search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள்"

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 600 விசைப்படகுகள் மற்றும் 4 ஆயிரத்து 400 நாட்டு படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 1500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி:

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தினால் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 600 விசைப்படகுகள் மற்றும் 4 ஆயிரத்து 400 நாட்டு படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, கூடுதாழை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் நாட்டு படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 1500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • 2010ல் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதியப்பட்டது.
    • இந்த வழக்கில் கடந்த 2018 ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    நாம் தமிழர் கட்சியினர் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனையடுத்து இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமார், இந்த வாசஹக்கில் 13 சாட்சியங்களிடம் விசாரணை முடிந்துள்ளது. ஆகவே வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.

    பின்னர் சீமான் தரப்பில் ஆஜரான சங்கர், சாட்சிகள் விசாரணை தொடங்கி விட்டதால் நாங்கள் தொடர்ந்த இந்த வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீமான் மீது பதியப்பட்ட இந்த வழக்கை எவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரை மீட்க கோரிக்கை.
    • குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை.

    திமுக எம்.பி கனிமொழி இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது, லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரையும், குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி கடிதம் ஒன்றை வழங்கிானர்.

    இதுகுறித்து, கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
    • மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

    மரக்காணம்:

    தமிழக பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை பெய்தது. இந்தப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உண்டானது. இது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறுகின்றனர். இதுபோல் ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் மறு உத்தரவு வரும் வரையில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தற்பொழுது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலில் மாறுபட்ட நீரோட்டம் ஏற்பட்டு கடல் அலைகளின் சீற்றமும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கடல் அலைகளின் சீற்றம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

    • நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு இதுவரை போதிய மழை இல்லாத நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனிடையே இலங்கை அருகே கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், மறு உத்தரவு வரும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இந்த தகவல் நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் உள்ள ஆலய ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

    அதேநேரம் இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், தோமையர்புரம் பகுதியில் கட்டுமரத்தில் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்டு சென்று விட்டனர். நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்பதால் தூத்துக்குடி வ.உ.சி. துறை முகம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மேலும் வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் காற்று 75 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதனால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை 300 விசைப் படகுகள் மீன்பிடி துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    இதே போல கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், மணப்பாடு, ஆலந்தலை, கொம்புத்துறை, புன்னக்காயல் பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

    • தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது
    • கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

    கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோவா கடற்கரையில் இருந்து 70 நாட்டிக்கல் மைல்கள் [nautical miles] தூரத்தில் வைத்து இந்த விபத்து நடந்துள்ளது.

    13 மீனவர்களுடன் வந்த மர்தோமா [Marthoma] படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் [Scorpene-class] கடற்படை நீர்மூழ்கியானது மோதியுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கோப்புப் படம்

     

     காணாமல் போனவர்களை தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது . தற்போது வரை 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) மூலம் தேடுதல் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • கடல் அலை சுமார் 50 அடிக்கு வந்து செல்வதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.

    கடலூர்:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.

    நவம்பர் 25-ந்தேதி முதல் பருவமழை வலுவடையும். 26 மற்றும் 27-ந் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் , கடலில் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் நேற்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தற்போது கடலில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் தாழங்குடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக முன்னோக்கி கடல் அலை சுமார் 50 அடிக்கு வந்து செல்வதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர். இது மட்டுமின்றி அதிகளவில் கடல் சீற்றம் ஏற்பட்டால் படகுகள் இழுத்துச் செல்லப்பட்டு விடும் என்ற அச்சத்தில் மீனவர்கள் கடற்கரை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 

    • கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.
    • தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

    வேதாரண்யம்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் உள்பகுதிகளில் இன்று வழக்கத்தை விட அதிகளவில் பலத்த காற்று வீசி வருகிறது.

    இதனால் ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 5000 மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது.
    • இலங்கை கடற்படை மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

    ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அரங்கேறியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

    20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • யாழ்ப்பாணம் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
    • இலங்கை கடற்படையால் இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் கைதாகியுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 23-ந்தேதி 399 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் மீனவர்கள் மீன் பிடித்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்தது. அவர்களை பார்த்ததும் மீனவர்கள் அங்கிருந்து அவசரம், அவசரமாக புறப்பட்டனர். இருந்தபோதிலும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    அதில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்தனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று 16 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு வருகிற 20-ந்தேதி காவலை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

    இலங்கை கடற்படையால் இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 61 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை கடற்படை கைது செய்த நாகை மீனவர்கள் 12 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தற்போது வரை 140 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் (26.10.2024) மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்தகைய கைது நடவடிக்கைகள், இந்தியா- இலங்கை இடையிலான ஆக்கப்பூர்வமான தூதரக முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குக் கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    அதோடு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 26-10-2024 அன்று IND-TN-06-MM-5102 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டில் மட்டும் இதுபோன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், 27.10.2024 அன்றைய நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    எனவே, இந்தப் பிரச்சனையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    மீனவர்கள் நலனுக்கான இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நாளை மறுநாள் 29-ந் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வது எத்தகைய அணுகுமுறை? என்பது தெரியவில்லை. மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு கண்டுவிடக்கூடாது என இலங்கை நினைக்கிறதோ? என்ற ஐயத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது.

    உடனடியாக விடுதலை செய்வதற்கும், நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×