ரிஷபம்
எதையும் ஓரிரு முறை யோசித்து செய்யும் ரிஷப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சனியும் இணைந்திருக்கிறார். எனவே தொட்டது துலங்கும். தொழில் வளம் மேலோங்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய மகிழ்ச்சி தகவல் கிடைக்கும். நிரந்தர வருமானம் அமைய வழியமைத்துக் கொடுக்கும் மாதம் இது. உங்கள் ராசியில் குரு வக்ரம் பெற்றிருப்பதால் படிப்படியாக நன்மைகள் நடைபெறும்.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும்போது தன விரயங்கள் ஏற்படும். எனவே வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற செலவுகளை மேற்கொண்டால், வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம். உத்தியோகத்தில் ஊர் மாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். பயணங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு புதன் வருவது, பொன்னான நேரமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கலில் இருந்த பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு ஊதிய உயர்வும், கேட்ட சலுகைகளும் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் எடுத்த முயற்சி வெற்றியாகும். பாகப்பிரிவினை இனிதாக முடியும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியான புதன், தை 23-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் தொழில் ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்டது துலங்கும். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். நெடுநாட்களாக நடைபெறாமல் இருந்த ஒருசில காரியங்கள் இப்பொழுது நடைபெறத் தொடங்கும். வாடகைக் கட்டிடத்தில் நடக்கும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு, தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். நவக்கிரகத்தில் சுபக்கிரகமாக விளங்குபவர், குரு. அவர் உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகம் என்பதால், அவர் வக்ர நிவர்த்தியாவது அவ்வளவு நல்லதல்ல. இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, புதிய வாய்ப்புகள் வந்தாலும், அதை உபயோகப் படுத்த இயலாது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைகூடிவரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானாக தேடி வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகள், தங்களின் மதிப்பெண் உயர்வதற்காக எடுத்த முயற்சி வெற்றிபெறும். பெண்களால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல் சரளமாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 14, 17, 18, 30, 31, பிப்ரவரி: 2, 3, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.