search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராய உயிரிழப்பு: 2 எம்.எல்.ஏ.க்களை கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
    X

    கள்ளச்சாராய உயிரிழப்பு: 2 எம்.எல்.ஏ.க்களை கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    • மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான்.
    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 120 போ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய அவமானம். இந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது அனைவரும் அறிந்ததே ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியது யார்?"

    என்னைப் பொறுத்தவரை மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான். இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இந்த பகுதியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத மதுபான விற்பனையில் சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் இருப்பதால் அவர் இந்த சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை பாதுகாத்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவராக பலி எண்ணிக்கை 60 ஆக உயரும் என்று நினைக்கிறேன். நோயாளிகளை காப்பாற்ற மாற்று மருந்து இல்லை. எஸ்பி மற்றும் கலெக்டர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×