ஆக்ரமிப்பை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, இந்தியாவில் புது டெல்லியில் நடக்க இருக்கிறது.
அங்குள்ள பிரகதி மைதானில் உள்ள சர்வதேச கண்காட்சி-மாநாட்டு மையத்தின் பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடக்க இருப்பதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். ரஷியாவும் ஜி20 அமைப்பில் உறுப்பினர் என்பதால் புதின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், "ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு நேரில் வர போவதில்லை. உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே அவரது முழு கவனமும் உள்ளது," என அந்நாட்டு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்தார்.
தனது நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கும் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே அவர் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம் என பன்னாட்டு அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷியாவின் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியும் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ஒரு சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- புதினுக்கு எதிராக எவ்ஜெனி ஒரு கிளர்ச்சியை தொடங்கினார்
- மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு விமான விபத்தில் எவ்ஜெனி உயிரிழந்தார்
உலகின் வல்லரசுகளின் ஒன்றான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (70).
தனக்கு எதிரான போட்டியே இல்லாமல் பார்த்து கொள்வதில் வல்லவராகவும், எதிர்ப்போரை இரும்பு கரம் கொண்டு அடக்கும் சர்வாதிகாரியாகவும் இருப்பதால், ஆட்சிக்கு வந்து சுமார் 23 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து அவரே அதிபராக இருந்து வருகிறார்.
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை உக்ரைன் கடுமையாக எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் போரிட்டு வருகிறது. ரஷிய-உக்ரைன் போர் 540 நாட்களை கடந்து இன்று வரை தொடர்து வருகிறது.
இந்த போரில் ரஷிய ராணுவத்திற்கு, அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு எனும் கூலிப்படையும் உதவி வந்தது.
கடந்த ஜூன் மாதம், எதிர்பாராத விதமாக வாக்னர் அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷிய ராணுவத்திற்கு எதிராகவும், ரஷிய அதிபர் புதினுக்கு எதிராகவும் ஒரு கிளர்ச்சியை தொடங்கினார். இந்த கிளர்ச்சி பெரிதாகி விடாமல் திறமையாக புதின் தடுத்ததால், பிரிகோசின் பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தார்.
இதற்கிடையே 3 நாட்களுக்கு முன்பு ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடமேற்கே உள்ள பகுதியில் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் எவ்ஜெனி பயணிக்கும் போது, அது விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்ததாக ரஷியா தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது உள்ள வாக்னர் குழு வீரர்களுக்கு புதின் ஒரு புது உத்தரவு போட்டிருக்கிறார். ரஷிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளமான கிரெம்ளின் தனது வலைதளத்தில் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையில், "ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு துணை நிற்கும் அனைவரும் ரஷியாவிற்கு மாறாத விசுவாசமுடன் உழைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ரஷியாவின் தார்மீக மற்றும் நீதி சார்ந்த பாரம்பரியத்தை மேலும் வலுவாக்கும் வகையில் விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். மூத்த அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்," என்று தெரிவித்து இருக்கிறது.
இதன் மூலம் ரஷியாவில் உள்ள வாக்னர் மற்றும் பிற தனியார் ராணுவ அமைப்பினரை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்து கொள்ள புதின் முயல்கிறார் எனும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது.
- உக்ரைனின் படைகள் களத்தில் எதிர்த்தாக்குதலில் ஈடுபட கணிசமான ஆதாயங்களைப் பெற போராடி வருகின்றன.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 ½ ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரங்களை ரஷியா ஏவுகணைகளால் தாக்கி அழித்து வருகிறது. உலக நாடுகள் உதவியுடன் உக்ரைனும் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது. அமெரிக்கா ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனிற்கு பல பில்லியன் டாலர்களை இராணுவ உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில், சுரங்கங்கள் மற்றும் தடைகளை அகற்றுவதற்கான உபகரணங்களை உள்ளடக்கிய புதிய 250 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைனின் படைகள் களத்தில் எதிர்த்தாக்குதலில் ஈடுபட கணிசமான ஆதாயங்களைப் பெற போராடி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா உதவி வருகிறது. வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள், கவச எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான சிறிய ஆயுத வெடிமருந்துகளும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த உதவியானது, "போர்க்களத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளவும், அதன் மக்களைப் பாதுகாக்கவும் உக்ரைன் உதவும்" என்று பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2023 ஆகஸ்டில் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்
- 2022 பிப்ரவரி மாதமே அமெரிக்கா பயண கட்டுப்பாடுகளை வெளியிட்டு இருந்தது
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.
