search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து வழிகாட்டி மதிப்பு"

    • சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பீட்டில் 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு நிலவழிகாட்டி மதிப்புகள் ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு 2021-ல் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டன.

    இந்த நிலையில் 2012-ல் அறிவிக்கப்பட்ட மதிப்புகளை மீண்டும் கடைபிடிப்பதாக, பதிவுத்துறை 2023-ல் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து விடுபட்ட தெருக்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பதாக கூறி, அனைத்து பகுதிகளுக்குமான நில வழிகாட்டி மதிப்புகளை 70 சதவீதம் வரை உயர்த்தும் பணிகள் துவங்கியது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

    இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட சர்வே எண்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பை 10 சதவீதம் வரை அரசு உயர்த்தி உள்ளது.

    வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் வந்ததின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதனை தற்போது சீரமைத்துள்ளது.

    இதன்படி ஆலந்தூர் சாலையில் ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு கடந்த ஜூன் மாதம் வரை ரூ.5,500 ஆக இருந்தது. நேற்று முதல் ரூ.6,100-ஆக உயர்ந்துள்ளது.

    ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரு சதுர அடி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.6,600-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அபிராமபுரம் 3-வது தெருவில் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17, 600-ஆக அதிகரித்து உள்ளது. கிட்டத்தட்ட 2.19 லட்சம் தெருக்களில் உள்ள 4.46 கோடி சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர் போன்ற நகரங்களில் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது. மற்ற ஊர்களில் அந்தளவுக்கு உயர்வு இல்லை.

    புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், 8,305 ஆவணங்கள் புதிய மதிப்பீட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை திருத்தி அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    • விதிகளை பின்பற்றி புதிதாக வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக்குழு உள்ளது. 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    அதில், ''சொத்துகளின் விலை அதிகரித்துள்ளதால், வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மதிப்பீட்டுக்குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயம் செய்ய அதிக காலஅவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய மதிப்பீடு நிர்ணயிக்கப்படும்'' என்று கூறியிருந்தது.

    இதன்படி தமிழ்நாட்டில் சொத்துகளுக்கான புதிய வழிகாட்டி மதிப்பீடு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 30-ந்தேதியன்று சுற்றறிக்கை பிறப்பித்தது. இந்த சுற்றறிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், 'இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு' (கிரெடாய்) உள்பட கட்டுமான நிறுவனங்கள் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தது.

    அதில், ''சட்ட விதிகளின்படி இதுதொடர்பாக எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தாமல், பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்காமல் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக வழிகாட்டி மதிப்பை பல மடங்கு அதிகரித்து இருப்பது சட்டவிரோதமானது. 50 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தியிருப்பது என்பது தற்காலிகமான ஏற்பாடாக தெரியவில்லை. ஆகவே இதுதொடர்பான சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை திருத்தி அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால் சட்ட விதிகளின்படி துணைக்குழுக்களை அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன்பிறகே வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க முடியும்.

    உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறும் செயல் என்பதால் அந்த சுற்றறிக்கையை ரத்து செய்கிறேன்.

    விதிகளை பின்பற்றி புதிதாக வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அதுவரை கடந்த 2017-ம் ஆண்டு வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    ×