ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 மார்கழி மாத ராசிபலன்

Published On 2024-12-15 08:13 IST   |   Update On 2024-12-15 08:14:00 IST

முடியாத காரியத்தைக் கூட முடித்துக் காட்டும் ரிஷப ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிநாதனுக்கு பகைக்கிரகமான குரு பகவான் வக்ரம் பெற்று இருப்பதால், நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். வருமானம் உயரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவிசெய்வர். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் அதிகரிக்கும். சென்ற மாதத்தில் செயல்பட்டு பாதியில் நின்ற பணிகள், இப்பொழுது முடிவடைந்து ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் - சுக்ரன் பார்வை

மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். கும்ப ராசிக்கு சுக்ரன் சென்ற பிறகும் கூட, சப்தம- விரயாதிபதியான செவ்வாய் தொடர்ந்து பார்க்கிறார். எனவே இந்த மாதம் முழுவதும் செவ்வாய் - சுக்ரன் பார்வை இருக்கிறது. இதன் விளைவாக என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று ஆதாயம் கிடைக்கும்.

இடம் வாங்கும் யோகம், வீடு கட்டும் யோகம் உண்டு. அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். பெற்றோரின் உடல்நிலை சீராக வழிபிறக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் வலிமை ஏற்படும் நேரம் இது.

குரு வக்ரம்

உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவதால் சில நல்ல காரியங்கள் நடைபெறலாம். குறிப்பாக வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்துகொள்வீர்கள். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் இருப்பவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, உத்தியோகம் சம்பந்தமாகவோ முயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி வந்துசேரும்.

கும்ப-சுக்ரன்

மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிப்பதால், வியாபாரத்தில் கணிசமான லாபம் கைக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். உத்தியோகத்தில் உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.

தனுசு-புதன்

மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத - ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். இது ஒரு நல்லநேரம்தான். தொட்டது துலங்கும். தொழில் வெற்றிநடை போடும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொண்டு, புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். மொத்தத்தில் மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும் நேரமிது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு கல்யாணக் கனவு நனவாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 20, 21, 22, ஜனவரி: 1, 2, 3, 6, 7, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News