கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ரிஷப ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஆனால் அவர் பரிவர்த்தனை யோகம் பெற்ற கிரகமான சூரியனோடு இணைந்து, நீச்சபங்கம் அடைவதால் நல்ல பலன்கொடுப்பார். என்றாலும் இந்த காலகட்டத்தில் மனக் குழப்பம் அதிகரிக்கும்.
எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இனம்புரியாத கவலை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சகப் பணியாளர்களால் தொல்லை வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும் என்பதால், பொறுமை அவசியம் தேவை.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம்பெறும் இந்த நேரத்தில் வீண் பிரச்சினைகள் வீடு தேடி வரும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். கடன் சுமை குறைவதை எண்ணி மகிழ்வதற்குள், புதிய கடன் வந்து மன வருத்தம் தரலாம்.
உங்கள் முன்னேற்றத்தை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பாகப்பிரிவினையில் இழுபறி நிலை தொடரும். தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் சனி பகவான் வழிபாடு சஞ்சலங்களைத் தீர்க்கும்.
புதன் உச்சம்
புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தனம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உச்சம் பெறுவது யோகமான நேரம்தான். வருமானம் குவியும். வளர்ச்சி கூடும்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாபத்தைத் தேடித் தரும், புதிய தொழில் ஒன்றைத் தொடங்க முன்வருவீர்கள். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் கிடைக்கக்கூடும்.
துலாம் - சுக்ரன்
புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், இப்பொழுது தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
தொழில் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுப்பர். வீடு வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். பயணங்கள் பலன்தரும்.
துலாம் - புதன்
புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிநாதன், தனாதி பதியோடு இணையும் இந்த நேரம் உங்களுக்கு யோகமான நேரம் ஆகும். பொருளாதாரம் உச்சநிலையை அடையும்.
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். கேட்ட சலுகைகளும் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அதுமட்டுமின்றி விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேமிக்க முற்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நல்ல காரியம் நடைபெறும்.
வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, தலைமைப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு எதிர்பார்த்த இலக்கை அடையும் வாய்ப்பு உண்டு. பெண் களுக்கு உறவினர்களால் நன்மை ஏற்படும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பர்: 18, 19, 24, 30, அக்டோபர்: 1, 11, 12, 15, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.