மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்யும் கும்ப ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு பகைக் கிரகமான செவ்வாயும், 4, 9-க்கு அதிபதியான சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் தொழிலில் ஏற்றமும், இறக்கமும் வந்து கொண்டே இருக்கும். அஷ்டமத்து கேதுவால் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.
செவ்வாய் - சனி சேர்க்கை
மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்குள்ள சனியோடு மாதம் முழுவதும் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கையின் விளைவாக மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் குறையும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உடன்பிறப்புகள் கூட பகையாக மாறுவர். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் சலுகைகள் கிடைக்காது. உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைப்பதும் அரிதுதான். வரவிற்கு மிஞ்சிய செலவு இருக்கும். வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதாவதும், அதனால் விரயங்களும் ஏற்படும். தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லாமல் இருக்க சனி பகவான் வழிபாடும், அங்காரக வழிபாடும் அவசியம் தேவை.
புதன் வக்ரம்
மீனத்தில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரமும் அடைகிறார். இதன்விளைவாக பிள்ளைகள் வழியில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் கல்யாணம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் தடை, தாமதங்கள் உருவாகும். `படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வில்லையே' என்று ஆதங்கப்படுவீர்கள். அதே நேரம் அஷ்டமாதிபதியாகவும் புதன் விளங்குவதால், அவர் வக்ரம்பெறுவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத சில நல்ல வாய்ப்புகள் வரலாம். குறிப்பாக புதிய நண்பர் களின் அறிமுகம் கிடைத்து சாதித்துக் கொள்வீர்கள். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் பணிபுரிய வாய்ப்புகள் கைகூடி வரும்.
மீனம் - சுக்ரன்
பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன்னுடைய உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது நன்மைதான். இதனால் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து உள்ளத்தை மகிழ்விக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அசையாச் சொத்துகள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட பதவி உயர்வு தானாக கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவி களுக்கு கல்வி வளர்ச்சி திருப்தி தரும். மாதத்தின் முற்பாதியை காட்டிலும் பிற்பாதியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபச்செலவுகள் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 16, 18, 27, 28, ஏப்ரல்: 1, 2, 8, 9, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.