என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water pipe"

    • தண்ணீர் இல்லாத ஊரில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி லட்சுமி கணவர் ஊருக்கு செல்ல மறுத்து விட்டார்.
    • தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எங்கள் கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் கிராமத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளனர்

    மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சுமார் 460 கி.மீ. தொலைவில் திண்டோரி மாவட்டம் அமைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள தேவ்ரா கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா சோனி.

    இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் முதல் 2,500 பேர் வரை வசிக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே ஒரே ஒரு குடிநீர் குழாய்தான் உள்ளது. இதனால் இந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது.

    இந்த குடிநீர் குழாய் அருகே காலை முதல் இரவு வரை மிகப்பெரிய கூட்டமே காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதாக காணப்படுகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக லட்சுமியால் கணவர் வீட்டில் வாழ முடியவில்லை.

    இதையடுத்து ஜிதேந்திரா சோனியை அவரது மனைவி லட்சுமி கைகழுவி விட்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி வீட்டுக்கு சென்று அவரை குடும்பம் நடத்த வருமாறு ஜிதேந்திரா சோனி எவ்வளவோ கெஞ்சி அழைத்து பார்த்தார். ஆனால் தண்ணீர் இல்லாத ஊரில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி லட்சுமி கணவர் ஊருக்கு செல்ல மறுத்து விட்டார்.

    இதையடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு முடிவு கட்ட ஜிதேந்திரா சோனி நினைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது ஊரில் உள்ள தண்ணீர் பிரச்சனை குறித்தும், அதனால் தன்னை மனைவி விட்டுச்சென்றது குறித்தும் கலெக்டரிடம் எடுத்துரைத்தார். இது தொடர்பாக ஜிதேந்திரா சோனி கூறியதாவது:-

    என் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக என் மனைவி என்னை கைவிட்டுவிட்டார். அவர் எனது குழந்தைகளுடன் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். எனது மனைவி என்னை விட்டு பிரிந்து செல்லாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

    குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் நான் அவரிடம் சொன்னேன். ஆனால் தண்ணீர் பிரச்சனையால் இந்த கிராமத்தில் எதிர்காலம் இல்லை என்று என் மனைவி கூறினார்.

    தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எங்கள் கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் கிராமத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளனர். பல குடும்பங்கள் அமைதியாக கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டன. எனவே எனது பிரச்சனைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக் கூறினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜிதேந்திரா சோனியின் புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெறும் 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவ்ரா கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், 'தேவ்ரா கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. ஆனால் அதில் நீர் மட்டம் குறைந்துவிட்டது. எனவே பக்கத்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் இணைப்புகளை வழங்குமாறு கிராம மக்கள் கோரியுள்ளனர்.

    தேவ்ரா கிராமத்தில் உள்ள பழைய குடிநீர் குழாயை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் இணைக்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் நீர் வினியோகத்தை தொடங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடிநீர் பிரச்சனையால் கணவனை கைகழுவி விட்டு சென்ற பெண்ணின் உதவியால் தேவ்ரா கிராமத்தில் குடிநீர் பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட உள்ளது.

    • நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர் பாஸ்கரன், வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 53 மற்றும் 54-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் 53-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தலைமையில் இன்று மாநகராட்சி குறை தீர்ப்பு கூட்டத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர் காலனி, மகிழ்ச்சி நகரில் உள்ள தரைதள நீர் தேக்க தொட்டிக்கு சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து பம்பிங் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் அடிக்கடி உடைப்பு, அதே போன்று தரை தள நீரேற்று தொட்டியில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குழாய்களிலும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.

    இது தொடர்பாக மண்டல அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், போனை எடுப்பதில்லை. எனவே மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், வருகிற 18-ந் தேதி வ.உ.சி குருபூஜை விழா நடைபெற உள்ளது. எனவே மணி மண்டபத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • நெல்லை டவுண் தெற்கு ரதவீதி சந்திப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள சாலையானது எப்போதும் வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய சாலையாகும். இந்த சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த 2 வாரங்களாக அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது.

