என் மலர்
நீங்கள் தேடியது "UN"
- பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
- ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் யோகா தினம் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மறுநாளான 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு அதிபர் ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார். அதற்கடுத்த நாள் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகின்றனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
அமெரிக்கா, இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
- போர் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.
- சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நியூயார்க்:
ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கி முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் போரில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளை ரஷிய படைகள் சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல் ரஷிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாக இருக்கலாம் என ஐ.நா. சபை கூறியுள்ளது.
இதுபற்றி ஐ.நா. சபையின் அறிக்கையாளரான அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியிருப்பதாவது:
உக்ரைனில் உள்ள ரஷியப் படைகள், உக்ரைன் குடிமக்கள் மற்றும் ராணுவ போர்க்கைதிகளை தொடர்ச்சியாக, வேண்டுமென்றே உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக சில அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சித்ரவதை நடவடிக்கைகளில் மின்சார ஷாக் கொடுத்தல், முகத்தை மூடி தாக்குதல் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும்.
இந்த குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டால், அவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்ரவதையின் ஒரு மாதிரியாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது. இந்த சித்ரவதைகளை பார்க்கும்போது, உயர் அதிகாரிகளிடமிருந்து நேரடி அங்கீகாரம் பெற்று, வேண்டுமென்றே கொள்கை ரீதியாக செய்ததுபோல் தெரிகிறது.
சித்ரவதை ஒரு போர்க்குற்றம் மட்டுமின்றி இந்த நடைமுறை மனிதகுலத்திற்கே எதிரான குற்றமாகும். உயர்ந்த இடத்திலிருந்து வந்த உத்தரவு அல்லது அரசின் கொள்கை வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படிந்து கைதிகளை சித்ரவதை செய்வதை நியாயப்படுத்த முடியாது. சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள், உக்ரைனுக்குள் ரஷியப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உள் உறுப்புகள் சேதம் அடைந்துள்ளன. எலும்பு முறிவுகள், பக்கவாதம் மற்றும் நாட்பட்ட நோய்களின் தாக்கம் காணப்படுகிறது. சிலர் பிரமை பிடித்தவர்கள் போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போர் இன்னும் நீண்ட காலம் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.
பொதுமக்கள் மற்றும் போர்க்கைதிகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதையும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஐ.நா. மனித உரிமை நிபுணர்களுடன் இணைந்து ரஷியாவிற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் தங்கள் கவலைகளை தெரிவித்திருப்பதாகவும் அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.
- உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி இன்றோடு 500-வது நாள் ஆகியுள்ளது
- உக்ரைன் இந்த போரில் 9 ஆயிரம் பொதுக்களை இழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. பின்னர் தனது ராணுவத்தின் துணையோடு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.
இந்த ரஷிய- உக்ரைன் போர் உடனே முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்றோடு 500 நாட்கள் கடந்தும் நீடிக்கிறது.
படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைனில் உள்ள ஐ.நா. அமைப்பின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRMMU) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் குடிமக்கள் பயங்கரமான எண்ணிக்கையில் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு நீண்ட போரில் இன்று நாம் மற்றொரு சோகமான மைல்கல்லை அடைந்திருக்கிறோம்" என்று அந்த அமைப்பின் துணைத்தலைவர் நோயல் கால்ஹவுன் (Noel Calhoun) கூறியிருக்கிறார்.
2023-ன் தொடக்கத்தில் சராசரி உயிரிழப்பு எண்ணிக்கை 2022-ஐ விட குறைவாக இருந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாகமீண்டும் ஏறத் தொடங்கியது. ஜூன் 27-ல், கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் மீது நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பின்பு மேற்கு நகரமான லிவிவ் நகர தாக்குதலில் கட்டிடங்களின் இடிபாடுகளில் 10-வதாக ஒரு உடலை கண்டுபிடித்தனர். இந்த தாக்குதலில் குறைந்தது 37 பேர் காயமடைந்திருந்தனர் எனக்கூறிய மேயர் ஆண்ட்ரி சடோவ்யி "படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தனது நகரத்தில் உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு மீதான மிகப்பெரிய தாக்குதல்" என்றும் கூறியிருந்தார்.
உலக பாரம்பரிய மாநாட்டின் மூலம் "பாதுகாக்கப்பட்ட பகுதி" என அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் சேதமடைந்ததாகவும் யுனெஸ்கோ (UNESCO) தெரிவித்துள்ளது.
பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், பொதுமக்களின் மின்சார மற்றும் தண்ணீர் தேவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
புச்சா மற்றும் மரியுபோல் நகரங்கள், கடந்த ஆண்டு ரஷிய அட்டூழியங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறியது. அங்கு நடந்த படுகொலைகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் படங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ரஷியாவின் மீது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுகளை அதிகரித்தது.
நீண்டு கொண்டே செல்லும் இந்த போர், விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்.
- நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.
நியூயார்க்:
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.
ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக இத்தாலியில் 16 நகரங்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறியதாவது:-
வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக மக்கள் தயாராக வேண்டும். அதிகபட்ச பகல் வெப்ப நிலையை காட்டிலும் இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதிக இரவு நேர வெப்ப நிலை, மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.
வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது.
வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றார். வடஅமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003-ம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்ய முடியும்
- உள்ளூர் மீனவர் அமைப்புகளும், சீனாவும், தைவானும் எதிர்க்கிறது
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது. மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும், கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது.
இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.
ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில் ஜப்பானிய அரசாங்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, இம்மாத பிற்பகுதியில் கடலில் வெளியிட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஆகியோருடன் அடுத்த வாரம் அமெரிக்காவில் தனது சந்திப்புகளை முடித்த பிறகு, சுமார் 1.3 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியிடுவதற்கான செயல்முறை தொடங்கும்.
ஜப்பானிய தலைவர், இரு நாட்டு தலைவர்களுக்கும் நீர் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார்.
- அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார்.
நியூயார்க்:
வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்புத்துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 4 அதிகாரிகளும் கடத்தப்பட்டனர்.
கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பெற்றது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிட்டு மீட்பு தொகையாக ரூ.248 கோடி கேட்டது.
இதற்கிடையே, பயங்கரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட அதிகாரிகளை மீட்கும் பணியில் ஐ.நா.சபை இறங்கியது. தூதர்களை நேரில் அனுப்பி பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகள் உடல்நலனை காரணம் காட்டி சுபியுல் அனமை விடுவித்தனர். மேலும் அவருடன் கடத்தப்பட்ட 4 பேரையும் அல் கொய்தாவினர் விடுவித்துள்ளனர் என ஐ.நா.சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
- தற்போது மேலும் ஒரு பள்ளிக்கூடத்தை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தனர்.
பெய்ரூட்:
பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இங்குள்ள மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற வன்முறையின்போது அவர்கள் 7 பள்ளிக்கூடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு பள்ளிக்கூடத்தை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தனர். இதற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. விவகார அலுவலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அந்த பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேறுமாறு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.
- ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.
கார்டூம்:
சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.
அந்தவகையில் சூடான் உள்நாட்டு போரால் சுமார் 48 லட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.
ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.
- ஐநா சபையில் துருக்கி பெயர் கடந்த வருடம் மாற்றப்பட்டுள்ளது
- முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலனை செய்யப்படும்
இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என அச்சிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில்
''துருக்கி (Turkey) துருகியே (Turkiye) என கடந்த வருடம் மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது. அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்'' என்றார்.
இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அழைக்கப்படும்.
- அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது.
- இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
நியூயார்க்:
டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம் இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதை ஐ.நா. ஏற்குமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், ''கடந்த ஆண்டு துருக்கி நாட்டின் பெயரை துருக்கியே என மாற்றுவதற்கு அந்த நாட்டின் அரசாங்கத்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட முறையான கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்தோம். அதுபோலவே இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்" என்றார்.
- எரிக், பருவநிலை மாற்றங்கள் குறித்து முக்கிய கருத்துக்களை கூறுபவர்
- இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்களை ராகுல் கூறினார் என்றார் எரிக்
வட ஐரோப்பாவில் உள்ள பனிமலைகள் அதிகம் கொண்ட சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற நாடு, நார்வே (Norway). இதன் தலைநகரம் ஓஸ்லோ (Oslo).
இந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதியும், ராஜதந்திரியுமான 68 வயதான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim), முன்னாள் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டங்களின் செயல் இயக்குனராக பதவி வகித்தவர். இவர், பருவநிலையின் மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து உலக நாடுகள் செயலாற்ற வேண்டியது குறித்து தனது கருத்துக்களை உலகெங்கும் கூறி வருகிறார். கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் அதிக மக்கள் தொகையின் காரணமாக இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்த நேரிடும் என்றும் இதனால் இந்தியாவில் காடுகள் அழியும் நிலை அதிகரிக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்றார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் அக்கட்சி தெரிவித்துள்ளதாவது:
ராகுல் காந்தி, நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான எர்னா ஸோல்பர்க் (Erna Solberg) மற்றும் ஸ்வெர் மிர்லி (Sverre Myrli) ஆகியோருடன் நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் ஆகியோரையும் சந்தித்தார். அந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது.
இவ்வாறு அக்கட்சி தெரிவித்திருந்தது.
நார்வே சென்ற ராகுல், எரிக் சொல்ஹெய்மையும் அங்கு சந்தித்தார்.
இது குறித்து எரிக் சொல்ஹெய்ம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு செய்திருப்பதாவது:
நவீன இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் முன்னணி வணிக தலைவர்களுடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடந்தது. இதில் இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல், இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும், அடுத்த வருடம் அந்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் பின்னணியில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அவரது கருத்துக்களை வெளியிட்டதாக எரிக் கூறினார்.
- ஐ.நா. கூட்டத்தில் ரஷியா அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது
- எங்களுடைய அனைத்தையும், பார்ட்னர் நாடுகளால் கேட்கப்படுவது முக்கியம்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்களின் ஆதரவை ஜெலன்ஸ்கி நாடி வருகிறார். மேலும், ரஷியாவை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், உறுதியான எதிர்நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நேட்டோ படையில் சேர்ப்பதாக தெரிவித்து, அதன் மாநாட்டில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் விடப்பட்டது.
ஐ.நா. கண்டனம் தெரிவித்த போதிலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஐ.நா.வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை, எங்குடைய அனைத்து வார்த்தைகள், அனைத்து மெசேஜ்கள் என அனைத்தையும் எங்களுடைய பார்ட்னர்களால் கேட்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இன்னும் ஐ.நா. அவையில் ரஷியா உறுப்பினர்கள் இருந்தால் அது பரிதாபத்திற்குரியது. ஆனால், இருக்கிறார்கள். ரஷிய பயங்கரவாதிகளுக்காக இங்கே இடம் இருக்கிறது. இந்த கேள்வி எனக்கானது அல்ல. ஐ.நா. அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான கேள்வி என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.