எதையும் யோசித்துச் செய்யும் ரிஷப ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம - விரயாதிபதியான செவ்வாயோடு இணைந்து 9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே குடும்பச் சுமை கூடும். குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவருக்கு அதிகமாக செலவிடும் சூழல் ஏற்படும். ஒரு சிலர் வாங்கிய இடத்தை விற்பனை செய்வார்கள். அதே நேரம் உடன்பிறப்புகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும். சொத்துக்கள் வாங்கும் யோகமும், சொந்தங்கள் வழியே வந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியும் கைகூடும்.
கும்பம் - புதன்
மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தன ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகமான நேரம்தான். தொழில் வளர்ச்சி, கூடுதல் லாபம், தொல்லை தந்த எதிரிகள் விலகுதல் போன்றவை நடைபெற்று மகிழ்ச்சியளிக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒருசில நல்ல காரியங்கள் இப்பொழுது நடைபெறும். 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுவதால் சமூகத்தில் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.
மகரம் - சுக்ரன்
உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். இந்த மாதத்தின் முதல் நாள் அவர் மகர ராசிக்குச் செல்கிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு செல்லும் சுக்ரனால், இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். மங்கல ஓசை மனையில் கேட்கும். தடைகள் விலகும். சுக்ர - செவ்வாய் சேர்க்கையால் 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே உடன்பிறப்புகளின் வழியே ஒரு நல்ல சம்பவம் நடைபெறும். ஊர் மாற்றம், இட மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். 'தொழிலுக்காக கூடுதல் முதலீடு செய்யப் பணம் இல்லையே' என்ற கவலை மாறும்.
மீனம் - புதன்
மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். தன - பஞ்சமாதிபதி நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். குடும்பத்தில் கடன் பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். வெளிநாட்டிலோ, வெளி மாநிலங்களிலோ வசிக்கும் உங்கள் பிள்ளைகளை, எப்போதும் கண்காணிப்பிலேயே வைத்திருங்கள். இதுபோன்ற காலங்களில் சுய ஜாதக அடிப்படையில் வழிபாடுகள் செய்தால் நன்மை கிடைக்கும்.
கும்பம் - சுக்ரன்
மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். நன்மை, தீமைகளைப் பற்றி கவலைப்படாமல் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்து அனுகூலம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு போதுமான பொருளாதாரம் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புகழ் கூடும். மாணவ -மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு மனதில் உற்சாகமும், தன்னம்பிக்கையும் கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 24, 25,
மார்ச்: 8, 9, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.