நட்பிற்கு இலக்கணமாகத் திகழும் ரிஷப ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடும், சுகாதிபதி சூரியனோடும் இணைந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே 'புத ஆதித்ய யோக'மும், 'புத சுக்ர யோக'மும் செயல்படும் நேரம் இது. இந்த நேரத்தில் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். செல்வம் சேர்க்கத் தேர்ந்தெடுத்த வழியில் வெற்றி கிடைக்கும். ஜென்ம ராசியில் குரு இருப்பதும் யோகம்தான். அந்த குருவின் பார்வை பலத்தால், வழக்குகள் சாதகமாக முடியும். திருமணத் தடை அகன்று, விரைவில் திருமணம் நடந்தேறும்.
சனி வக்ரம்
உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் ஆனி 5-ந் தேதி கும்ப ராசியில் வக்ரம் பெறுகிறார். தர்ம - கர்மாதிபதியான சனி வக்ரம்பெறும் இந்த நேரத்தில், சில தடைகளும், தாமதங்களும் உங்களை சிரமப்படுத்தும். அதே நேரம் உங்களுடைய முன்னேற்றப் பாதையில் ஏற்படும் சறுக்கல்களை சமாளிக்கும் ஆற்றலையும் நீங்கள் பெறுவீர்கள்.
பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை இருக்காது என்றாலும், வரவை விட செலவு அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் உடனடியாகச் செய்து முடிக்க இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு, உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். சகப் பணியாளர்களிடம் உங்களின் முன்னேற்றம் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டாம். இடமாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
கடக - புதன்
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த புதன், ஆனி 12-ந் தேதி சகாய ஸ்தானத்திற்கு செல்லவிருக்கிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். வருமானம் வந்த வண்ணம் இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும். 'நேர்முகத் தேர்விற்கு பலமுறை சென்றும் இதுவரை வெற்றி கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்போது வெற்றிச் செய்தி வீடு தேடி வரும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும்.
கடக - சுக்ரன்
ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் சுக்ரன். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வாழ்க்கைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்புகள் இப்போது கிடைக்கலாம். அண்ணன் - தம்பிகள் அல்லது சகோதரிகள் குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து சென்றவர்கள், இப்போது மனம் மாறி மீண்டும் வந்து சேருவார்கள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். 'தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
ரிஷப - செவ்வாய்
ஆனி 27-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். விரயாதிபதியான செவ்வாய் உங்கள் ராசிக்கு வருவதால், விரயங்கள் அதிகரிக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட வகையில், நீங்கள் நடத்திய வழக்குகள் சாதகமாக முடியும். பணி உயர்வின் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இடமாற்றம் வரலாம். குடும்ப பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெண்களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்: 25, 26, 29 ,30, ஜூலை: 4, 5, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.