என் மலர்
நீங்கள் தேடியது "tag 96812"
திருத்தணி:
திருத்தணி அடுத்த பி.சி.எண்.கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் பங்காரும்மா(64), இவருடைய கணவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்றுமாலை பங்காரும்மா வீட்டை பூட்டிக் கொண்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை பங்காரும்மாவின் வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசுக்கும், பங்காரும் மாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பீரோவில் இருந்த 20 சவரன் நகை, ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
பங்காரும்மா வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருப்பதை அறிந்து கொள்ளைகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ஆசாமிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.
பங்காரும்மாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் வசிப்பவர் சுகுமார். பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது தாயார் சாந்தாம்மாள் (வயது 65).
இவர் பனப்பாக்கம் பகுதியில் தனியாக குடியிருந்து வருகிறார். தனது தாயை பார்ப்பதற்காக சுகுமார் அடிக்கடி இங்கு வந்து செல்வதுண்டு.
நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆட்கள் வரும் சத்தத்தை அறிந்த சாந்தாம்மாள் நீங்கள் யார்? என்ன வேண்டும்? என்று கேட்டார்.
உடனே அந்த மர்ம நபர்கள் சாந்தாம்மாளின் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி தருமாறு கேட்டனர். ஆனால், சாந்தாம்மாள் மறுத்தார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். அதன் பின்னர் கொள்ளையர் அவரிடம் இருந்து 8 பவுன் நகையை பறித்தனர்.
பின்னர் அதே பகுதியில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்குள் சென்றனர். இவர் சென்னையில் உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொள்ளையர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு எதுவும் இல்லாததால் பொருட்களை சூறையாடி விட்டு அருகில் உள்ள ராமலிங்கம் வீட்டின் பூட்டை உடைத்தனர். ஆனால், அங்கும் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்னொரு வீட்டையும் உடைத்தனர். அங்கும் எதுவும் சிக்காததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.
கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சாந்தாம் மாளின் மகன் சுகுமார் இன்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது தனது தாய் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை சுகுமார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பனப்பாக்கம் பகுதியில் 4 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
இது குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர்.
துணை போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லாவும் பனப்பாக்கத்துக்கு விரைந்தார். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொள்களையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் வரழைக்கப்பட்டது. அது சாந்தாம்மாள் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்தனர். அவர்கள் கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி, மோட்டாங்குறிச்சி, தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்கான். இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மசூதா, சென்னை ஆயுதப் படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். சேலத்தில் இவர்களுக்குச் சொந்தமான உள்ள வீட்டில் இம்ரான்கானின் அம்மா சப்ரா பேகம் மட்டும் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரும் வெளியூர்சென்று விட்டார்.
இந்தநிலையில் இன்று 1-ந் தேதி அதிகாலை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்னையில் உள்ள இம்ரான்கானுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் கோரிமேட்டில் வசிக்கும் இம்ரான்கானின் அக்கா சமீம்பானு மற்றும் மாமா முஸ்தபா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள்அங்கு விரைந்து சென்று பார்த்த போது வீட்டில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை சாமான்கள் மட்டும் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 33). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி ஸ்ரீஷா (30) சேலத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கிளார்க்காக பணி புரிந்து வருகிறார் . இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜா இன்று அதிகாலை தனது வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்சசி அடைந்தார். கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டில் இருந்த ரூ. 55 ஆயிரம் மற்றும் 7.5 பவுன் தங்க நகை காணாமல் போனதாக ராஜா தெரிவித்தார். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விசாரணையில், இம்ரான் கானின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு திருட்டை அரங்கேற்றி விட்டு பிறகு அவரது வீட்டு மொட்டைமாடி வழியாக, பின்னால் உள்ள ராஜாவின் வீட்டிற்குள் நுழைந்து திருடியது தெரிய வந்தது. 2 திருட்டு சம்பவங்களும், வீட்டின் பிரதான மரக்கதவுகளை, இரும்பு கம்பியால் உடைத்து, ஒரே மாதிரியாக நடந்துள்ளது. இதனால் ஒரே நபர்கள் இதில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராயபுரம்:
ராயபுரம், பி.வி. கோவில் தெருவில் எண்ணை கடை மற்றும் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயபிரகாஷ். இரவில் இவரது கடையின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம கும்பல் ரூ.50ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இதேபோல் ஆதாம்சாகிப் தெருவில் 2 மளிகை கடையை உடைத்து ரூ.16 ஆயிரம் ரொக்கம், பொருட்கள் மற்றும் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள், சார்ஜர், ஹெட்போன் ஆகியவற்றையும் மர்மகும்பல் சுருட்டி சென்று இருந்தனர்.
