உதவும் குணத்தால் உயர்ந்து நிற்கும் கும்ப ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்றிருக்கிறார். மேலும் 2-ம் இடத்தில் ராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்பக்கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது.
இந்த மாதம் ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை உருவாகும். எவ்வளவு தான் வரவு வந்தாலும், அதை காட்டிலும் செலவு அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லையின் காரணமாக அடிக்கடி மருத்துவச் செலவுகளும் ஏற்படும். இனம் புரியாத கவலை மேலோங்கும்.
சனி - சூரியன் பார்வை
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். இந்த பகைக் கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. மனக்குழப்பத்தை அதிகரிக்கச் செய்யும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கிய தொல்லை ஒரு புறம், அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வீண் பழிகள் மற்றொரு புறம் என்று சிக்கல்கள் உருவாகும்.
எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை கொடுத்து சோதிப்பர். வருமான பற்றாக்குறை அதிகரிக்கும். வருங்காலத்தை பற்றிய பயம் எப்போதும் இருக்கும். இது போன்ற காலங்களில் சிறப்பு வழிபாடு தேவை. குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்வதோடு, சனி பகவான் மற்றும் சூரிய பகவானையும் வழிபாடு செய்து வாருங்கள்.
சுக்ரன் நீச்சம்
ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இன்பங்கள் குறையும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகம் தேவைப்படும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு, ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். அதனால் மருத்துவச் செலவும் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். எதையும் துணிந்து செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடியும், அதனால் மனக் கலக்கமும் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்தை பற்றி சகப் பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மிதுன - செவ்வாய்
ஆவணி 10-ம் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவது, ஒரு அற்புதமான நேரமாகும். குறிப்பாக தொழில் முன்னேற்றம், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்தல், சகோதர ஒத்துழைப்பு, இழப்புகளை ஈடுசெய்ய புதிய வழி, எதிர்பாராத நல்ல திருப்பம் போன்றவை ஏற்படும் நேரமிது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவீர்கள்.
சிம்ம - புதன்
ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும். வாகன யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு வர முடியாமலும், தாய்நாட்டில் இருந்து வெளிநாடு செல்ல முடியாமலும் இருந்தவர்களுக்கு, இப்போது அந்த முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும், அதன்மூலம் உதிரி வருமானங்களும் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு ஒரு தொகை செலவழிந்த, பின்னரே அடுத்த தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமையும், மனச்சுமையும் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு தன்னம்பிக்கை தக்க பலன் தரும். மாணவ - மாணவிகளுக்கு மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முடிவு பலன் தரும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும். அவ்வப்போது வரும் ஆரோக்கிய தொல்லைகள் மனதை வாட்டும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 22, 23, 27, 28, செப்டம்பர்: 7, 8, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.