என் மலர்
நீங்கள் தேடியது "மக்களை தேடி மருத்துவம்"
- ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார்.
- மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு 17% உயர் ரத்த அழுத்தம், 16.7% நீரிழிவு நோயும் கட்டுப்பாடு.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களைதேடிமருத்துவம் வெறும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் - அது பலனையும் அளித்து வருகிறது.
மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு 17% உயர் ரத்த அழுத்தம், 16.7% நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பொது சுகாதார வெற்றி எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை மறுவடிவமைக்கிறது.
மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தில் அவர்களுக்காகக் காத்திருக்காமல் மக்களைச் தேடிச் சென்றடைவதன் மூலம் வெற்றிப்பெற்றுள்ளோம். இத்திட்டம் இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது?
- ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
29.12.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால் மாநில மருத்துவத்துறை அதிகாரிகள் உண்மையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் டூப்ளிகேஷன்-அதாவது ஒரே புள்ளி விவரம், இரண்டு, மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால், ஒரு கோடி பேருக்குமேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி இருக்கிறது.
ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது என்றும், ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சுகாதார துணை இயக்குனர் ஆய்வு
- மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் டாக்டர். த.ரா.செந்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் 102 ரெட்டியூர் ஊராட்சி, முல்லை கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். முல்லை கிராமத்தில் நடைபெற்று வந்த மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு நேரடியாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டு அறிந்தார்.
ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.பசுபதி, நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.செ.மதன்ராஜ், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
- டவுன் கருவேலன் குன்று தெருவில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் வெள்ளைச்சாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நெல்லை டவுன் கருவேலன் குன்று தெரு ரேஷன் கடை முன்பாக மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை டவுன் சுகாதார அலுவலர் இளங்கோ தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் சளி, இருமல், பசியின்மை, எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல், போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வை யாளர் முருகன், ஆய்வக நுட்புணர் கண்ணன், ரேடியோ கிராபர் சிஜின், ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- ஆகஸ்டு மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது.
- திருப்பூர் மாவட்டத்தில் 26 லட்சத்து 43 ஆயிரத்து 577 பேர் இருப்பதாக கணக்கிட்டு 20 லட்சத்து 3,831 பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
திருப்பூர்:
கடந்த 2021 ஆகஸ்டு மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கென திருப்பூர் மாவட்டத்தில் 13 மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவை சேர்ந்த மகளிர், சுகாதார தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மருந்து, மாத்திரை வழங்கி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 26 லட்சத்து 43 ஆயிரத்து 577 பேர் இருப்பதாக கணக்கிட்டு 20 லட்சத்து 3,831 பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நடப்பாண்டு ஏப்ரல் 20ந்தேதி நிலவரப்படி 19 லட்சத்து 72 ஆயிரத்து 656 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 53 ஆயிரத்து 650 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதும் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 211 பேருக்கு உயர்ரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 40 ஆயிரத்து 847 பேருக்கு மேற்கண்ட இரண்டு பாதிப்புகளும் உள்ளது.
வீட்டில் தங்கியுள்ள இடத்தில் இருந்து எழுந்து வர முடியாத நிலையில் 7,821 பேருக்கு மருந்து, மாத்திரை தொடர்ந்து வழங்கப்படுகிறது. 9,947 இயன்முறை மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் துவங்கிய இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 478 பேர் பயன் பெற்றுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், வயதானவர், பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய வழியில்லாமல் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியசிரமத்தில் உள்ளவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியர் அல்லது நகர்ப்புற நல மையத்தை அணுகிதிட்டம் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம் என்றார்.
- மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் பணியாற்றுகின்றனர்.
- மக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது 2 மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.
சென்னை:
தமிழகத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளுக்காக லட்சக்கணக்கானவர்கள் மாத்திரை சாப்பிட்டு வருகின்றனர்.
அவர்களில் பலர் முறையாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் வேறு பாதிப்புகள் உருவாகி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.
பொதுமக்களில் பலர் பரிசோதனை செய்யாமல் இந்த மாதிரி வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். நோய் முற்றிய பிறகே இவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வருகிறது.
இதனால் பல்வேறு மற்ற வியாதிகளும் இவர்களை பாதிக்கச் செய்து விடுகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி வைத்தார்.
இதை தொடங்கிய 6 மாதங்களில் 50 லட்சம் பயனாளர்களை இந்த திட்டம் சென்றடைந்தது. இதற்கான விழா மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் அரசு நடத்தியது.
அன்று முதல் இன்று வரை பொதுமக்களுக்கு அவர்களது இல்லம் தேடி சென்று மருத்துவ குழுவினர் இடைவிடாமல் மருத்துவ சேவையை செய்து வருகின்றனர்.
இதில் 10,969 மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வீடு வீடாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் பணியமர்த்தப்பட்ட 4,848 இடைநிலை சுகாதார சேவையாளர்களும் இந்த திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.
இவர்களிடம் சர்க்கரை வியாதியை அறிந்து கொள்ளும் சுகர் கருவி, ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி ஆகிய இரண்டும் கைவசம் இருக்கும்.
இதை வைத்து ஒவ்வொரு வருக்கும் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் மருந்து மாத்திரை வாங்கி அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்த நோயாளிகளின் வீடுகளுக்கு இந்த குழுவினர் தேடிச் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்துகின்றனர்.
இதில் ஒரு பெண் செவிலியர், ஒரு தன்னார்வலர், ஒரு இயன்முறை மருத்துவர் என குழுவாகவும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது பாராட்டத்தக்கது.
