search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • அனைத்து OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படக்கூடும்
    • CERT-In என்பது மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

    ஆண்ட்ராய்டு - Android 12, 12 12L, 13, 14, 15 ஆகிய வெர்ஷன்களை கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோருக்கு அரசு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் உபயோக சாதனங்களிலும் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.

     

    மேற்கூறிய வெர்ஷன்களை பயன்படுத்தும் ஆண்டிராய்டு சாதனங்களில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு கோளாறுகளால் தனிநபர் தகவல்களைத் திருடி தன்னிச்சையாக arbitrary code குறியீடுகளைச் செயல்படுத்தி denial of service (DoS) கட்டமைப்பு மூலம் சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.

    CERT-In இன்கூற்றுப்படி அனைத்து OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிராய்டில் உள்ள, சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள்,கர்னல் எல்டிஎஸ், இமேஜினேஷன் டெக்னாலஜிஸ், மீடியாடெக், குவால்காம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளால் இந்த பாதுகாப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

     

    இதற்கான தீர்வாக, பயனர்கள், தங்கள் சாதனங்களில் பொருத்தமான அப்டேட்களை மேற்கொள்ள CERT-In அறிவுறுத்தியுள்ளது. CERT-In என்பது மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு பணிகளைக் கையாள்வதற்கான அமைப்பாகும்.  

    • ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம்.
    • அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி போரை விரிவுபடுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராதபோது இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை ஏவியது ஈரான்.

    இதனைத்தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருகிறது, ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில்தான், மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கும் காட்டும் நாடுகளுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், கத்தார் உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை ரகசிய சேனல்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்.
    • காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் 370-வது சட்டப் பிரிவு அமலில் இருந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத் துடன் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது.

    இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் அனுபவித்து வந்த சிறப்பு சட்ட சலுகைகள் பறிபோனது. இதற்கு காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    370-வது சட்டப்பிரிவை நீக்கியதோடு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு என்று யூனியன் பிரேதசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதை ஒடுக்குவதற்காக மத்திய அரசு தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கிடையே காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட 5-வது ஆண்டு தினமான இன்று (திங்கட்கிழமை) காஷ்மீரிலும் பஞ்சாப் மாநிலத்திலும் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படை சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

    காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் அவர்களது இந்திய ஆதர வாளர்களுடன் தொலைபேசியில் பேசியதை ஒட்டு கேட்டு உளவுப்படை இதை உறுதிப்படுத்தி உள்ளது.

    சர்வதேச உளவு அமைப்புகளும் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலுக் கான சதி திட்டம் நடந்து வருவதாக இந்தியாவை எச்சரித்துள்ளது. இதையடுத்து காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    காஷ்மீரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லையில் கண்காணிப்பும், சோதனை யும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்காத வகையில் வாகன சோதனையும் நடந்து வருகிறது.

    • Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது
    • Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது

    ஐ-போன்கள், ஐ-பாட்கள் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆப்பிள் சாதனங்களில் உள்ள பயனர்களின் முக்கிய தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது, Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது, ஆப்பிள் சாதனங்களின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எளிதில் bypass செய்து தகர்க்கப்பட வாய்ப்புள்ளது, சேவை மறுப்பு எனப்படும் Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும், பாதுகாப்பைக் தகர்க்கும் spoofing தாக்குதல் மூலமும் ஆப்பிள் சாதனங்கள் எளிதில் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஆப்பிள் மென்பொருள்களான, 17.6 and 16.7.9 க்கு முந்தைய iOS and iPadOS வெர்ஷன்கள்,13.6.8 க்கு முந்திய macOS Ventura வெர்ஷன்கள்,12.7.6 க்கு முந்திய macOS Monterey வெர்ஷன்கள், 10.6 க்கு முந்திய watchOS வெர்ஷன்கள்,17.6 க்கு முந்திய tvOS வெர்ஷன்கள், 1.3 க்கு முந்தைய visionOS வெர்ஷன்கள், 17.6 க்கு முந்தைய Safari வெர்ஷன்கள் ஆகியவை பயன்பாட்டில் இருக்கும் சாதனங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த எச்சரிக்கை குறித்து ஆப்பிள் நிறுவனத்தில் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக கடந்தவாரம்தான் ஆப்பிள் சாதனங்களில் செக்கியூரிட்டி அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது குறிபிடத்தக்கது. 

    • மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
    • பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமம்.

    சென்னை:

    சென்னையில் பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    மாநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துவதால் பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தும் இடத்தை கடந்தோ, அல்லது சாலையின் நடுப்பகுதிகளில் நிறுத்தும் நிலை உள்ளது.

    இதனால் பஸ்சின் பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை நகரின் எல்லா பகுதியிலும் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இதனால் மாநகர பஸ்கள் சரியான இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் 110 பஸ் நிறுத்தங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களை அகற்றினர். ஒவ்வொரு இடத்திலும் 6 முதல் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சென்னை போக்குவரத்து போலீசுக்கு வந்த 2000 புகார்களில் 800 புகார்கள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பானவை. அவற்றில் கணிசமான எண்ணிக்கையில் சட்ட விரோத வாகன நிறுத்தம் சம்பந்தப்பட்டது.

    பரங்கிமலை-பூந்தமல்லி சாலை போன்ற இடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் சாலை குறுகலாக உள்ளது. இந்த பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஷேர் ஆட்டோக்களில் ஆட்கள் வரும் வரை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் டிரைவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் கூறினாலும் சண்டைக்கு வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகர பஸ் டிரைவர் கூறும்போது, `பஸ் நிறுத்தங்களில் ஆட்டோவை நிறுத்துவதால் ஆட்டோ டிரைவர்களுக்கும் எங்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. பஸ் நிறுத்தங்களில் இருந்து 20 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்துகிறோம் என்றனர்.

    இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கூறுகையில், பிரச்சினைக் குரிய இடங்களை கண்ட றிந்து அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

    இதில் கோடம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், நுங்கம் பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களும் அடங்கும். விதிகளை மீறி னால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

    • அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
    • பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு,சிறு ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது.

    அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 10 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 84.20 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 344 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

    அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் உபரிநீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் அமராவதி ஆற்றங்கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    • சமையலறை பகுதியில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி இருந்ததையும் கண்டறிந்தனர்.
    • பிரபலமான ஓட்டலில் பங்குதாரராக உள்ளார்.

    திருப்பதி:

    பிரபல தெலுங்கு சினிமா நடிகர் சந்தீப் கிஷன். இவர் தமிழில் கடைசியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இவர் ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் மற்றும் செகந்தி ராபாத் ஆகிய இடங்களில் பிரபலமான ஓட்டலில் பங்குதாரராக உள்ளார்.

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீரென செகந்திரா பாத்தில் உள்ள நடிகருக்கு சொந்தமான ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 25 கிலோ காலாவதியான அரிசி இருந்தது. மேலும் பச்சை மற்றும் அரைத்த உணவுகளில் லேபிள்கள் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது.

    துருவிய தேங்காய்களில் சில இயற்கை உணவு வண்ணங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சமையலறை பகுதியில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி இருந்ததையும் கண்டறிந்தனர்.

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல் நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் செகந்தி ராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
    • கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் காசாவில் இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இஸ்ரேல் ராணுவம் எச்ரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்து இருக்கிறது.

    • ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
    • நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.

    விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சமீபத்தில் அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து  தற்காத்துக்கொள்ள போதுமான பாதுகாப்பை இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்றும் பீதியைக் கிளப்பியிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

     

    அந்த நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசுகையில்,அபோபிஸ் [Apophis] என்ற ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2036 இல் மீண்டும அது பூமியைத் தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை

     

    பூமித்த தாய்க்கு எதுவும் ஆகக்கூடாது என்றே நாம் விரும்புகிறோம். உலகத்தில் மனித குளம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம் ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. நாம் தயாராக இருக்க வேண்டும். நடக்க உள்ளதை எதிர்க்க நாம் மாற்று வழிகளை யோசித்தாக வேண்டும். பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் சில சமயங்களில் மட்டுமே கணிக்க முடிகிறது. ஆபத்துகளை கண்டறிய நாம்  இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும். விண் கற்களை குறித்த புரிதலை நாம் மேம்படுத்தியாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    • மழையால் இதுவரை 45 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • அசாமில் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

    கவுகாத்தி:

    இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் துணை நதிகளில் வெள்ளம், அபாய அளவை தாண்டி பாய்ந்தோடுகிறது.

    மேலும் 8 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கச்சார், தேமாஜி, மோரிகான், திப்ருகார், நாகோன், நல்பாரி, சிவசாகர், சோனித்பூர், தவாம்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 6 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக ஜோர்காட் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம் முழுவதும் தொடர் மழையால் இதுவரை 45 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வெள்ளத்தால் மனிதர்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப் பட்டுள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவில் கனமழை காரணமாக தேங்கிய மழை வெள்ளத்தில் தப்பிக்க விலங்குகள் அருகே உள்ள மலைக்கு இடம்பெயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் அடுத்த 2 அல்லது 3 நாட்க ளுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இதனால் அசாமில் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

    அசாமில் கனமழை தொடர்வதால் நிலைமை மோசமாக மாறி உள்ளதாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

    அருணாச்சல பிரதேசத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில் வெள்ளப்பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் என்னை அழைத்து நிலைமையை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

    பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    எனவே அவசர நிலையை சமாளிக்க ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    இதற்கிடையே இன்று டெல்லி, அரியானா, அசாம் மற்றும் குஜராத் உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    டெல்லியில் ஏற்கனவே கடந்த வாரம், 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதேபோல வடக்கு குஜராத் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளா, புதுச்சேரியில் மாகே, கடலோர கர்நாடகா, கோவா, கொங்கன், குஜராத், லட்சத்தீவு, கடலோர ஆந்திரா, மத்திய மராட்டியம், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 6-ந்தேதி வரை இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

    • பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரியின் சமீபத்திய அறிக்கை விவேகமற்றது.
    • எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் உள்ள எல்லையில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் கூறும்போது, "பயங்கரவாதத்திற்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின் கீழ், ஆப்கானிஸ்தானில் உள்ள தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழு புகலிடங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்தும்" என்றார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை கூறும்போது, `ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையை மீறும் சாத்தியம் குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரியின் சமீபத்திய அறிக்கை விவேகமற்றது.

    தண்ணீரில் சேறு பூசும் முயற்சியாகும், இது யாருக்கும் பயனளிக்காது. முக்கியமான விஷயங்களில் இதுபோன்ற உணர்ச்சிகரமான அறிக்கைகளை வெளியிடுவதை பாகிஸ்தான் தலைமை தவிர்க்க வேண்டும்.

    எங்கள் எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.
    • சென்னையில் ஒரு சில பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    தென் மேற்கு பருவ மழையானது கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.

    இந்நிலையில் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    ×