மற்றவர் நம்பிக்கைக்கு பாத்திரமான கும்ப ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஆனால் அவரை பகைக் கிரகமான செவ்வாய் பார்க்கிறார். எனவே எதையும் யோசித்து செய்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கலாம்.
வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க வழிபாடுகள் கைகொடுக்கும். இருந்தாலும் மனதில் இனம் புரியாத கவலை மேலோங்குவதை தவிர்க்க முடியாது. நண்பர்களை நம்பி எந்தக் காரியமும் செய்ய இயலாது. உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நேரம் இது.
செவ்வாய் - சுக்ரன் பார்வை
மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். சுக்ரன், கும்பத்திற்கு சென்ற பிறகும் செவ்வாயின் பார்வை அவர் மீது பதிகிறது. உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். எனவே இக்காலத்தில் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
கடமையில் இருந்த தொய்வு அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். ஊர் மாற்றம், இடமாற்றம் விரும்பத்தக்க விதம் அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் யோகம் உண்டு.
குரு வக்ரம்
உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எனவே கொடுக்கல் - வாங்கலில் பிரச்சினையும், ஏமாற்றமும் ஏற்படலாம். கொடுத்த தொகையை வாங்க முடியாமல் தவிப்பீர்கள். கொள்கை பிடிப்போடு செயல்பட இயலாது.
அதே சமயம் ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி செய்வதாக சொல்லி கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். தொடர்ந்து குரு வழிபாடும், வியாழக்கிழமை விரதமும் இருந்து வந்தால் ஓரளவு நன்மைகள் நடைபெறும்.
கும்ப - சுக்ரன்
மார்கழி 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசிக்கே வருவது யோகம்தான். இல்லத்தில் சுகமும், சந்தோஷமும் அடியெடுத்து வைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
தனுசு - புதன்
மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பாராத சில திருப்பங்கள் நடைபெறும். இடையூறுகள் அகலும். வருமானம் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் துணிந்து எடுத்த முடிவு, மற்றவர்களை ஆச்சரியப்பட செய்யும். 'வெளிநாட்டு அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?' என்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். கலைஞர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகள் அக்கறை செலுத்தினால்தான், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றலாம். விரயங்களை தவிர்க்க முடியாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 25, 26, 30, 31, ஜனவரி: 6, 7, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.