ஏ.ஆர் முருகதாசின் பெரிய பட்ஜெட் படம்
- ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
- சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஏ.ஆர். முருகதாஸ் ஒருவராக இருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் உதவி இயக்குநராக ஆரம்ப காலத்தில் பணி புரிந்தார். பிறகு 2000 ஆம் ஆண்டில் அஜித் நடித்து வெளியான தீனா என்ற படத்தை இயக்கினார்.
2005 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கினார். இந்த படம் சூர்யாக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கஜினி படம் ஹிட்டானதை அடுத்து 2008 ஆம் ஆண்டு அவரின் திரையுலக பயணத்தை பாலிவுட் பக்கம் திருப்பினார்.
இவர் இயக்கிய கஜினி படத்தை அமீர்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். இந்தியிலும் மிக முக்கியமான படமாக இது பேசப்பட்டது. வசூலில் உச்சமடித்தது இந்தி கஜினி. மேலும் வசூலில் ரூ. 100 கோடி தாண்டிய முதல் இந்தி படம் இதுவே.
2011 ஆம் ஆண்டு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 7ஆம் அறிவு படத்தை அவர் இயக்கினார். 2012 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கினார். நடிகர் விஜய்-க்கு கம்பேக் கொடுத்த படங்களில் துப்பாக்கி முதன்மை இடம் பிடித்தது.
தமிழ் சினிமாவின் அதிக வசூல் பட்டியலில் துப்பாக்கி இடம் பிடித்தது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சர்கார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார்.
இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.இது சிவகார்த்திகேயனின் 23-வது படம் ஆகும். இந்த படம் தொடர்பான தவவல்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் மற்றொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். இவர் இயக்க போகும் இந்தி படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் பட்ஜெட் 400 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சஜித் நதியத்வாலா இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் சல்மான் கான் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.