ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

மார்கழி மாத ராசிபலன்

Published On 2023-12-15 04:20 GMT   |   Update On 2023-12-15 04:23 GMT

உதவி செய்வதன் மூலம் நற்பெயர் பெறும் ரிஷப ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் தன வரவு வந்து மகிழ்ச்சி தரும். தொழில் ஸ்தானத்திற்கு வரும் சனி பகவானால் தொழில் வளம் சிறப்பாக அமையப் போகின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வு பெற்ற பின்னும் கூட பணி நீடிப்பு உண்டு.

கும்ப ராசியில் சனி

தொடர்ந்து மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சியால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். இதுவரை உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று மனம் வாடியவர்களுக்கு இப்பொது மிதமிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். உத்தியோக உயர்வும், சம்பள உயர்வும் தானாக வந்து சேரும். பெற்றோர் உடல் நலனில் மட்டும் கவனம் தேவை. சனி வழிபாட்டின் மூலம் மேலும் நற்பலன்களை இக்காலத்தில் வரவழைத்துக் கொள்ள இயலும்.

விருச்சிக-சுக்ரன்

மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது சகல துறைகளிலும் வெற்றி கிடைக்கும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். உத்தியோக மாற்றம் உருவாகலாம். பங்குச் சந்தையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். ஊர் மாற்றம், இட மாற்றம் பற்றி எடுத்த முடிவு பலன் தரும்.

தனுசு-செவ்வாய்

மார்கழி 11-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி யாகிச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 12-க்கு அதிபதி அஷ்டமத்தில் வரும் இந்த நேரம் திடீர் திருப்பங்கள் பலவும் சந்திப்பீர்கள். விபரீத ராஜயோக அடிப்படையில் இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிய இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். பிள்ளைகளின் கல்யாண வைபவத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு-புதன்

மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது தன லாபம் கிடைக்கும். அலைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகளில் பணிபுரியும் நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் வெகு விரைவில் முன்னேற்றம் காண்பர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் பெற்று மகிழ்ச்சி காண்பர்.

கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். மாணவ-மாணவியர்களுக்கு எதிர்காலத்தில் அமையும் கல்வியைப் பற்றிய எண்ணம் மேலோங்கும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். தம்பதியர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 17, 18, 20, 21, 27, 28, 31,

ஜனவரி: 1, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News