என் மலர்
நீங்கள் தேடியது "ஃபெஞ்சல்"
- விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
மழை நிவாரணம் கேட்டு விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும், சேதமடைந்த பயிர்களுக்கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், சி.வி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அர்ச்சுனன், சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வன்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், மாவட்ட மருத்துவரணி டாக்டர் முத்தையன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல்,தொழில் நுட்ப பிரிவு தலைவர் வக்கீல் பிரபாகரன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பாலாஜி, நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் முகுந்தன், பன்னீர், சுரேஷ் பாபு, பேட்டை முருகன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், கோதண்டனர், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மழை நிவாரணம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
- தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது.
- தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னை:
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடையில் ஃபெஞ்சல் புயல் மழையால் கடந்த 12-ந்தேதி சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
அந்த நாளில் 6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலத் தேர்வும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வும் நடத்த முடியாமல் போனது.
அந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் அதுதொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி கனமழையால் விடுமுறை விடப்பட்டு நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6, 7, 8-ம் வகுப்புகளுக்கு மட்டும் சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பிற வகுப்புகளுக்கும் வாய்மொழி வாயிலாக உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- தி.மு.க. அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் பல்வேறு வகைகளில் துன்பப்படுவது வாடிக்கையாகிவிட்டது. மக்கள் போற்றும் ஒரு நல்ல அரசுக்கு எடுத்துக்காட்டு, அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதும்; மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பதும்; இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் முன்கூட்டியே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைக் காப்பாற்றுவதுமாகும்.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஸ்டாலின் தலைமையிலான கடந்த 43 மாதகால தி.மு.க. ஆட்சியில் மக்கள் பெருந்துன்பங்களுக்கு ஆளாகி, தங்களது இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தி.மு.க. அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமீபத்தில் உருவான ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையாலும், எவ்வித முன்அறிவிப்பும் இன்றி நள்ளிரவில் திடீரென சாத்தனூர் அணையில் இருந்து 1 லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீரைத் திறந்துவிட்டதாலும் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவில்லை.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய நிவாரணத் தொகையையும் வழங்காத ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயப் பெருமக்கள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2 ஆயிரத்து 906 டன் வேளாண் விளைபொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
- கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது.
சென்னை:
தமிழகத்தில் 'ஃபெஞ்சல்' புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.
அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்கள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வா முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 69 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 73 ஆயிரத்து 263 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன, இதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45 ஆயிரத்து 634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஆக மொத்தம் இதுநாள் வரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2 ஆயிரத்து 906 டன் வேளாண் விளைபொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியை முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத்தரும் வகையில் அதிகாரிகள் உரிய கருத்துக்களை அரசிற்கு விரைவில் அனுப்பப்பட வேண்டும்.
இந்த கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்டும் விதமாக, பயிர் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குனர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், வடிநீர்ப்பகுதி மேம்பாட்டு முகமையின் மேலாண்மை இயக்குனர் ஜெயகாந்தன், தலைமைப் பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும்போதுதான் எதிர்பார்க்கப்படுகின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்.
- தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மட்டுமே வானிலை நிகழ்வுகளை கணித்துவிட முடியாது.
சென்னை:
சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் கணிப்பில் வானிலை ஆய்வு மையம் சற்று தடுமாறியது. இதுபோன்று வானிலை நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியாமல் போவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வானிலையியலை முழுமையாக அறிந்து கொள்ள அறிவியல் கிடையாது. 100 சதவீதம் முழுமையாக கணிக்க முடியாது. வானிலை நிகழ்வுகள் பல காரணங்களால் நிகழக்கூடியது. வானிலையை கணிப்பதற்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது. கருவிகள் புள்ளிவிவரங்களைதான் கொடுக்கும். அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அறிவியல் வளரும் போது தொழில்நுட்பமும் வளரவேண்டியது அவசியம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும்போதுதான் எதிர்பார்க்கப்படுகின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்.
புயலை பொறுத்தவரையில், கடல் உள்ளடக்க வெப்பம், கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று விரிதல், காற்றுக்கும், வளிமண்டலத்துக்கும் உள்ள தொடர்பு, மேகக்கூட்டங்கள் எப்படி உருவாகிறது?, அதனால் என்ன வெப்பம் வெளியாகிறது?, புயலின் நகர்வு வேகம் போன்ற பல காரணிகளால் அறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது.
புயல் உருவாகாதபோது காற்று நேர் திசையில் செல்லும். புயலாக மாறும் போது சுழல் காற்றாக மாறும். அப்போது திசை மாறும். ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது அதற்கு பின்னால் சக்தி பரிமாற்றம் இருக்கிறது. இதையெல்லாம் முழுமையாக அறியப்பட வேண்டும். இன்றைய காலகட்டங்களில் அவை முழுமையாக அறியப்படவில்லை.
