search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death"

    • மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
    • முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    சூலூர்:

    கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 7 மோப்ப நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நாய்கள் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஆகிய சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

    வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக லேப்ரடார் வகையை சேர்ந்த ராஜா என்ற மோப்பநாய் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த மோப்ப நாய் கடந்த ஒருவார காலமாக உடல் சரியில்லாமல் இருந்து வந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது. உயிரிழந்த மோப்ப நாய்க்கு கோவை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. தென்னரசு தலைமையில் இறுதி சடங்கு நடந்தது.

    அப்போது மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சூலூர் போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பறியும் மோப்ப நாய் பிரிவு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    உயிரிழந்த மோப்ப நாய் ராஜா சென்னையில் நடந்த சுதந்திர தின விழா, நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    • ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.
    • செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயரம்பேடு ஊராட்சி, மூலக்கழனி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு தீபாவளியையொட்டி உறவினரான திருநெல்வேலி மாவட்டம், திசையன் விளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) வந்து இருந்தார். கடந்த 14-ந் தேதி சந்திர சேகரனும், முத்துப்பாண்டியும் சேர்ந்து கடையில் இருந்த போது மதுகுடித்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முத்துப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சந்திரசேகரனை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    • எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.
    • குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே சந்தப்பேட்டை பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 65).

    இவர் இன்று காலை பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் அருகில் நடந்து சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.

    இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மூதாட்டியை மீட்க முயன்றனர். முடியாததால் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பிணமாக மீட்டனர்.

    இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக்.
    • விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.

    சென்னை:

    உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மயிலாப்பூரில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க்கில் யோகா பயிற்சியை இப்பகுதி மக்களுடன் சேர்ந்து செய்வதற்காக பாஜக சார்பில் ஏற்பாடு செய்து இருந்தோம்.

    கட்சி நிர்வாகி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். நேற்று இரவு யோகா பயிற்சிக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டனர். இன்று காலை வழக்கமாக நாகேஸ்வரராவ் பார்க்கில் பயிற்சி செய்பவர்களையும் வர விடாமல் பார்க்கை மூடி விட்டனர். மிகவும் சிறுபிள்ளைத்தனமான அரசாங்கத்தின் நடவடிக்கையாக இதை பார்க்கிறோம்.

    சர்வதேச யோகா தினத்தில் மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் மக்களுடன் சேர்ந்து யோகா செய்வதில் என்னவாகி விடப்போகிறது.

    தமிழக அரசு எதற்கெல்லாம் கவனம் கொடுக்க வேண்டுமோ அதற்கு எல்லாம் கவனம் கொடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் அத்தனை பேரின் மனதையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய சாவை தடுக்க முடியவில்லை. கள்ளச்சாராயம் விற்கும் கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் யோகா செய்யும் கட்சி நிர்வாகிகளை, சாதாரணமாக வரும் பொதுமக்களையும் பார்க்கை பூட்டி வைத்து தடை செய்யக்கூடியதுதான் இந்த அரசாங்கம் நிலைமை.

    உங்கள் தவறுகளை பேசும் எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து பார்க்கில் செய்யும் யோகா நிகழ்ச்சிகளை தடை செய்கிறீர்கள்.

    பா.ஜக. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் யோகா பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச யோகா தினத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் எத்தனையோ முயற்சி எடுத்து யோகா செய்யும் தன்னார்வலர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். யோகா பயிற்சியை மேற்கொள்ளும் மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

    தமிழகத்தில் பெண்களும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இது எங்கு நடக்கிறது என்று பார்த்தால் குறிப்பாக, உடல் உழைப்பை சார்ந்து உள்ள சமுதாயத்தில் உடல் வலியை மறக்க, மறைப்பதற்காக என்று நினைத்துக்கொண்டு இந்த மது பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.

    இன்று தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக், வறுமை இருக்கக்கூடிய மக்கள் இருக்கும் பகுதிகளில் ஆளும்கட்சிக்காரர்களின் துணையுடன் விலை குறைவாக இருக்கும் கள்ளச்சாராயம் ஆறாக போய்க்கொண்டிருக்கிறது.

    இது முதல் தடவை இல்லை. ஒரு வருடத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் மாநிலத்தின் முதல்வருக்கு தம்முடைய துறையின் மீது கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.

    விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.

    ஒவ்வொரு தெருவுக்கும் மதுக்கடைகளை திறந்துவைத்தும் கூட இன்று கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றால் மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

    • மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான்.
    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 120 போ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய அவமானம். இந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது அனைவரும் அறிந்ததே ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியது யார்?"

    என்னைப் பொறுத்தவரை மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான். இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இந்த பகுதியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத மதுபான விற்பனையில் சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் இருப்பதால் அவர் இந்த சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை பாதுகாத்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவராக பலி எண்ணிக்கை 60 ஆக உயரும் என்று நினைக்கிறேன். நோயாளிகளை காப்பாற்ற மாற்று மருந்து இல்லை. எஸ்பி மற்றும் கலெக்டர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

    • உறவினர் ஒருவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
    • தென்காசி மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை உலக்கூட தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மகன் உமாசங்கர்(வயது 30). இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் குழந்தை உள்ளது.

    உமாசங்கர் சவுதி அரேபியாவில் கடந்த 1 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று அங்கு அவர் தனது உறவினர் ஒருவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கதறி துடித்தனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு உதவி செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    ×