என் மலர்
நீங்கள் தேடியது "tag 94876"
ஈரோடு:
ஈரோடு டாக்டர் தங்கவேலு வீதியைச் சேர்ந்தவர் விஷ்ணுதீபக் (44). தனியார் ஆஸ்பத்திரி டாக்டர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு யோகசந்திரன் என்ற மகன் உள்ளார். டாக்டர் விஷ்ணுதீபக்கின் தந்தை டாக்டர் சந்திரன். அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே கிளினிக் நடத்தி வருகிறார். டாக்டர் விஷ்ணுதீபக் தனது மகனுக்கு மொட்டை போடுவதற்காக கடந்த 22-ந் தேதி குடும்பத்துடன் விருதாச்சலத்துக்கு சென்று விட்டார்.
மீண்டும் நேற்று அதிகாலை அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதையடுத்து அவர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்துக்கு டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த வீட்டில் துப்பறியும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளையர்களை துப்பறியும் மோப்பநாய் கண்டுபிடிக்க முடியாத வகையில் வீட்டில் மிளகாய் பொடிகளையும் தூவி இருந்தனர். இதையடுத்து வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
மேலும் திருட்டு நடந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள மற்ற இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் டாக்டர் விஷ்ணு வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டாக்டரின் கிளினீக்கில் வேலை பார்க்கும் வசந்தகுமார் என்ற ஊழியர் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை தேடிய போது அவர் சொந்த ஊரான கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும் போலீசாரை கண்டதும் பதட்டத்தில் இருந்தார். இதையடுத்து அவர் மீது சந்தேகம் வலுக்கவே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வசந்தகுமார் டாக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார்.
இது குறித்து அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் டாக்டர் விஷ்ணுதீபக்கின் தந்தை சந்திரன் நடத்தி வரும் கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறேன். இதனால் அடிக்கடி நான் டாக்டர் விஷ்ணுதீபக்கின் வீட்டுக்கும் சென்று வந்தேன். இதனால் அவரது குடும்பத்துடன் நெருங்கி பழகினேன். அப்போது டாக்டர் விஷ்ணு தீபக் வீட்டில் அதிக அளவில் நகை-பணம் இருப்பது எனக்கு தெரிய வந்தது.
எனவே அவற்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி காத்து இருந்தேன். அதன்படி கடந்த 22-ந் தேதி டாக்டர் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை பயன்படுத்தி கொள்ளையடிக்க முடிவு செய்தேன். இதற்காக கோவை சுந்தரா புரத்தைச் சேர்ந்த எனது தம்பி அருண்குமார் (24), அவரது நண்பர்கள் பிரவின்குமார் (26), பிருத்விராஜ் (26) ஆகியோரை அழைத்தேன். அவர்கள் ஒரு கார் மூலம் ஈரோட்டுக்கு வந்தனர். பின்னர் நாங்கள் 4 பேரும் சேர்ந்து காரை ஓரமாக நிறுத்தி விட்டு டாக்டர் வீட்டின் பின்பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து குளியல் அறையில் இருந்த வெண்டிலேட்டரை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தோம்.
பின்னர் சாவி போட்டு வீட்டின் பீரோவில் இருந்த லாக்கரை திறந்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு சென்று விட்டோம். பின்னர் அந்த பொருட்களை நாங்கள் பங்கு போட்டுக் கொண்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வசந்தகுமார், அருண்குமார் (24), பிரவின்குமார் (26), பிருத்விராஜ் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 67 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டாக்டர் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பாராட்டினார்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு நகர் 4வது வீதியில் வசித்து வருபவர் ராஜதுரை. பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிய ராஜதுரை வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார்.
பின்னர் காலையில் வெளியே வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தனது பைக்கின் பூட்டை உடைத்து தள்ளிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு ராஜதுரை தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் பைக்கின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை மாவட்டத்தில் அண்மை காலமாக பள்ளி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தனிப்படை போலீசார் மதுரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் அண்மை காலமாக பள்ளி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வழிப்பறி, நகை பறிப்பில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு உல்லாசமாக பொழுதை கழிக்கும் சிறுவர்கள் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மதுரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு தனிப்படையினர் காளவாசல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டடனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் போலீசார் மறித்தும் அங்கிருந்து வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்தனர். சிக்கிய அனைவரும் 17 வயதுக்குட்பட்ட பிளஸ்-2 மாணவர்கள் ஆவார்கள்.
5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு சென்று உரிய முறையில் விசாரணை நடத்தியதில் மதுரை, அலங்காநல்லூர், சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
காலையில் பள்ளிக்கு செல்லும் இவர்கள் மாலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை திருடும் இந்த கும்பல் அதனை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வேலம்மாள் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் அஜித்குமார் (23) என்பவரிடம் கொடுத்து கள்ளச்சந்தையில் விற்று பணம் பெற்று வந்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் பிளஸ்-2 மாணவர்கள் 5 பேர் மற்றும் அஜித்குமாரை கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், சிறு வயதிலேயே எங்களுக்கு மது பழக்கம் ஏற்பட்டது. இதனால் பணம் தேவைப்பட்டது.
எனவே காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டோம். ஆனால் எங்களுக்கு பணம் போதவில்லை. எனவே மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்டோம். இதனால் எங்களுக்கு கணிசமாக பணம் கிடைத்தது. அதனை வைத்துக் கொண்டு மதுபானம், ஆடம்பர வாழ்க்கை என உல்லாசமாக இருந்தோம். மேலும் காதலிகளுடன் கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களுக்கு சென்று திருடிய பணத்தை செலவழித்தோம் என தெரிவித்தனர்.
மதுரை நகரில் கடந்த வாரத்தில் மட்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 17 வயதுக்குட்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த திருட்டு கலாச்சாரம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி.
- ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவுபூட்டு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவரது வீட்டில் பணம் மற்றும் செல்போன் கொள்ளை போனது. அருகில் உள்ள சேகர் என்பவரது வீட்டில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம், அரை சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.
இந்த 3 கொள்ளை சம்பவங்கள் குறித்து பென்னலூர் பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆத்தூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வெங்கடேசன் வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்.
- ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பனமரத்துப்பட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வெங்கடேசன்.
இவர் ஆத்தூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வெங்கடேசன் வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். அவரது மனைவி பிருந்தா விவசாய தோட்டத்திற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் அவரது மகன் வெளியே சென்று வீடு திரும்பிய போது வீட்டின் அருகே முகமூடி அணிந்த ஒருவர் நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் வாலிபர் நீங்கள் யார் என்று கேட்டபோது மர்ம நபர் ஆயுதங்களால் தாக்க முயன்றார்.
இதனால் அங்கிருந்து தப்பி ஓடிய வாலிபர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும்உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரமும், ரூ.1 லட்சம் மதிப்பிலான உயர் ரக பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் நித்தியா. இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றுவிட்டார்.
திரும்பி வந்து பார்க்கும்போது முன்புற கதவு மற்றும் உள்ளிருந்த பீரோ அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் வைத்திருந்த ஒரு கிலோ வெள்ளி, தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தலைவாசல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தலைவாசல் டோல்கேட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் தலைவாசல் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆத்தூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களாக தொடர் கொள்ளையில் முகமூடி ஆசாமிகள் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் மெத்தன போக்கில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.