வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். குரு பகவான் 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கிய தொல்லைகளும், தேவை இல்லாத விரயங்களும் அதிகரிக்கும். எதையும் உறுதியாக செய்ய இயலாது. சில பணிகளை பாதியிலேயே விட்டுவிடும் சூழ்நிலை உருவாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். எதையும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளை கேட்டுச் செய்வது நல்லது.
ரிஷப - சுக்ரன்
வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரத்தில், சுகங்களும் சந்தோஷங்களும் வந்துசேரும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறு பாடுகள் அகலும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.
ரிஷப - புதன்
வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத் தக்கதாக இருக்கும். அவர்களின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கருத்து வேறுபாடுகள் அகலும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மனக்கவலை மாற மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர்மட்ட அதிகாரிகளின் பழக்கத்தால் நல்ல சந்தர்ப்பங்கள் நாடி வரும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, சொந்தத் தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வர்.
மேஷ - செவ்வாய்
வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் பலம்பெறும் நேரத்தில், சகோதர ஒற்றுமை பலப்படும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரி வினைகள் சுமுகமாக முடியும். பாடுபட்டதுக்கேற்ற பலன் கிடைக்கும் நேரம் இது.
மிதுன - புதன்
வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு அற்புதமான நேரமாகும். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். திடீர் வரவுகள் உண்டு. பாகப் பிரிவினைகள் மூலம் வந்த பூர்வீக இடத்தை விற்று விட்டு, அதில் வரும் தொகையைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு.
மிதுன - சுக்ரன்
வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். இக்காலம் மிகுந்த யோக காலமாகும். பெற்றோர் வழியில் தொழிலுக்கான ஆதரவு கிடைக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சி கை கூடும். திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். 'வாங்கிய இடத்தையும், வீட்டையும் விற்றுவிட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி அடையும் விதத்தில் பூமி யோகம் வாய்க்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, புதிய பாதை புலப்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு இதுவரை இருந்து வந்த நிதி நெருக்கடி அகலும். மாணவ - மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் அறிவுரை நல்வழி காட்டும். பெண்களுக்கு உறவினர்களுடன் இருந்த பிரச்சினை அகலும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 21, 22, 26, 27, 31, ஜூன்: 1, 2, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.