கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 கார்த்திகை மாத ராசிபலன்

Published On 2024-11-15 02:42 GMT   |   Update On 2024-11-15 02:44 GMT

சேவை செய்வதை பெருமையாகக் கருதும் கும்ப ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே பலம் பெற்று சஞ்சரிக்கிறார். அதே நேரம் செவ்வாயின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே பிரச்சினைகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் குறையலாம். உடன்பிறப்புகளின் வழியில் செலவு அதிகரிக்கும். எதிர் காலத்தை பற்றிய பயம் அகல, இறை வழிபாடே கைகொடுக்கும்.

குரு வக்ரம்

ரிஷப ராசியில் உள்ள குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. கொடுக்கல் - வாங்கல்களில் பிரச்சினைகள் உருவாகலாம்.

'கொடுத்த தொகையை வாங்க முடியவில்லையே, வாங்கிய தொகையை கொடுக்க முடியவில்லையே' என்ற கவலை மேலோங்கும். பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். அருளாளர்களின் ஆசியும், அனுபவஸ்தர்களின் அறிவுரையும் கைகொடுக்கும் நேரம் இது.

சனி - செவ்வாய் பார்வை

கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசியில் உள்ள சனியை, பகைக் கிரகமான செவ்வாய் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி குறையும். மனக்கவலை அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியில் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

தொழிலில் பங்கு தாரர்கள் விலகுவதாக சொல்லி அச்சுறுத்துவர். நரம்பு -எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களால் கவலை அதிகரிக்கும். இது போன்ற நேரங்களில் திசா புத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.

மகர - சுக்ரன்

கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்திற்கு வரும் சுக்ரனால், விலை உயர்ந்த பொருட்களை விற்க வேண்டிய சூழல் உருவாகும். குறிப்பாக தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட வாங்கிய சொத்துக்களை விற்க வேண்டியதிருக்கும்.

பெண் வழி பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் எளிதில் கிடைத்தாலும், அவை திருப்தி தருவதாக அமையாது. பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. பொருளாதாரத்தை பொறுத்தவரை ஒரு தொகை செலவழிந்த பின்னரே, அடுத்த தொகை வந்துசேரும்.

செவ்வாய் வக்ரம்

கடக ராசியில் உள்ள செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் பங்குதாரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். உடன் பிறப்புகளின் பகை அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் இழுபறி நிலையில் இருக்கும். பஞ்சாயத்துக்கள் நீடிக்கும்.

பழைய வழக்குகள் முடிவுற்றாலும் புதிய வழக்குகள் தொடரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து கொள்வது நல்லது.

கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. மாணவ, மாணவியர்கள் பெற்றோர்களின் ஆசிரியர் களின் ஆலோசனை படி நடப்பது நல்லது. பெண்களுக்கு எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. குடும்பச் சுமை கூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 16, 17, 28, 29, டிசம்பர்: 3, 4, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.

Similar News