அதிலும் குழுவில் உள்ள பெண் சுகாதார தன்னார்வலர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை கண்டறிந்து இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்து அவர்களுக்கான மாத்திரைகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பெற்று நேரடியாக வழங்கி வருகின்றனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு பயனாளியும் மக்கள் நல பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.
இப்போது இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 49 ஆயிரத்து 180 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இதில் உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சை, நீரழிவு நோய் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை சிறுநீரக நோய்க்கு டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 49 லட்சத்து 180 பேர் ஆவார்கள்.
தொடர் சேவைகள் மூலம் மறுபடியும் 2-வது முறை மருந்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 22 ஆயிரத்து 468 பேர் ஆகும்.
இதன் மூலம் ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியமும் பேணப்பட்டு வருவதாக அதிகாரிகள் பெருமிதம் கொள்கின்றனர்.
இதுபற்றி பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் பணியாற்றுகின்றனர். மக்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது 2 மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த வகையில் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் இயன்முறை சிகிச்சை பிசியோதெரபி சிகிச்சை, டயாலிசிஸ் செய்வதற்கு உதவிகள் என பல வகை நோய்களுக்கு சிகிச்சை பெற இவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு இப்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மேற்கண்ட சிகிச்சை மட்டுமின்றி பெண்கள் கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான ஆய்வுக்கு பரிந்துரைப்பதன் மூலமும் ஏராளமான பெண்களும் முன் கூட்டியே சிகிச்சை பெற இந்த திட்டம் உதவிகரமாக அமைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை
- படுக்கை நோயாளிகள் 8 ஆயிரத்து 792 பேருக்கும், புற்றுநோய் தொடர்புடைய 274 பேர்
நாகர்கோவில் :
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஏராளமா னோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய் பாதிப்ப டைந்தவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்க ளுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் உயர் ரத்த அழுத்தம் நோயி னால் பாதிக்கப்பட்ட 91 ஆயிரத்து 532 பேருக்கும், நீரிழிவு நோயினால் பாதிக் கப்பட்ட 65 ஆயிரத்து 623 பேருக்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 63 ஆயிரத்து 236 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படுக்கை நோயாளிகள் 8 ஆயிரத்து 792 பேருக்கும், புற்றுநோய் தொடர்புடைய 274 பேருக்கும், உடற்பயிற்சி சிகிச்சை (பிசியோதெரபி) வாயிலாக 9 ஆயிரத்து 610 பேருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள் ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- தவிட்டுப்பாளையம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம்
- சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.
- ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி.
- மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் இன்று நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த திட்டத்தில் 65 ஆயிரத்து 503 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தில் உருவான மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாக நிறைவேறி வருகிறது. 2 கோடி பயனாளிகளை நெருங்கி கொண்டிருக்கிறது.
வருகிற 29-ந் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க செல்கிறார். அப்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியை திருப்பசாவடி மேடு, கோவிந்தபுரம், ஏணதி மங்கலம் ஆகிய 3 கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்.
அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச மருந்து பெட்டகத்தை வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ஈரோடு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலமாக ஈரோட்டுக்கு கிளம்பினார். ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பெருந்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு நின்று முதலமைச்சரை வரவேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். இவ்வாறாக 20 இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியான அதே பகுதியை சேர்ந்த சுந்தராம்பாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்த திட்டத்தின்படி பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருக்கும். இந்த திட்டத்தின் 50வது லட்சம் பயனாளிக்கு சித்தலம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார். 60-வது லட்சம் பயனாளிக்கு மைட்டாபட்டியிலும், 75-வது லட்சம் பயனாளியான நாமக்கல் மாவட்டம் போதமலையிலும், 80வது லட்சம் பயனாளிக்கு சைதாபேட்டையிலும், 90வது லட்சம் பயனாளிக்கு சென்னை விருகம்பாக்கத்திலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகம் வழங்கினார்.
1 கோடியாவது பயனாளிக்கு திருச்சியில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார்.
இந்த திட்டத்தை பாராட்டி ஐ.நா.சபை சமீபத்தில் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியை முடித்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஈரோடு, மேட்டுக்கடை பகுதியில் உள்ள தங்கம் மகாலில் நடைபெறும் தி.மு.க கட்சி நிர்வாகி கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சி குறித்தும், நிர்வாகிகள் கருத்துகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பெருந்துறை ரோடு, முத்து மகாலில் நடைபெறும் தி.மு.க மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். பின்னர் இரவில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு சென்று முதலமைச்சர் ஓய்வு எடுக்கிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையிலிருந்து கிளம்பி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பொது
மக்கள் மத்தியில் பேசுகிறார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளை திறந்து வைக்கிறார். நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு திட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.10.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.59.60 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஈரோடு ரிங் ரோடு, ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் ரோடு, ஈரோடு பஸ் நிலைய புதிய வணிக வளாகம், பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் மணிமண்டபம் மற்றும் உருவசிலை என மாவட்டம் முழுவதும் ரூ.951 கோடியே 20 லட்சம் செலவில் முடிவுற்ற 559 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
இதைப்போல் சோலார் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை சந்தை, தியாகி பொல்லான் அரங்கம் மற்றும் சிலை உள்பட மாவட்டம் முழுவதும் ரூ.133 கோடியே 66 லட்சம் செலவில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதன்படி ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1,368 கோடியே 88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.
விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவை பிரம்மாண்டமாக நடத்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.