இதில் எண்ணை கடை அருகே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபடுவது பதிவாகி உள்ளது. இதனை வைத்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 61 ) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் கடந்த மாதம் 20-ந் தேதி ராமநாதபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.4 லட்சத்து 51 ஆயிரம் எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர் .
இதுபற்றி அவர் ராமநாதபுரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கியில் இருந்து பாலசுப்பிரமணியன் பணத்தை எடுத்துக்கொண்டு எங்கு சென்றார்? என்பது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அவரை 4 பேர் பின் தொடர்ந்து சென்று பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் கண்டு தேடி வருவதை அறிந்த சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் நேற்று ராமநாதபுரம் வந்து பாலசுப்பிரமணியத்திடம் இருந்து திருடப்பட்ட ரூ.4 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுபற்றி போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசிப்பதாகவும், தனது மனைவி வழி உறவினர்களான 3 பேர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து அடிக்கடி வந்து சென்றதாகவும், அவர்கள் முக்கிய ஆவணம் இருப்பதாக கொடுத்த கையில் ரூ.4 லட்சம் இருந்ததாகவும், அது ராமநாதபுரத்தில் பாலசுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்ததால் அதனை திருப்பிக் கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்டு வியப்பு அடைந்த போலீசார் அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டனர்.மேலும் அவரிடம் ஆந்திர கொள்ளையர்கள் குறித்த தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கொள்ளையர்களை பிடித்ததும் போலீஸ் நிலையத்தில் வந்து நடந்ததை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து வந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மாதவன் (50)அசோக் (55) கிஷோர் (35)என்று தெரியவந்தது.அவர்கள் அடிக்கடி சென்னையில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்று பல இடங்களில் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.இந்த முறை வாடகைக்கு ஆட்டோவை கேட்ட போது, அதனை சர்வீசுக்கு விட்டு இருந்ததால், மோட்டார் சைக்கிளில் அவர்களை அழைத்து வந்ததாக ஆட்டோ டிரைவர் தெரிவித்துள்ளார். அப்போது ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சத்தை அபேஸ் செய்த 3 பேரும் ரூ.50 ஆயிரத்தை எடுத்து கொண்டு மீதி பணத்தை ஒரு பையில் வைத்து அதில் முக்கிய ஆவணம் இருப்பதாகவும், சில நாட்களுக்குப் பிறகு வந்து அதனை வாங்கிக் கொள்வதாகவும் ஆட்டோ டிரைவரிடம் கொடுத்து சென்றுள்ளனர்.
அப்போது டி.வி.யில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் திருட்டு போன சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காட்டி உள்ளனர். அதில்ஆந்திராவை சேர்ந்த தனது கூட்டாளிகள் 3 பேரும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர், சந்தேகத்தின் பேரில் அவர்கள் கொடுத்த பையை சோதனை செய்து பார்த்தபோது அதில் அவர்கள் அபேஸ் செய்த ரூ.4 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசில் சிக்கி விடுவோம் என்று பயந்த ஆட்டோ டிரைவர் கூட்டாளிகள் அபேஸ் செய்த பணத்தை கொண்டு வந்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.
இதனிடையே பணத்தை அபேஸ் செய்த ஆந்திர கொள்ளையர்கள் 3 பேரையும் கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலம் நெல்லூர் சென்று கொள்ளையர்களை பிடிக்க அங்குள்ள போலீசாரின் உதவியை கேட்டுள்ளனர். விரைவில் 3 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டால் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.
இந்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட பணத்தை கொள்ளையர்களின் கூட்டாளி திரும்ப ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.