ரஷியாவிற்கு போரில் உதவி வந்த தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார்.
சாமர்த்தியமாக இதனை புதின் எதிர்கொண்டு இந்த கிளர்ச்சியை அடக்கினார். இதனையடுத்து பிரிகோசின், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி, ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது.
அமெரிக்க அரசாங்கம், தனது குடிமக்கள் யாரேனும் பெலாரஸ் நாட்டில் இருந்தால் அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டு பேஸ்புக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளங்களில், "பெலாரஸ் நாட்டை விட்டு தனது குடிமக்கள் வெளியேற வேண்டுமென அமெரிக்கா முதல்முறையாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அது வந்த இரு நாட்களில் பிரிகோசின் பலியானார். ஒரு வேளை பிரிகோசினிற்கு ஏற்படப்போகும் நிலை குறித்து அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கலாம்" என குறுஞ்செய்தியுடன் அந்த தகவல் பரவியது.
எவ்ஜெனி பிரிகோசின் மரணத்தில் ரஷியாவிற்கு பங்கு இருக்கலாம் என பலர் நம்பி வந்த நிலையில், இச்செய்தியின் மூலம், அமெரிக்காவிற்கு பிரிகோசின் மரணம் குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும் என கருத்துக்களை பறிமாறி கொண்டனர்.
ஆய்வில் இந்த தகவல்கள் அனைத்தும் தவறு என நிரூபணமாகியுள்ளது.
2022 பிப்ரவரி மாதமே பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், "ரஷியா, பெலாரஸ் நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாலும், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறுவது தடுக்கப்படும் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்கர்கள் பெலாரஸ் நாட்டிற்குள் வர வேண்டாம். பெலாரஸிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்," என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.
இந்த பயண கட்டுப்பாடு குறித்த உத்தரவு மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 12 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவால் புதுப்பிக்கப்பட்டது.
பிரிகோசின் இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன், பெலாரஸ்ஸின் அண்டை நாடான லிதுவேனியா, லிதுவேனியா-பெலாரஸ் எல்லைகளில் உள்ள பெலாரஸ் நோக்கி செல்லும் 2 முக்கிய வழிகளை மூடியது. இதனால் அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு மீண்டும் ஆகஸ்ட் 21 அன்று புதுப்பிக்கப்பட்டது.
ஆக, எவ்ஜெனி பிரிகோசின் இறப்பை முன்கூட்டியே அறிந்துதான் அமெரிக்கா பயண தடை விதித்தது எனும் செய்திகளில் உண்மை இல்லை.
- ட்வெர் பகுதிக்கு அருகே குசென்கினோ கிராமத்தில் விமானம் விபத்திற்குள்ளானது
- கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்ததை அடுத்து, ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் அப்போது தொடங்கி தற்போது வரை நடக்கும் போரில் ரஷியாவிற்கு உதவியாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழு எனும் ஒரு அமைப்பும் பங்கேற்றது.
இதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். ரஷியாவிற்கு உதவி வந்த பிரிகோசின் திடீரென இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார். ஆனால், புதின் இக்கிளர்ச்சியை சாமர்த்தியமாக எதிர்கொண்டு பெரிதாகாமல் அடக்கினார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி எம்ப்ரேயர் லெகசி 600 ஜெட் விமானத்தில், ட்வெர் பகுதிக்கு அருகே பயணம் செய்த போது, குசென்கினோ கிராமத்தில் அந்த விமானம் விபத்திற்குள்ளாகியது. அதில் பயணம் செய்த 10 பேருடன் அவரும் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது. அதில் ஒரு விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து கீழே விழும் காட்சியுடன் அது எவ்ஜெனி பயணம் செய்த விமானம் என குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனை உண்மையென நம்பி பலரும் இணையத்தில் இதனை பரவலாக்கினர்.
ஆனால், ஆய்வில் இந்த செய்தி உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோவில் காணப்படும் விமானம், ரஷிய விமான படையை சேர்ந்த ஏ.என்.-26 (AN-26) ரக விமானம் என்றும் அதை வாக்னர் குழு ஜூன் 24 அன்று சுட்டு வீழ்த்தும் காட்சிதான் வீடியோவில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. தனது கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதில் ஒன்று விழும் காட்சிதான் வீடியோவில் பரவலாக்கப்பட்டது.