ஃபெஞ்சல் புயல் நேரத்தின்போது கூட அது செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை பார்க்கும்போது, புயலாக மாற சாத்தியம் இல்லை என்று சொன்னோம். பின்னர் இரவில் அது வளர்ச்சி பெற்றதால் புயலாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ''ஓடீஸ்'' புயலுக்கு 112 கி.மீ. வரைக்கும்தான் காற்று இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 260 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டது. புயலுக்குள் ஆய்வு விமானங்களை செலுத்தியும் விவரங்கள் பெறப்படுகிறது. ஆனால் அப்படி பெறப்பட்ட விவரங்களின் கணிப்புகளும் தவறுகிறது. அறிவியலின் வித்தியாசம் அதில் தெரிகிறது.
எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மட்டுமே வானிலை நிகழ்வுகளை கணித்துவிட முடியாது. முழுமையாக அறிவியல் அறியப்படவேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பம் இப்போது வந்து இருக்கிறது. தொடர்ந்து முயற்சிகளும் நடக்கிறது.
காலநிலை மாற்றத்தினால் புயல் வலிமையாக உருவாகிறது. திசை மாற்றத்திலும் வேறுபாடு ஏற்படுகிறது. நகர்வு பாதையில் வேறுபாடு ஏற்படுகிறது. புயலை சுற்றியுள்ள மேகக்கூட்டங்கள் சமச்சீராக உருவாகாது. வானிலை கணிப்புகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளோம். தொடர் முயற்சிகளும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ள சேதத்தை மதிப்பிட நேற்று முன்தினம் மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு புதுவையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
கடந்த நவம்பர் 30-ந்தேதி புதுச்சேரியை தாக்கிய ஃபெஞ்சல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. புதுவை நகர், புறநகர், கிராமபுறங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள், மின் மாற்றிகள் சாய்ந்தது. துணை மின்நிலையங்களில் வெள்ளம் புகுந்தது.
ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து கால்வாய்கள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 50கி.மீ.க்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளது.
வெள்ள சேதத்தை மதிப்பிட நேற்று முன்தினம் மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர். நகர பகுதி ஓரிருநாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் கிராமப்புறங்களில் சாத்தனூர், வீடூர் அணை திறப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளவில்லை.
இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு புதுவையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்றைய தினமே வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை மேகங்கள் திரண்டு வானம் இருண்டு காணப்பட்டது. காலை 7.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது.
இதனால் மீண்டும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் பகுதிகளில் ஏற்கனவே பெய்த புயல் மழையில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்திருந்த நிலையில் மீண்டும் இன்று பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி வருகிறது.
இதே போல் தற்காலிக பஸ் நிலையத்திலும் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே புதுவை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. சப்-கலெக்டர்கள் சோமசேகர் அப்பாராவ், இசிட்டா ரதி, அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறை மூலம் தேவையான இடங்களில் அதிகளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஜே.சி.பி. எந்திரம், மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அதிகாரிகள் விரைவாக பணியாற்ற வேண்டும்.
தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க வேண்டும். தாழ்வான பகுதிகள் அனைத்தும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அணைகள் திறக்கப்படும்போது முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தாழ்வான பகுதியில் வசிப்போரை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.
தாசில்தார்களுக்கு வயர்லெஸ் வழங்கப்படும். மழைக்காலங்களில் அதிகாரிகள் அதை பயன்படுத்தி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.
- தென்பெண்ணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை பார்வையிட்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடு புதைந்தது. வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய குழுவினர் டாக்டர் பொன்னுசாமி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் சரவணன் (ஐதராபாத்), கே எம் பாலாஜி (சென்னை) ஆகியோர் உட்பட அதிகாரிகள் மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் கீழ்பென்னாத்தூர் அடுத்த கோனாகல், சின்ன காகினூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலம், தென்பெண்ணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது.
- சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு 74.32 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8.738 டி.எம்.சி. ஆக உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் நீர் மட்டம் 33 அடி தாண்டி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி.யில் 2.573 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,530 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 3.300 டி.எம்.சி.யில் 2.755 டி.எம்.சி.யும், சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 1.081 டி.எம்.சி.யில் 228 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 2.860 டி.எம்.சி. தண்ணீரும், கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கனஅடியில் 322 மில்லியன் கனஅடியும் தண்ணீர் நிரம்பியுள்ளது.
கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது. ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதற்கிடையே வங்க கடலில் தற்போது மேலும் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12-ந்தேதி தமிழகம் நோக்கி வர உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து அந்த மக்கள் மீண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 2 ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் தண்ணீர் வடியாத காரணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மழைநீர் வடிந்து சகஜநிலை திரும்பிய நிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர்.
- பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
- நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பள்ளிகள் திறக்கப்படாத சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. பத்து இலட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது."
"சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி மாண்புமிகு முதலமைச்சரிடம் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழு கடலூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளனர்.
- செவ்வாய்க்கிழமை (10-ந்தேதி) மத்திய குழு அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு செல்ல இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காக மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை இணைச் செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையிலான குழு நேற்று சென்னை வந்தது.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அந்தக் குழுவினர் சந்தித்தனர். குழுவில் மத்திய அரசின் வேளாண்மைத் துறை இயக்குநர் பொன்னுசாமி, நிதித்துறை இயக்குநர் சோனாமணி கவுபம், மத்திய நீர்வளத்துறை இயக்குநர் சரவணன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய குழுவிடம் புயல் பாதிப்பு குறித்த விவரங்களை அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை இடைக்காலமாக மற்றும் நிரந்தர அடிப்படையில் சீர் செய்ய ரூ.6,675 கோடி தேவைப்படுகிறது என மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அறிக்கையை பெற்றுக்கொண்ட மத்திய குழு அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்போம் என்றனர். நேற்று இரவு மத்திய குழு அதிகாரிகள் சென்னையில் தங்கினார்கள்.
இன்று (சனிக்கிழமை) காலை மத்திய குழு அதிகாரிகள் 7 பேரும் விழுப்புரம் மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் மத்திய குழுவினரிடம் எடுத்து கூறினார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு படங்களையும் மத்திய குழுவிடம் அதிகாரிகள் கொடுத்தனர். அவற்றை மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து மத்திய குழு விக்கிரவாண்டி பகுதிக்கு புறப்பட்டு சென்றது.
அங்கும் வெள்ள சேத பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழு கடலூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளனர். அங்கு கலெக்டர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதன் பிறகு நாளை மதியம் மத்திய குழு அதிகாரிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு செல்ல உள்ளனர்.
புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட மத்தியக்குழு வர வேண்டும், புதுவைக்கு நிவாரணமாக ரூ.614 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியிருந்தார்.
அதை ஏற்று மத்திய இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் புதுச்சேரி வருகின்றனர் அவர்கள் புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக சென்று பார்வையிடுகின்றனர்.
புதுவை காலாப்பட்டு, தேங்காய் திட்டு துறைமுகம், பாகூர் உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தலைமை செயலகத்தில் மத்திய குழுவினர் புதுச்சேரி அதிகாரிகளுடன் மழை சேதம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
மத்திய நிபுணர் குழுவினர் வருகையையொட்டி புதுவை தலைமை செயலாளர் சரத் சவுகான் கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் மத்தியக்குழுவினர் பார்வையிட உள்ள இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
செவ்வாய்க்கிழமை (10-ந்தேதி) மத்திய குழு அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு செல்ல இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து படங்கள் மற்றும் தகவல்களை அதிகாரிகள் மத்திய குழுவுக்கு அனுப்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே அந்த மாவட்டங்களுக்கு மத்திய குழு செல்லுமா? என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பாதிக்கப்பட்ட கள ஆய்வு செய்த பிறகு டெல்லி சென்று மத்திய உள்துறையிடம் அறிக்கையை அளிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.
- அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை.
- பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ரங்கசாமி தனது வாகனத்தை விட்டு இறங்காமல் பார்வையிட்டார். காரை விட்டு ஏன் இறங்கவில்லை? உள்துறை அமைச்சர் வெளிநாடு சென்று விட்டார். முதலமைச்சர் கிராமப்புற பகுதிக்கு சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் செல்லவில்லை.
அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் என்பது கண்துடைப்பு. இது வெறும் அறிவிப்பு மட்டும்தான். மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் பிரதமர் மீது பழி போடுவார். இதுதான் முதலமைச்சர் ரங்கசாமியின் வேலை.
ஒட்டுமொத்தமாக புதுவை அரசு இந்த புயலை எதிர்கொள்ள தவறிவிட்டது. நிவாரண பணிகள் திருப்திகரமாக இல்லை. இதற்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் முழு கணக்கெடுப்பை நடத்தி நிவாரணத்தை முறையாக வழங்க வேண்டும். புதுவையில் உட்கார்ந்து கொண்டு நிதி கேட்கக்கூடாது, டெல்லி சென்று கேட்க வேண்டும்.
அப்படி கேட்காமல், பிரதமர் நிதி தரவில்லை என ரங்கசாமி கூறுவார். பிரதமர் மோடி பணம் தரவில்லை என பழி போடுவார். இந்த பழி போடும் காலமெல்லாம் முடிந்து விட்டது. இந்த இரட்டை என்ஜின் ஆட்சி ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கிறது. எதுவும் நடக்கவில்லை.
உண்மையில் இந்த இரட்டை என்ஜின் ஆட்சி என்றால், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.