     நெல்லை:

    நெல்லை டவுண் தெற்கு ரதவீதி சந்திப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள சாலையானது எப்போதும் வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய சாலையாகும். இந்த சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2 வாரங்களாக அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது. பொதுமக்களுக்கு பயன்படாமல் சாலையில் வீணாக குடிநீர் செல்வதை மாநகராட்சி கமிஷனர் உடனடி நடவடிக்கை எடுத்து அதனை சீர்செய்ய வேண்டும். பொது மக்களுக்கு பயன்படாமல் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வீணாகி கழிவு நீரோடைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்திட ஆவன செய்திட வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு, நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தலைவர் அய்யூப் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    • போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
    • குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யக்கோரி பா.ஜ,.க. சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம், ராயபுரம் மண்டல் பா.ஜ.க. தலைவா் பூபதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 27 -வது வாா்டு சுப்புராயா் கவுண்டா் சாலையில் கணேசபுரம் 4 -வது வீதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த 20 நாள்களுக்கு முன்பாக முடிவடைந்தன. இந்தப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் தற்போது வரையில் மூடப்படவில்லை. மேலும், குழாய்கள் முறையாக ஒட்டப்படாததால் தண்ணீா் கசிந்து சாலைகளில் வழிந்தோடுவதால் சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    ஆகவே குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும். அதே போல ராஜீவ் காந்தி நகா் 5 -வது வீதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவானி ஆற்றில் இருந்து சிறுமுகை வழியாக ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
    • ரோட்டின் ஒரு பகுதி முழுவதுமே சேதம் அடைந்தது.

    அவிநாசி :

    மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி, மங்கலம் மற்றும் திருப்பூர் குடிநீர் தேவைக்காக 4-வது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பவானி ஆற்றில் இருந்து சிறுமுகை வழியாக ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை குடிநீர் தேவைக்காக வழக்கம் போல தண்ணீர் வால்வு திறந்து விடப்பட்டது. குடிநீரின் அழுத்தம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவிநாசி- மங்கலம் சாலை ,வஞ்சிபாளையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து குடிநீர் வெளியேறியது.

    இதன் காரணமாக குழாய் பதிக்கப்பட்டு இருந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, ரோட்டின் ஒரு பகுதி முழுவதுமே சேதம் அடைந்தது. மேலும் அந்த இடத்தில் சாலை சேதமடைந்ததுடன் பள்ளமும் பெரிதாக ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து அவிநாசி கருணை பாளையம் பிரிவு அருகே உள்ள ராட்சத வால்வு மற்றும் அதன் அருகே உள்ள வால்வு உடனடியாக திறக்கப்பட்டு தண்ணீரின் வேகத்தை குறைத்தனர். இதன் காரணமாக நீரின் அளவு குறைய தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிநீர் திட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சேதமடைந்த குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் 40ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • திருமணம் போன்ற விசேஷ நாட்களில் வாகன எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி,தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில், ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. குடிநீர் குழாய் இணைப்புகள் உடனடியாக சரி செய்யப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதற்கிடையே பல்லடம் பஸ் நிலையம் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அதனை சரி செய்ய குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகின்றது.ஆனால் இன்னும் குழியை சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன அந்தப்பகுதி வளைவான பகுதி என்பதால் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே குழாய் உடைப்பு பணிகளை விரைவாக செய்யவேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாதப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பா.ஜ.க. விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகு பிரசாத்,பா.ஜ.க.மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • ரூ.30 கோடியில் அமைகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் ரூ.30 கோடியே 23 லட்சம் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளாக பொன்னை ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறுகள், தரைத்தள மற்றும் மேநீர் தேக்கத் தொட்டிகள், பிரதான குடிநீர் மற்றும் விநியோக பைப் லைன் ஆகியவை அமைக்கப்படவுள்ளது.

    இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் சங்கீதா மகேஷ், துணைத் தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அம்சா, வாலாஜா ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கட்ரமணன், செயல் அலுவலர் கோபிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இத்திட்டத்தின் மூலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இப்பணிகள் ஓராண்டு காலத்திற்குள் முடிக்கப்படும்.

    இதனால் பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் 14 ஆயிரத்து 505 பேர் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தரமற்ற குழாய் பதிக்கப்பட்டதே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
    • கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய தொழிலாளர்கள் வருவதில்லை.

    செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33-வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். செங்கல்பட்டு நகர பகுதி முழுவதும் பயன்படுத்தும் வகையில் பழவேலி, இருகுன்றம்பள்ளி அருகே உள்ள பாலாற்று பகுதியில் கிணறுகள் அமைத்து அங்கிருந்து குழாய்களில் நகராட்சி மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 1,5,6, 7,8,9,10 வார்டுகளில் பெரியநத்தம் பகுதியில் உள்ள களத்து மேடு, தூக்குமரகுட்டை, கைலாசநாதர் கோவில் தெரு, தட்டான் மலை தெரு, மற்றும் அனுமந்த பொத்தேறி, ராமபாளையம், சாஸ்திரி நகர் , பிள்ளையார் கோவில் தெரு மற்றும் மதுரை வீரன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 29,30 மற்றும் 31ஆகிய வார்டுகளில் 4 அல்லது 5நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் விடப்படாததால் எப்போது தண்ணீர் வரும் என்று பொதுமக்கள் தினமும் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. காலிகுடங்களை குடிநீர் குழாய் உள்ள இடங்களில் வரிசையாக அடுக்கி வைத்து காத்திருக்கிறார்கள்.

    குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட மொத்தம் உள்ள 10 வார்டுகளில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் குடிநீரை கூடுதல் விலை கொடுத்து கடைகளில் வாங்கும் நிலை நீடித்து வருகிறது. குடிநீர் விநியோகத்துக்காக புதைக்கப்பட்ட குழாய்களில் உடைப்புகள் ஏற்படுவதே இந்த தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணம் என்று தெரிகிறது. சமீபத்தில் தட்டான்மலை தெரு வழியாக புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி கால்வாயில் கலந்தது.

    இந்த குழாய் உடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. தரமற்ற குழாய் பதிக்கப்பட்டதே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பூமியில் புதைக்கப்பட்ட குழாய் உடைப்பே இதற்கு காரணம். இதனை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் 2 அல்லது 3 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் குறித்த நேரத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கைலாசநாதர் கோவில் தெரு, தூக்குமர குட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரு குழாய்களில் எப்போதும் காலி குடங்களுடன் குடி நீருக்காக காத்து கிடக்கின்றனர். சில இடங்களில் குடி நீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. குழாய்களில் தண்ணீர் வரும்போது சிலர் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர்.இதனால் தெரு குழாய்களுக்கு வரவேண்டிய குடிநீர் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது.

    மேலும் கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய தொழிலாளர்கள் வருவதில்லை.

    எனவே குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் தண்ணீர் கிடைக்க மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆம்புலன்சில் மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    குடிநீர் குழாய் அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் பஸ்கள் பாதி வழியிலேயே திரும்பி செல்வதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லும் நிலை உள்ளது.

    இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் கர்ப்பிணிகள் கூடுதல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அல்லது தச்சூர் வட்டார மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    எனவே பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நலன் கருதி குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
    • தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்திருப்பேரை:

    நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டும், அருகில் உள்ள மரங்களுக்கு சென்று கொண்டும் இருக்கிறது. ஏற்கனவே இந்த இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து சரிசெய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய துறையினர் உடனடியாக குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குசலகுமாரி சம்பவத்தன்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.
    • ஆத்திரம் அடைந்த அமிர்தலெட்சுமி உள்பட 4 பேரும் சேர்ந்து குசலகுமாரியை தாக்கினர்.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்தி பாட்டை சேர்ந்தவர் விஜய குமார் மனைவி குசலகுமாரி (வயது44). இவர் சம்பவத்தன்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பால கிருஷ்ணன் மனைவி அமிர்தலெட்சுமி (48), முத்து வேல் (27), முத்துவேல் மனைவி சரண்யா (27), பால கிருஷ்ணன் மகள் சவுமியா (23) ஆகியோர் களுக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தலெட்சுமி உள்பட 4 பேரும் சேர்ந்து குசலகுமாரியை தாக்கினர். இதுபற்றி அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அமிர்த லெட்சுமி, முத்துவேல் ஆகியோரை கைது செய் தனர். மேலும் சரண்யா, சவுமியாவை தேடி வருகின்றனர்.

    ×