ஜூன் மாதம் வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தின் காட்சிக்கும் ஆகஸ்ட் மாதம் பிரிகோசினை பலி வாங்கிய விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- கடந்த வருடம் எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கினார்
- அரசின் திட்டங்களில் மஸ்கின் நிழல் ஆதிக்கம் இருக்கிறது
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க், தனது பிரமாண்ட திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர்.
மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் விண்வெளியிலிருந்து இயங்கும் இணைய சேவைக்கான தனியார் விண்கலன்களான ஸ்டார்லிங்க் சேவை உட்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வரும் மஸ்க், கடந்த வருடம் உலகின் முன்னணி சமூக உரையாடல்களுக்கான வலைதளமான டுவிட்டரையும் சுமார் ரூ.37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார்.
"அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருக்கிறது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதளம் கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உட்பட பல விஷயங்களில் அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார். உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது. மஸ்க், டுவிட்டரை விலைக்கு வாங்கிய பிறகு தனக்கு உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனே அறிவித்தார்" என விவரித்து "எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்" என பெயரிட்ட ஒரு நீண்ட கட்டுரையில் அமெரிக்காவின் பிரபலமான "தி நியூயார்க்கர்" எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், "எனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுகிறேன்" என இக்கட்டுரையின் நோக்கத்தை விமர்சித்த எலான் மஸ்கின் தந்தை எர்ரால் மஸ்க் (77) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாதுகாவலர்கள் புடைசூழ எலான் மஸ்க் அலுவலகத்தில் வலம் வருவதாக சில மாதங்களுக்கு முன் எக்ஸ் (முன்பு டுவிட்டர்) நிறுவன பணியாளர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- போரில் ரஷியாவை சீனா ஆதரிக்கிறது, ஆனால் அமெரிக்கா எதிர்க்கிறது
- போர் குறித்து ஜி20 நாடுகளுக்கிடையே தெளிவான கருத்தொற்றுமை ஏற்படவில்லை
அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரின் தாக்கம் ஜி20 கூட்டறிக்கை வெளியிடுவதில் பெரிதாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநாட்டின் கடைசி நாளான நாளை, மாநாட்டின் முடிவில் அனைத்து உறுப்பினர் நாட்டு தலைவர்களின் ஒன்றிணைந்த கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படுவது வழக்கம். உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில், ரஷியாவை சீனா ஆதரிக்கிறது. ஆனால் அமெரிக்கா, உக்ரைனை ஆதரித்து ரஷியாவிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்திருக்கிறது.
இதனால் நாளை படிக்கப்பட வேண்டிய தலைவர்களின் மாநாட்டு பிரகடன கூட்டறிக்கையில் உக்ரைன் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கப்பட வேண்டியவை தெளிவில்லாமல் இருக்கிறது. ரஷிய உக்ரைன் போரை குறிப்பிடாமல் வெளியிடப்படும் எந்த பிரகடனத்திற்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் ஜி7 அமைப்பை சேர்ந்த நாடுகள் ஒப்புதல் அளிக்காது என தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த கட்டாயத்தினால், தலைவர்களுக்கான இந்த இறுதி கூட்டறிக்கையில் புதியதாக சில வாக்கியங்களை இந்தியா சேர்த்து அந்நாட்டு அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்பு நடந்த எந்த முக்கிய சந்திப்புகளிலும், நிதி மற்றும் வெளியுறவுத்துறை உட்பட எந்த துறையிலும், உக்ரைன் போரினை குறிப்பிடும் எந்த சொற்றொடரையும் உள்ளடக்கிய ஆவணங்களுக்கும் சீனா மற்றும் ரஷியா ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- அறிக்கையில் புதியதாக சில வாக்கியங்களை இந்தியா சேர்த்தது
- 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' கோட்பாடு வலியுறுத்தல்
அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது.
உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில், ரஷியாவை சீனாவும், உக்ரைனை அமெரிக்காவும் ஆதரிப்பதால், மாநாட்டில் வெளியிடப்பட வேண்டிய கூட்டு பிரகடனத்தில் உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க எந்த முடிவும் எடுக்கப்படாததால், வரைவறிக்கையில் இந்தியா புதியதாக சில வாக்கியங்களை சேர்த்து தலைவர்களின் பார்வைக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஜி20 தலைவர்களுக்கிடையே பிரகடனம் குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் அறிவித்தார். 'டெல்லி பிரகடனம்' என அழைக்கப்படும் இந்த அறிக்கையில் உக்ரைன் போர் குறித்து இந்த கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியாகியுள்ளது.
அதில், "சர்வதேச பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றுடன் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் பலதரப்பு அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச சட்டங்களின் அடிப்படை கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்த அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்."
"நாடுகளுக்கிடையேயான மோதல்களையும் நெருக்கடிகளையும் அமைதியான வழிமுறைகளில் தீர்த்து கொள்ளவும், ராஜதந்திரத்தின் மூலம் பேச்சுவார்த்தையின் மூலமாகவுமே பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்."
"போரினால் உலக பொருளாதாரத்தின் மீது ஏற்படும் மோசமான தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான எங்கள் முயற்சியில் நாங்கள் ஒன்றுபடுவோம். மேலும், அண்டை நாடுகளுக்கிடையே அமைதியான நட்பும் நல்லுறவும் நிலவ 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' எனும் கோட்பாட்டின் அடிப்படையிலும், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையிலும், உக்ரைனில் அமைதியை கொண்டு வர ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்து நிற்க கூடிய அனைத்து வகையான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இன்றைய காலகட்டம் ஒரு போருக்கான காலகட்டமாக மாறக்கூடாது." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- இரு நாடுகளுக்கும் தேவைகள் உள்ளதால் பரஸ்பரம் உதவி கொள்ள முடியும்
- ஐ.நா. சபை தீர்மானத்திற்கு இது எதிரானது என்கிறது தென் கொரியா
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களுக்கிடையே அதிகாரிகள் யாரும் இன்றி தனிப்பட்ட சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
கடந்த 2022 பிப்ரவரியில் இருந்து உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷியாவிற்கு ஆயுதங்களின் தேவை அதிகரித்திருக்கிறது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் வெளிப்படையான எதிர்ப்பை காட்டி வரும் வட கொரியாவிற்கு உணவு தானிய தேவையும், அந்நாட்டு ராணுவத்திற்கான அதி நவீன ஆயுதங்களுக்கான தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகிறது.
எனவே, இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி கொள்ளும் நிலையில் உள்ளதால், ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்ற முடியும். இப்பின்னணியில் சந்தித்து கொண்ட தலைவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இரு நாட்டின் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்த நிலையில், வட கொரியாவிற்கு ரஷியா வழங்கப்போகும் அதிநவீன ஆயுத மற்றும் உளவு விண்கலத்திற்கான தொழில்நுட்ப உதவி, தென் கொரியாவில் போர் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
இது குறித்து தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லிம் சூ-சுக், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..,
"உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி விண்கலன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு நாட்டு அதிபர்களும் பரஸ்பரம் ஒத்துழைக்க முனைவது குறித்து தென் கொரியா கவலையும், வருத்தமும் தெரிவிக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணை மேம்பாடு சம்பந்தமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஈடுபடுவது ஐ.நா.சபையின் தீர்மானங்களுக்கு எதிரானது. வட கொரியாவிற்கு ராணுவ ஒத்துழைப்பு அளித்தால், தென் கொரியாவிற்கும் ரஷியாவிற்குமான உறவில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என்பதை ரஷியா உணர வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
- அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி
2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.
ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.
"இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.
"எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.
2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரஷியா, கருங்கடல் பகுதி வழியாக உணவு தானிய கப்பல் போக்குவரத்தை தடுத்தது
- 5 நாடுகளில் 3 நாடுகள், தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன
2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.
மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.
போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.
இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.
இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.
இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, "சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன" என குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
- அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்த நிலையில், கனடா செல்கிறார்
- மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் வகையில் இந்த பயணம் பார்க்கப்படுகிறது
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி வருகிறார்.
கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார்.
இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது. கனடா அதிபர் ட்ரூடோ, எரிபொருள் மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது என ரஷியா மீது குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். கனடா செல்லும் அவர், இன்று அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. அதன்பின் தற்போது முதன்முறையாக ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். இதற்கு முன்னதாக வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.